Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

நாகை:`அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்தன!’ - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

நாகையில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த குறுவை நெற்பயிர்கள், தொடர் மழையால் நிலத்தில் சாய்ந்து நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் ஏற்படும் பெரும் நஷ்டத்தைத் தாங்க முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நெற்கதிர்கள்

இந்தாண்டு மேட்டூர் அணை ஜூன் 12 -ம் தேதியே திறக்கப்பட்டு காவிரியில் கரைபுரண்டு வந்த நீர் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பேருதவியாக இருந்தது. அதற்கு முன்பே போர்வெல் மூலம் குறுவைப் பருவ சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் கோடைமழைப் பொழிந்து பயிர்கள் செழித்து வளர கைகொடுத்தது. தற்போது அறுவடை காலம்.

இந்த நேரத்தில் கடந்த இரண்டு நாள்களாக நள்ளிரவில் தொடங்கும் பலத்த மழை இடி, மின்னல், காற்றுடன் விடிய விடிய பொழிந்தது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள் வயலில் தேங்கியுள்ள நீரை வடிய வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்வதால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுமென விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி விவசாயி கபிலனிடம் பேசினோம். "முற்றிய கதிர்கள் சாய்ந்தாலும் அதனை அறுவடை செய்ய எந்திர செலவு மட்டும் இருமடங்காகும். அதைக்கூட சமாளித்துவிடலாம். ஆனால், நான் சாகுபடி செய்துள்ள வயலில் இளம் கதிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. என்னைப்போல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கபிலன்

இதனை அறுவடை செய்யும்போது இரண்டு மடங்கு கூடுதல் செலவாகும். கதிர்கள் பதராகும். மகசூல் மூன்றில் ஒரு மடங்கு கிடைப்பதே கடினம். நல்ல விலைக்குப் போகும் வைக்கோல் அழுகி வீணாகும். இதனால் நாங்கள் சாகுபடி செய்த முதலீட்டு பணத்தையே எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதிலிருந்து எப்படி மீள்வது என்றே தெரியவில்லை" என்றார் வேதனையுடன்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/paddy-ready-for-harvest-fell-on-the-ground-farmers-suffer-because-of-continuous-rainfall

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக