மூளையில் கட்டி:
கடலூர் மாவட்டம், தொழுதூரை அடுத்திருக்கும் வடகரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித் தொழிலாளியான இவர், துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கொத்தனாராக வேலை செய்துவந்தார். இவர் முதல் மனைவிக்கு 2 பெண் குழந்தைகள். இரண்டாவது பிரசவத்தின்போது குழந்தையை பெற்றெடுத்துவிட்டு அவர் உயிரிழந்துவிட, அஞ்சலையை இரண்டாவதாகத் திருமணம் செய்தார் பாலகிருஷ்ணன். இந்தத் தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய பாலகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு துபாய் நாட்டுக்குச் சென்றிருக்கிறார்.
அடிக்கடி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதால் மருத்துவர்களிடம் காட்டியிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் கட்டி இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அந்தத் தகவலை பாலகிருஷ்ணன் உடனே தன் மனைவியிடம் கூற, நீங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள். இங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதையடுத்த சில தினங்களில் வேலை செய்துகொண்டு இருந்த இடத்தில் அப்படியே மயங்கி விழுந்த பாலகிருஷ்ணன் அப்படியே கோமாவுக்குச் சென்றுவிட்டார். பாலகிருஷ்ணனுடன் வேலை செய்த சக தொழிலாளர்கள் மூலம் தகவலறிந்த அஞ்சலை, கணவரை எப்படியாவது பாதுகாப்பாக இந்தியா அழைத்து வந்துவிட வேண்டுமென்று மத்திய உள்துறை தொடங்கி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, கடலூர் மாவட்ட நிர்வாகம் வரை அனைத்துக் கதவுகளையும் கண்ணீரோடு தட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
கோமாவில் உயிரிழந்த பாலகிருஷ்ணன்:
அரசு இயந்திரங்கள் எந்தப் பிரிவுகளும் அஞ்சலையின் மனுக்களுக்கு அசையக்கூட இல்லை. அவர் மனுக்களுடன் போராடிக்கொண்டிருந்த அதேநேரத்தில், கோமா நிலையிலேயே உயிரிழந்தார் பாலகிருஷ்ணன். இடிந்துபோன அஞ்சலை தன் கணவரின் உடலையாவது எடுத்துவருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று மீண்டும் அரசின் கதவுகளைத் தட்டினார். ஆனால், இம்முறையும் அமைதியை மட்டுமே அவை பதிலாக அளித்தன.
அஞ்சலையிடம் பேசினோம். “எங்க வீட்டுக்காரரோட முதல் தாரம் பிரசவத்தப்போ ரெண்டு பொம்பளை புள்ளைங்களை விட்டுட்டு செத்துப்போயிட்டாங்க. 10 வருஷத்துக்கு அப்புறம் அவரு சொந்தக்காரங்க வற்புறுத்துனாங்கனு அந்தப் புள்ளைங்களுக்காக ரெண்டாந்தாரமா என் வூட்டுக்காரரு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. எங்களுக்கு ரெண்டு புள்ளைங்க. எல்லார் மேலயும் ரொம்பப் பாசமா இருப்பாரு. 13 வருஷமா அவரு துபாய்லதான் வேலை பாக்குறாரு. ரொம்ப கஷ்டமான வேலைனு அடிக்கடி சொல்லி கஷ்டப்படுவாரு. ரொம்ப முடியலைன்னா வந்துடுங்க மாமானு நான் அடிக்கடி சொல்லுறப்போலாம் ‘இல்ல பாப்பா... நமக்கு மூனு பொம்பள புள்ளைங்க இருக்குது.
மனைவியுடன் கடைசி வார்த்தை:
அதுங்களை வளர்த்து நல்ல எடத்துல கட்டிக் கொடுக்கணும்னா இன்னும் கொஞ்ச நாள் நான் இங்கதான் இருக்ககணும்’னு சொல்லுவாரு. 7 மாசத்துக்கு முன் ஊருக்கு வந்து போனாரு. போய் 4 மாசத்துல ரொம்ப தல வலிக்குதுனு சொன்னாரு. அப்படினா வேலையை ஃபினிஷ் பண்ணிட்டு நம்ம ஊருக்கு வந்துடுங்கனு சொன்னேன். அதுக்கு இன்ஜினியர் சாருகிட்ட சொல்லியிருக்கேன் நான் ஊருக்கு போறதுக்கு ரெடி பண்றாங்கனு சொன்னாரு. அதுக்கப்புறம் தலையில கட்டி இருக்குது, ஆபரேஷன் பண்ணணும்னு டாக்டருங்க சொல்றாங்கன்னு சொன்னாரு. அதுக்கு உடனே பண்ணிக்கங்கனு சொன்னேன். ஆனா, ஆபரேஷன் பண்ணிக்கிட்டா இங்க யாரு என்னை பாத்துப்பாங்க. ஊருக்கு வந்து பண்ணிக்கிட்டா நீ என்னை பாத்துப்பனு சொன்னாரு.
அப்புறம் கொஞ்சநாள் கழிச்சி எனக்கு கொரோனானு சொல்றாங்க. தனிமையில வைக்கணும்னு சொல்றாங்கனு சொன்னாரு. அப்புறம் கொரோனாவும் தலைவலியும் சரியாயிடுச்சினு சொல்லிட்டாங்கனு சொன்னாரு. நான் ஊருக்கு வர்றதுக்கு நீயும் இஞ்சினியர் சாருகிட்ட பேசுனு சொன்னாரு. சீக்கிரம் வந்து உன் முகத்தையும் பசங்க முகத்தையும் பார்ப்பேன்னாரு. அதுக்கப்புறம் ரெண்டு நாள் அவரு போன் பண்ணவே இல்லை. நானே அவங்ககூட வேலை செய்றவங்களுக்கு போன் பண்ணி, கேட்டப்போ டாக்டருங்க நடக்க சொல்லும்போது மயக்கம் போட்டு விழுந்துட்டதா சொன்னாங்க. அவரு வேலை செய்யற இடத்துடல இருந்து யாரும் எனக்கு சொல்லல. அவங்க கூட இருக்கறவங்க மூலமா அவருக்குப் போன் பண்ணேன். ஹலோனு ஒரு வார்த்தை மட்டும்தான் சொன்னாரு. அதுதான் என்கிட்ட அவரு கடைசியா பேசுன வார்த்தை.
`ரஜினி சாராவது எங்களுக்கு உதவணும்’
என் வீட்டுக்காரரு உயிரோட இருக்கும்போது இங்க வந்திருந்தாருன்னா எங்க கூட உயிரோட இருந்திருப்பாரு. உடம்பு சரியில்லைனு சொன்னா வேலை செய்ற கம்பெனிக்காரங்கதான ஊருக்கு அனுப்பி வைக்கணும் ? ஆனா நான் எவ்ளோ கெஞ்சி, கதறியும் அந்த இஞ்சினியரு மனசு வைக்கல. நானும் எம்புள்ளைங்களும் இப்போ அநாதையா நிக்கறோம். அவருகூட வாழதான் முடியல. அவரு முகத்தையாவது பாத்துடணும்னு தவியா தவிக்கிறேன். அவரு முகத்தைப் பார்க்க எதாச்சும் உதவி பண்ணுங்க. இனிமே நான் என்ன பண்ணி எம்புள்ளைங்கள காப்பாத்தப் போறேன்னு தெரியல. எல்லாம் சின்ன புள்ளைங்களா வெச்சிருக்கேன் சார். நானும் சின்னப்புள்ளதான் சார். என் பெரிய பொண்ணுக்கு 17 வயசாகுது. எனக்கு 25 வயசுதான் ஆகுது. எங்க வூட்டுக்காரருக்கு ரஜினி ரசிகரு சார். என் பொண்ணுங்களுக்குக் கூட ஐஸ்வர்யா, சவுந்தர்யானு அவரோட பொண்ணுங்க பேரைத்தான் வெச்சிருக்காரு. என் பையன் பேரு ரஜினி பாலா. ரஜினி சாராவது எங்களுக்கு உதவணும்” என்று கதறுகிறார்.
Also Read: `அப்பா முகத்தையாவது வீடியோகாலில் அவன் பார்க்க முடியுமா?' -லண்டனிலிருந்து கலங்கும் முருகனின் அக்கா
இந்த விவகாரத்தில் இறந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்துக்கு உதவிகளை செய்து வரும் ஒருவரிடம் பேசினோம், “உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதல் சில வாரங்கள் அவர் ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே சொந்த ஊருக்குத் திரும்பி அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் இந்தியத் தூதரகம் எடுக்கவில்லை. அதேபோல ’ஈமன் கல்சுரல்’ என்ற அமைப்பு பாலகிருஷ்ணனின் உடலை அனுப்புவதற்காக அனைத்துச் சான்றிதழ்களையும் தயார் செய்து இந்தியத் தூதரகத்தின் வாசலில் அனுமதிக்காக காத்திருந்தது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி பாலகிருஷ்ணனின் உடலில் கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் இருந்தால்தான் அனுப்புவோம் என்றனர். அந்த சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் நிம்மதியாக இருந்தோம். ஆனால், பாலகிருஷ்ணனுக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று இருந்ததால் துபாய் நாட்டின் வெளியுறவுத்துறை உடலை எம்பார்மிங் செய்ய மறுப்பதாகவும், அதனால் உடலை அனுப்ப சாத்தியமில்லை என்றும் இப்போது மெயில் அனுப்புகிறார்கள் இந்தியத் தூதரக அதிகாரிகள்.
அவர்கள் அனுப்பிய மருத்துவ அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள். அந்த அறிக்கையில் 12.05.2011 வரை செல்லுபடி ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறது. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பார்வையாளர்களை அனுமதித்திருப்பார்களா? சொந்த ஊருக்கு உடலை அனுப்பக் கூடாது என்று திட்டமிட்டே கொரோனாவை காரணம் காட்டுகிறார்கள்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/in-cuddalore-a-woman-suffered-without-knowing-the-way-to-bring-her-deceased-husband-from-dubai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக