சென்னை, நெய்வேலி புத்தகத் திருவிழாவுக்கு அடுத்து மிகவும் பிரமாண்டமானதொரு புத்தகத் திருவிழா என்றால், அது ஈரோடு புத்தகத் திருவிழாதான். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் ஏராளமான வாசகர்கள் படையெடுப்பார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள், எண்ண முடியாத மனிதத் தலைகள், தினமும் மாலையில் நடைபெறும் அறிஞர்களின் சொற்பொழிவுகள் என வெகு விமரிசையாக ஈரோடு புத்தகத் திருவிழா இருக்கும்.
கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்தப் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்திவரும் மக்கள் சிந்தனைப் பேரவை என்னும் அமைப்பானது, 16-வது ஈரோடு புத்தகத் திருவிழாவை இந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 12 நாள்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தது. கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஓரிடத்தில் கூடுவது என்பது இன்றைய சூழலுக்கு ஏற்றதல்ல என்ற காரணத்தாலும் இந்த வருடம் நடைபெறுவதாய் இருந்த, `16-வது ஈரோடு புத்தகத் திருவிழா’ ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், புத்தகத் திருவிழாவின் மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்டிருந்த அனைத்தையும் சமூக வலைதளங்கள் வழியாக நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
அந்தவகையில் இன்றைய முதல்நாள் நிகழ்ச்சியில் ‘இலக்கியத்தில் நாகரிகம்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பேசுகிறார். ஆகஸ்ட் 1-ம் தேதி ‘அறிவினைத் தூண்டி நடத்துக!’ என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாரும், ஆகஸ்ட் 2-ம் தேதி ‘அகழ்வாரைத் தேடும் நிலம்’ என்ற தலைப்பில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களும் சொற்பொழிவாற்றுகின்றனர். ஆகஸ்ட் 3-ம் தேதி ‘காலவெளியில் ஒரு ஜீவநதி’ என்ற தலைப்பில் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களும், ஆகஸ்ட் 4-ம் தேதி ‘விசும்பின் துளியாய்’ என்ற தலைப்பில் பேராசிரியர் த.ராஜாராம் அவர்களும், ஆகஸ்ட் 5-ம் தேதி ‘ஆறாவது விரல்’ என்ற தலைப்பில் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் அவர்களும் உரையாற்றுகின்றனர்.
Also Read: 'புத்தகங்கள் படியுங்கள்; சமூக வலைதங்களை ஒதுக்குங்கள்!' - கரூர் இளைஞரின் நூதன விழிப்புணர்வு
ஆகஸ்ட் 6-ம் தேதி ‘நம் வாழ்க்கை நம் கையில்’ என்ற தலைப்பில் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களும், ஆகஸ்ட் 7-ம் தேதி ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற தலைப்பில் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களும், ஆகஸ்ட் 8-ம் தேதி ‘நூலேணி’ என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனும் பேசுகின்றனர். ஆகஸ்ட் 9-ம் தேதி ‘அறம் பொருள் இன்பம் அகிலமே சூழ்க’ என்ற தலைப்பில் நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்களும், ஆகஸ்ட் 10-ம் தேதி ‘சவால்களும் சந்தர்ப்பங்களும்’ என்ற தலைப்பில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், இறுதி நாளான ஆகஸ்ட் 11-ம் தேதியன்று ‘சங்கத்தமிழ்ச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களும் உரையாற்றுகின்றனர்.
‘தினசரி மாலை சரியாக 6 மணிக்குத் தொடங்கி, 7.30-க்கு முடியும் விதத்தில் இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சொற்பொழிவுகள் அனைத்தும்`makkalsinthanaiperavai' என்ற பெயரிலான யூடியூப், முகநூல் பக்கம் மூலம் பார்க்கலாம். கொரோனா சூழலால் இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெற முடியாமல் போயிருக்கிறது. அடுத்த புத்தகத் திருவிழா நிச்சயமாக வெகு சிறப்பாக, பிரமாண்டமாக இருக்கும்’ என்கின்றனர் மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பினர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/erode-book-festival-cancelled-guests-speeches-will-go-live
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக