Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

நோய் எதிர்ப்புத்திறனைக் குறைத்து COVID-19-க்கு வழிவகுக்கும் புகைப்பழக்கம்!

மிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்த காலம் எல்லாம் கடந்து இப்போது கொரோனாவின் கட்டுப்பாட்டுக்குள் தமிழகம் சென்றுவிட்டது. இந்நிலையில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், `புகைப்பழக்கம் உள்ளவர்களின் கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. புகைபிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியைத் தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகை பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும்.

அது மட்டுமல்லாமல், புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கொரோனா தொற்றுக்கு எதிராகப் போரிடும் சக்தியை உடல் இழந்துவிடும். இதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துபவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும்போது அவை மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து நுரையீரல் மருத்துவர் திருப்பதியிடம் பேசினோம்.

``கொரோனா காலம் மட்டுமில்லை எந்தக் காலத்திற்கும் புகைப்பழக்கம் உடலுக்கு ஏற்றதில்லை. ஒருவர் புகைபிடிப்பதனால் இரண்டுவிதமான முக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று COPD (Chronic obstructive pulmonary disease). COPD பாதிப்பில் முதலில் நுரையீரலில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படத் தொடங்கும். இறுதியில் இதனால் மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம், வீஸிங் மற்றும் ஆஸ்துமா போன்ற பல்வேறு சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம். புகைப்பழக்கத்தினால் ஏற்படும் மற்றொரு பிரச்னை நுரையீரல் புற்றுநோய் (Lung cancer). இவற்றைத் தவிர ரத்த அழுத்தம், ரத்த நாள அடைப்பு நோய் போன்ற பிரச்னைகளும் புகைபிடிப்பதால் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்குக் கருவுறுதலிலும், குழந்தை பிறக்கும்போதும் சிக்கல்கள் ஏற்படலாம். புகை பிடிப்பவர்கள் வெளியிடும் சிகரெட் புகையால் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நுரையீரல் பிரச்னைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

Corona infection (Representational Image)

சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் சென்று வரக்கூடிய ரத்தம் சுத்திகரிக்கப்பட்டதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ஆகையால் அவையெல்லாம் நோய்க் கிருமிகளிடமிருந்து ஓரளவிற்குப் பாதுகாப்பாகவே இருக்கின்றன. ஆனால் சுவாசத்தின்போது நுரையீரலுக்குள் சென்று வரும் காற்றானது வெளியிலிருந்து நேரடியாக நுரையீரலுக்குள் செல்கிறது. வெளியிலிருந்து வரும் அந்தக் காற்றில் ஏராளமான நோய்க்கிருமிகள் கலந்திருக்கலாம். இதுபோல் வெளியுலகத்துடன் நேரடி தொடர்பில் நுரையீரல் இருப்பதால் அதில் கிருமித்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் நுரையீரலால் காற்றில் நோய்க்கிருமிகள் கலந்து வந்தாலும் அதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.

Also Read: `கல்லீரல் பாதிப்பு; உடல் நலக்குறைவு’ - மல்லுவுட்டை உலுக்கிய நடிகர் அனில் முரளியின் மரணம்!

காரணம், நுரையீரலுக்குள் இருக்கும் ஆல்வியோலார் மேக்ரோபாஜ் செல்கள் (Alveolar macrophage cells). இவை உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமியைத் தாக்கி அழிப்பதற்கும் ஆல்வியோலார் மேக்ரோபாஜ் செல்கள் உதவுகின்றன. இதனால் ஆரோக்கியமான நுரையீரல் என்பது உடலுக்கு அத்தியாவசியமான ஒரு பாகம்.

Lung problem (Representational Image)

புகையிலை, சிகரெட் புகைப்பதனால் நுரையீரலின் செயல்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டு உடலின் நோய் எதிர்ப்புத்திறனும் குறைகிறது. இதனால் வெளியிலிருந்து வரும் நோய்க் கிருமிகளால் எளிதில் தொற்று ஏற்படலாம். மேலும் தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி நோயை உண்டுபண்ணக் கூடிய கிருமி என்பதால் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே நுரையீரல் பிரச்னைகளுடன் புகைபிடிக்கும் பழக்கமும் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களைப் பிழைக்கவைப்பது மிகவும் கஷ்டம்.

புகைப்பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி?

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களிடம், புகைப்பதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எடுத்துரைத்து அதன் மீது ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று புகைப்பழக்கத்திலிருந்து வெளியே வர உதவலாம்.

சினிமாக்களில் வரும் ஹீரோக்கள் புகைப்பதைப் பார்க்கும் சிறுவர்களும், இளைஞர்களும் அதனை ஒரு ஹீரோயிஸமாக நினைத்து அவர்களும் புகைப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அதனால் சினிமாக்களில் காட்டப்படும் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு முழுவதுமாகத் தடை விதிக்கலாம்.

புகைப்பழக்கம் (Representational Image)

புகையிலை பொருள்களில் இருக்கும் நிக்கோட்டின் (Nicotine) என்ற வேதிப்பொருள்தான் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு முக்கியக் காரணம். இது ரத்தத்தில் கலக்கும்போது ஒருவித மகிழ்ச்சியைத் தூண்டுகிறது. புகைப்பழக்கத்திலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு `நிக்கோட்டின் மாற்று சிகிச்சை (Nicotine replacement therapy)' தரப்படுகிறது. இதில் நிக்கோட்டின் வேதிப்பொருள் புகையிலையின் வழியே இல்லாமல் மூக்கு மற்றும் வாய்வழி ஸ்பிரே, சர்க்கரை கலந்த மருந்து, மாத்திரைகளாகக் கொடுக்கப்பட்டு சிகிச்சையாக்கப்படுகிறது.

புகைப்பழக்கத்திக்கு அடிமையாகி அதிலிருந்து மீள்வதைவிடப் புகைப்பழக்கமே இல்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்" என்கிறார் மருத்துவர் திருப்பதி.



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-how-smoking-lowers-immunity-and-it-leads-to-high-impact-of-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக