Ad

புதன், 29 ஜூலை, 2020

தஞ்சாவூர்: `எம்.எல்.ஏ மகனுக்கு பதவி!’ - அதிருப்தியில் பேராவூரணி அ.தி.மு.க நிர்வாகிகள்

அ.தி.மு.க-வில் பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளராக அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கட்சியின் சீனியர்கள் அதிருப்தியடைந்திருப்பதுடன் எம்.எல்.ஏ வாரிசு அரசியல் செய்வதாகவும் புலம்பி வருவதாகக் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ மகன் கோவி.இளங்கோ

அ.தி.மு.க-வில் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு ஒன்றியத்தையும் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பேராவூரணி ஒன்றியத்தில் தெற்கு ஒன்றியச் செயலாளராக பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ கோவிந்தராசு மகன் கோ.வி.இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதுடன், கோவிந்தராசு குடும்ப அரசியல் செய்வதாகவும் புலம்பி வருகின்றனர்.

வைத்திலிங்கம்

இது குறித்து பேராவூரணி அ.தி.மு.க தரப்பில் பேசினோம், அ.தி.மு.க கட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து ஒன்றியங்களையும் இரண்டாகப் பிரித்து ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டன.அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் பிரிக்கப்பட்ட ஒன்றியங்களுக்கு ஒன்றியச் செயலாளர்களை நியமித்தார்.

அதன்படி பேராவூரணி தெற்கு ஒன்றியத்திற்கு எம்.எல்.எ கோவிந்தராசுவின் மகன் இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்காக பலர் உழைத்த நிலையில், இந்தப் பதவியை சீனியர்கள் பலர் கேட்ட நிலையிலும் கோவிந்தராசு வைத்திலிங்கத்திடம் யாருக்கு என்ன பதவி வேண்டுமானாலும் கொடுங்க என் மகனை தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு நியமித்து விடுங்க என கேட்டு தன் மகனுக்கு பதவியைப் பெற்றுள்ளார்.

பேராவூரணி

இளங்கோ சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்தவர் தன் அப்பாவிற்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்த பிறகுதான் ஊருக்கு வந்தார். அதற்கு முன் அவர் எந்த ஒரு சின்ன கட்சி பணிகளிலும் ஈடுபட்டதில்லை. இந்நிலையில் ஒன்றியச் செயலாளராக இளங்கோ நியமிக்கப்பட்டிருப்பது கட்சியினர் பலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

கோவிந்தராசு தரப்பில் பேசினோம், `யூனியன் சேர்மனாக இருக்கும் சசிகலா ரவிசங்கர் ஏற்கெனவே அந்த பதவிக்கு தன்னுடைய உறவினரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி யடைந்தவர். தற்போது ஜெயித்ததன் அடிப்படையில் அவர் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர எம்.எல்.ஏவின் உறவினர் என்பதற்காக இல்லை.

பேராவூரணி ஒன்றிய பெருந்தலைவராக இருப்பவர் சசிகலா ரவிசங்கர் இவர் எம்.எல்.ஏ கோவிந்தராசுவின் நெருங்கிய உறவினர். தன்னுடைய உறவினரை யூனியன் சேர்மனாக கொண்டு வந்ததுடன், தற்போது தன் மகனையும் ஒன்றிய செயலாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்துவிட்டார். இப்படி கோவிந்தராசு குடும்ப அரசியல் செய்வதன் மூலம் பேராவூரணி தொகுதியில் அ.தி.மு.க பின்னடவை சந்திக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் இவை எதிரொலிக்கும் எனத் தெரிவித்தனர்.

கோவிந்தராசுவின் மகன் ரூ. 4 லட்சம் சம்பளத்தில் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். தன் தந்தைக்கு சீட் கிடைத்த பிறகு அந்த வேலையை உதறிவிட்டு தேர்தல் பணியாற்ற வந்தார். அப்போது அவர் பம்பரமாக சுற்றி வந்து கட்சிப் பணிகளை செய்ததுடன், வெற்றிக்காகவும் உழைத்தார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராசு

இளங்கோவின் பணியைப் பார்த்து வியப்படைந்த வைத்திலிங்கம் உனக்கு கட்சியில் நல்ல எதிர்காலம் இருக்குப்பா என அப்போதே பாராட்டினார். அதன் பிறகு தொடர்ச்சியாக கட்சி பணிகளில் செயல்பட்டு வந்தவருக்கு தலைமை ஒன்றியச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளதே தவிர எம்.எல்.ஏ-வின் மகன் என்பதற்காக இல்லை” என்றனர்.

இது குறித்து கோவி.இளங்கோவிடம் பேசினோம், ``மாணவரணி செயலாலர் உட்பட பல பதவிகளை வகித்திருக்கிறேன். பேராவூரணியில் ஒரு கூட்டம் நடந்தால் கட்சிக் கொடி கட்டுவதில் தொடங்கி போஸ்டர் ஒட்டுவது வரை அனைத்து வேலைகளையும் செய்து வருகிறேன். இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் பலரை கட்சியில் சேர்த்திருக்கிறேன். கட்சி தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்கிறேன். இதனை கவனித்து வந்த வைத்திலிங்கம் என்னை இந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறார்.

அதிமுக தலைமை அலுவலகம்

வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பதற்கு அ.தி.மு.க ஒன்றும் சாதரண கட்சி இல்லை. தலைமை ஒவ்வொன்றையும் ஆராய்ந்தே ஒவ்வொருவருக்கும் பதவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. அதன்படி மாவட்டச் செயலாளர் வைத்திலிங்கம் மற்றும் கட்சி தலைமை உத்தரவிடும் பணிகளை இன்னும் சிறப்பாக செய்வேன். தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு யாருமே போட்டியிடவில்லை. அப்படியிருக்கையில் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர் என்று காழ்ப்புணர்ச்சியில் யாரோ சிலர் தவறான தகவலை கிளப்பிவிடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/peravurani-admk-mla-son-got-new-post-party-cadres-upset

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக