தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 6,986 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,56,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பிற மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதனால், மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், ஊரடங்கும் இன்னும் சில நாள்களில் முடிவடைய உள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு அறிவிக்கப்போகும் முடிவுகளை அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிப்படைந்ததால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது. இந்தத் தளர்வுகளுடனான ஊரடங்கு தற்போது ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் புதன்கிழமை ஆலோசனை நடத்திய பிறகே உறுதியான தகவல்கள் வெளியாகும். இந்த ஊரடங்கிலும் பொதுப் போக்குவரத்து, மால்கள் மற்றும் தியேட்டர்கள் திறப்பது ஆகியவற்றுக்கான தடை தொடரும் என அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு தொடர்பாக அதிகாரி ஒருவர் பேசும்போது, ``தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படலாம். ஆனால், இந்த ஊரடங்கில் இன்னும் சில தளர்வுகளையும் அரசு அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது. எனினும், பொதுப்போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் உள்ள தடைகள் குறைந்தது அடுத்த மாதம் வரை இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Unlock 3.0: தியேட்டர்கள், ஜிம்களுக்கு அனுமதி? - பள்ளிகள், மெட்ரோவுக்கு `நோ’
source https://www.vikatan.com/news/tamilnadu/tamilnadh-lockdown-may-continue-till-august-end-says-sources
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக