Ad

புதன், 29 ஜூலை, 2020

#ENGVsWI: உங்களின் வெற்றிக்காக காத்திருக்கிறோம் கரீபியன்ஸ்! #Review

முதல் இரண்டு போட்டியும் 1-1 என சமநிலையில் முடிய, முடிவை தீர்மானிக்கப்போகும் மூன்றாவது போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காயம் காரணமாக ஸ்டோக்ஸ் பந்துவீச முடியாததால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியது இங்கிலாந்து. அல்சாரி ஜோசப்பை நீக்கிவிட்டு ஸ்பின்னரான கார்ன்வாலை ப்ளேயிங் லெவனில் சேர்த்துக்கொண்டது விண்டீஸ். இதே மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அடித்த பெரிய ஸ்கோர்தான் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. அந்த போட்டியில் ஸ்டோக்ஸூம் சிப்லேயும் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியிருப்பார்கள். இந்த போட்டியில் சிப்லே ஸ்டோக்ஸ் இருவரையுமே பெரிதாக ரன் எடுக்கவிடாமல் வெளியேற்றினார் ரோச். முதல் ஓவரிலேயே ரோச் வீசிய 5-வது பந்தில் சிப்லே எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். அடுத்ததாக தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பாலாக வீசி செட் செய்து திடீரென ஸ்டம்ப் லைனில் ஒரு பந்தை வீசி ஸ்டோக்ஸ் விக்கெட்டையும் எடுத்துக்கொடுத்தார். கேப்டன் ரூட் அவசரப்பட்டு ரன் அவுட் ஆக பர்ன்ஸ், பட்லர், போப் இந்த மூவர் கூட்டணியின் அரைசதம் இங்கிலாந்தை ஓரளவுக்கு காப்பாற்றியது. பட்லர்-போப் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் சிறப்பாக இருந்தது. பட்லர் வழக்கத்துக்கு மாறாக ஆரம்பத்தில் ரொம்பவே நிதானமாக ஆடினார். இந்த போட்டியிலும் சொதப்பிவிட்டால் இனிமேல் தனது டெஸ்ட் கரியரே கேள்விக்குள்ளாகிவிடும் என்பதை உணர்ந்து ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடினார். கடைசியில் ஸ்டூவர்ட் பிராட் ஆடிய அந்த அதிரடி ஆட்டம்தான் மேட்ச்சை மொத்தமாக இங்கிலாந்து பக்கமாக சாய்த்துவிட்டது. 300 ரன்னுக்குள் இங்கிலாந்து சுருண்டுவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பிராடின் அரைசதம் ஸ்கோரை 369 ஆக உயர்த்திவிட்டது.

300 ரன்களுக்கு மேல் கொடுத்ததிலேயே விண்டீஸ்கள் செம அப்செட். ஸ்டம்ப்லைனை குறிவைத்து பிராட் வீசிய பந்துகளில் கரீபியன்களின் பேட்டிங் லைன் அப் மொத்தமாக சிதைந்துவிட்டது. பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பதிலும் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதிலும் விண்டீஸ்கள் தொடர்ந்து சொதப்பியே வருகின்றனர்.

முக்கிய பேட்ஸ்மேன்களான பிராத்வெயிட், புரூக்ஸ், பிளாக்வுட் ஆகியோரிடமிருந்து ஒரு அரைசதம் கூட வரவில்லை. 197 ரன்னுக்கு விண்டீஸ்கள் ஆல் அவுட் ஆக 172 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது இங்கிலாந்து. இன்னும் 2 நாள் 2 செஷன் முழுமையாக இருந்த நிலையில் சீக்கிரமே அதிரடியாக ஆடி பெரிய டார்கெட் செட் செய்து விண்டீஸ்களை நான்காவது நாளிலேயே அவுட் ஆக்கி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதே இங்கிலாந்தின் இலக்கு. ப்ளான் செய்ததை போன்றே பர்ன்ஸ், சிப்லே, ரூட் மூவரும் அரைசதம் போட 399 ரன்னை டார்கெட்டாக கொடுத்தது.

West Indies Cricket Team

நான்காவது நாள் முழுவதும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டுவிட விண்டீஸ்கள் போட்டியை டிரா செய்து தொடரையும் டிரா செய்ய ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. இருந்தும் முதல் இன்னிங்ஸ் அளவுக்குக்கூட தாக்குப்பிடிக்காத வெஸ்ட் இண்டீஸ் இந்த முறை 129 ரன்னிலேயே சுருண்டது. வோக்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். 4 விக்கெட் வீழ்த்திய பிராட் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். கடைசி இரண்டு போட்டிகளிலுமே இங்கிலாந்து வெற்றி பெற பிராட் முக்கிய காரணமாக இருந்தார். இரண்டாவது டெஸ்ட்டில் தொடர்ந்து மூன்று ஓவர்களில் பிராட் வீழ்த்திய அந்த மூன்று விக்கெட்டுகளாட்டும், இந்த போட்டியில் அதிரடி பேட்டிங் மற்றும் அவர் எடுத்த 10 விக்கெட் ஆகட்டும்... பிராடின் இந்த பர்ஃபாமன்ஸ்கள்தான் விண்டீஸ்களிடமிருந்த மேட்ச்சை மொத்தமாக இங்கிலாந்து பக்கம் திருப்பியவை.

Also Read: #Broad500: சிக்ஸர்களால் மிரட்டப்பட்டவன்... பீஸுபீஸாக கிழிக்கப்பட்டவன்... 500 விக்கெட்டுகள் எப்படி?

#BlackLivesMatter-க்கு பிறகு நடைபெற்ற போட்டி என்பதாலும் முதல் போட்டியில் வெற்றியை பெற்றிருந்ததாலும் விண்டீஸ்களுக்கு ஒரு நல்ல வின்னிங் மொமன்ட்டம் கிடைத்திருந்தது. அதை அப்படியே அடுத்தடுத்த போட்டிகளில் தக்கவைத்துக்கொள்ள விண்டீஸ்கள் தவறிவிட்டனர். தொடரை இழந்திருந்தாலும் ஒரு நல்ல டெஸ்ட் அணியாக மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தென்பட தொடங்கியிருக்கிறது.

கரீபியன்கள் மீண்டு(ம்) வந்து கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்த வேண்டும்!



source https://sports.vikatan.com/cricket/west-indies-tour-of-england-2020-how-england-won-the-series-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக