Ad

புதன், 29 ஜூலை, 2020

ஒரு கேமரா... பல கலாசாரம்!

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவத்சன், பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர். இதனால், வீடு, படிப்பு, வேலை எனக் குறுகிய வட்டத்துக்குள் முடங்கியிருந்தவர், கடந்த ஆறு ஆண்டுகளாக டிராவல் போட்டோகிராபராக நம்பிக்கைச் சிறகுகள் விரித்து இந்தியா முழுக்கப் பயணிக்கிறார். இந்தியக் கலாசாரத் திருவிழாக்களையும், பாரம்பர்ய சுற்றுலாத் தலங்களையும் தனது கேமராவில் தத்ரூபமாகக் காட்சிப்படுத்துகிறார். ( -------- )

“எனக்கு வலது காது சுத்தமா கேட்காது. ஹியரிங் மெஷின் பயன்படுத்தினா, இடது காது 40 சதவிகிதம் கேட்கும். காலேஜ் படிக்கும்வரை சரியா பேசவும் முடியாது. ப்ளஸ் டூ-ல 1138 மார்க்குடன் 196 கட் ஆப் மார்க் வாங்கினேன். இன்ஜினீரியங் முடிக்கும்வரை மற்றவர்களுடன் என்னால மிங்கிள் ஆக முடியலை. ஆனாலும், நல்லா படிச்சு கேம்பஸ்ல ஐ.டி வேலை வாங்கினேன். தகவல் பரிமாற்றப் பிரச்னையால் குரூப் புராஜெக்ட்ல என்னால முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியலை. அதனால, என்னை மட்டும் தனி புராஜெக்ட்ல போட்டாங்க. என்னால மெசேஜ், மெயில்தான் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்கிட்ட போன்ல பேச முடியாது. என் குறைபாடு தெரியாத அவங்களும் என்மேல புகார் சொல்வாங்க. ஒருகட்டத்துல வேலைச் சூழலே பிடிக்கலை.( -------- )

ஒருமுறை குடும்பத்துடன் மூணாறு போயிருந்தேன். என் கேமராவுல சூரிய உதயத்தையும் இயற்கைக் காட்சிகளையும் போட்டோ எடுத்து, ஃப்ளிக்கர்(flickr) இணையதளத்துல பதிவிட்டேன். சனி, ஞாயிறுகளில் விடியற்காலையிலயே ஏரி, மார்க்கெட், பார்க், தொழில் பகுதிகள்னு பல இடங்களுக்கும் போய் பிடித்தமான, யதார்த்தமான காட்சிகளை போட்டோஸ் எடுத்தேன். அப்பதான் முதல்முறையா பலர்கிட்டயும் பழக ஆரம்பிச்சேன்; தடுமாற்றத்துடன் தயங்காமப் பேசினேன்; தெளிவா, சுயமா சிந்திச்சேன்; என்னோட இலக்கைத் தீர்மானிச்சேன். எனக்கிருந்த குறைபாடுகள் என் கனவுகளுக்கும் இலக்குக்கும் தடையா இருக்கக்கூடாதுன்னு முடிவெடுத்தேன்.” – சற்று தடுமாற்றத்துடன் பேசினாலும், ஸ்ரீவத்சனின் முகத்தில் உற்சாகம் ததும்புகிறது.( -------- )

“முதல்முறையா தனியா வெளியூர்ப் பயணம் செஞ்சு மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குப் போய் போட்டோஸ் எடுத்தேன். ரெண்டு வருஷ ஐ.டி வேலை, போராட்டமா இருந்த நிலையில, அதுக்கு நேரெதிரான உற்சாக உணர்வைக் கொடுத்த போட்டோகிராபி துறையை என் கரியரா தேர்ந்தெடுத்தேன். 2014-ல் ஐ.டி வேலையிலிருந்து விலகினேன். பிறகு, தனியாவே உத்தரப்பிரதேசம் மாநிலம் பர்சனா ‘லத் மார் ஹோலி’ பண்டிகைக்குப் போனேன். எக்கச்சக்க மக்கள் கூடியிருந்த அந்தச் சூழலை முதல்முறையா எதிர்கொண்டதால, பய உணர்வுல ஒரு போட்டோகூட என்னால எடுக்க முடியலை. பெரிய சவாலா இருந்தாலும், அந்தப் பத்து நாள்கள் தனிமைப் பயணம் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு. ஃப்ளிக்கர் இணையதளம் மூலமா நிறைய போட்டோகிராபி நண்பர்கள் கிடைச்சாங்க. அவங்க மூலம் பல்வேறு கலாசார விழாக்கள் பத்தி முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு, தொடர்ந்து இந்தியா முழுக்க தனியாவே பயணம் செய்றேன்” என்கிற ஸ்ரீவத்சன், பிரான்ஸ் நாட்டின் ‘ஷூட் தி ப்ரேம்’ மற்றும் ‘இந்திய போட்டோகிராபி’ அமைப்புகளின் சிறந்த டிராவல் போட்டோகிராபருக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.( -------- )

“மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பட்டான்கொடோலி(pattankodoli) கிராமத்தில் நடக்கும் விஷ்ணு கோயில் திருவிழா மிகப் பிரபலம். முதல் எட்டு நாள்களில் கோயிலுக்குள் மட்டும் மாலையில் ரெண்டு மணிநேரம் ஒருவருக்கொருவர் மஞ்சள் நிறப் பொடியைப் பூசிக்குவாங்க. கடைசி ரெண்டு நாள் விழாதான் சிறப்பானது. அப்போ சாமியார் ஒருவர் நடந்துபோகும் அஞ்சு நிமிட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மஞ்சள் நிறப் பொடியைப் பூசிப்பாங்க. அந்த இடத்துல மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கும். அந்தச் சூழல்ல என்னால ரொம்பநேரம் இருக்கவே முடியலை. விடாப்பிடியா நாலாவது வருஷம் போன போதுதான் அந்தத் திருவிழாவை என்னால திருப்திகரமா போட்டோ எடுக்க முடிஞ்சது.( -------- )

ஸ்ரீவத்சன்

கேரளாவின் கொடுங்கலூர் பகவதியம்மன் கோயில் பரணி திருவிழா. மலைவாழ் பழங்குடியின மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும்போது பாட்டுப் பாடிகிட்டே கத்தியால் தலையில் அடிச்சுப்பாங்க. அந்த இடமே ரத்த பூமியா இருக்கும். கடைசியில கடற்கரையில் ரத்தம் படிந்த கத்தியைக் கழுவி வேண்டுதலை முடிப்பாங்க. கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அங்க போட்டோ எடுக்கும்போது நேர்த்திக்கடன் செலுத்தும் சிலர் ரத்தம் சொட்டச் சொட்ட மயக்கமாகி என்மேல விழுந்து, நான் மிரண்டுபோனதெல்லாம் த்ரில்லிங் அனுபவம்.( -------- )

போட்டோகிராபி துறைக்கு வந்த பிறகுதான் சந்தோஷமா இருக்கேன், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழறேன். பொருளாதாரத் தேவைக்காக என் ஊழியர்கள் மூலம் வெடிங் போட்டோகிராபியும் செய்றேன். ‘மெட்ராஸ் போட்டோ பிளாக்கர்’ என்ற குழுவைத் தொடங்கி, போட்டோகிராபி பயிற்சியும் அளிக்கிறேன். பழங்குடியின மக்களின் கலாசார விழாக்களை முழுமையா பதிவு செய்யும் திட்டமிருக்கு. லாக்டெளன் தளர்வுகள் சரியானதும் அந்த முயற்சியில் களமிறங்கிடுவேன்” என்கிறார் உற்சாகமாக.( -------- )



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/physically-challenged-travel-photographer-captures-different-cultures

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக