Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

`ஜெ. விருது வழங்கும் படம்; கழட்டி வீசிய அமைச்சரின் ஆதரவாளர்கள்?’ - மன்னார்குடியில் பரபரப்பு

மன்னார்குடி நகராட்சி அலுவலக முகப்பில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜெயலலிதாவிடம் விருது வாங்கும் போட்டோ ஒன்று மாட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் கழட்டி வீசியதாகக் கூறப்படும் சம்பவம் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ஆர்.காமராஜுடன் கோபி , ஆர்.ஜி.குமார்

மன்னார்குடி நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுதா அன்புச்செல்வன். இவர் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது 2015-ம் ஆண்டு தமிழகத்திலேயே இரண்டாவது சிறந்த நகராட்சியாக மன்னார்குடி நகராட்சியை ஜெயலலிதா அறிவித்ததுடன் அதற்கான பாராட்டுச் சான்றிதழையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போது வாங்கினார்.

ஜெயலலிதாவிடம் பாராட்டுச் சான்று மற்றும் விருது வாங்கும் அந்த போட்டோவை சுதா பிரேம் செய்து நகராட்சி அலுவலகத்தின் முகப்பில் மாட்டியிருந்தார். கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக அந்த போட்டோ அதே இடத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் அக்கா மகன் ஆர்.ஜி.குமாரின் ஆதரவாளர்கள் சிலர் அந்த போட்டவை கழட்டி வீசி உடைக்க முயன்றதாகத் தெரிகிறது. ஜெயலலிதா இருக்கும் போட்டோவை அ.தி.மு.க-வினரே கழட்டி வீசியது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குட்டி மணி

இது குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், `மன்னார்குடி நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுதா அன்புச் செல்வன். இவர் தற்போது மன்னார்குடி நகர மகளிரணி செயலாளராக உள்ளார். இவருடைய கணவர் அன்புச் செல்வன் முன்னாள் கவுன்சிலராகவும், தற்போது நகரத் துணை செயலாளராகவும் இருக்கிறார்.

இந்நிலையில் அமைச்சரின் அக்கா மகன் ஆர்.ஜி.குமார் தரப்புக்கும் சுதா தரப்புக்கும் அவர் நகர்மன்றத் தலைவராக இருக்கும் போதிலிருந்தே சுத்தமாக ஆகாது. சுதா, அமைச்சர் ஆர்.காமராஜ் சொல்லும் விஷயங்களை உடனே செய்துவிடுவார். ஆனால், ஆர்.ஜி.குமார் சொல்லும் விஷயங்களை செய்யவும் மாட்டார், கண்டுகொள்ளவும் மாட்டார்.

மன்னார்குடி நகராட்சி அலுவலகம்

இதனால் குமாரின் ஆதரவாளர்களான முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் கோபி, குட்டி மணி ஆகியோர் சுதா மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வந்தனர். சிறந்த நகராட்சிக்காக ஜெயலலிதாவிடம் விருது வாங்கும் போட்டோவை மன்னார்குடி நகராட்சி அலுவலக முகப்பில் சுதா மாட்டி வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அங்கு சென்ற கோபி, குட்டி மணி அந்த போட்டோவைக் கழட்டி கீழே வீசியதுடன் உடைக்கவும் முயன்றுள்ளனர். அங்கிருந்த சிலர் இதைத் தடுத்துள்ளனர்.

இதை நகராட்சி ஊழியர்கள் சிலர் சுதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். ஏற்கெனவே இதே போல் ஒருமுறை போட்டோவை உடைத்துள்ளனர். அப்போது நகராட்சி ஊழியர்களே போட்டோவை சரி செய்து வைத்த சம்பவமும் நடைபெற்றது. தற்போது மீண்டும் அதைச் செய்துள்ளனர்.

ஜெயலலிதா - சுதா அன்புச்செல்வன்

சுதாவை இழிவுபடுத்துவதாகக் கூறி அ.தி.மு.க-வினரால் வணங்கப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போட்டோவை கீழே வீசியது அ.தி.மு.க நிர்வாகிகள் பலரையும் வேதனையில் ஆழ்தியுள்ளது. இது தொடர்பாக சுதா, அமைச்சர் ஆர்.காமராஜிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மன்னார்குடி அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

இது தொடர்பாக ஆர்.ஜி.குமாரிடம் பேசினோம், ``இரவு 11 மணி வரை நகராட்சி அலுவலக வளாகத்தில் லைட் எரிந்து கொண்டிருந்துள்ளது. இதை அவ்வழியாகச் சென்ற முன்னாள் கவுன்சிலரான கோபி பார்த்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கு நகராட்சி ஊழியர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அவர்களைக் கண்டித்ததுடன் லைட்டையும் ஆஃப் செய்ய சொல்லியிருக்கிறார். அப்போது குறிப்பிட்ட போட்டோவில் பொருத்தப்பட்டிருந்த லைட்டும் நின்றது. இதை போட்டோவை உடைத்து விட்டதாக வேண்டுமென்றே சிலர் பரப்பி வருகின்றனர். இதய தெய்வம் அம்மா இருக்கும் போட்டோவுக்கு அ.தி.மு.க-வை சேர்ந்தவர்களே அவமரியாதை செய்வார்களா? என்றார்.

ஆர்.ஜி.குமார் உடன் கோபி

முன்னாள் நகர்மன்ற தலைவர் சுதாவிடம் பேசினோம், ``சின்ன பசங்க காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதைச் செய்துவிட்டனர். அமைச்சர் ஆர்.காமராஜ், அவர்களைக் கூப்பிட்டு கடுமையாகக் கண்டித்துவிட்டார். அதனால் இதைப் பெரிதுபடுத்தவில்லை நீங்களும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/news/politics/is-the-photo-of-jayalalitha-was-removed-from-manargudi-municipality-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக