Ad

புதன், 29 ஜூலை, 2020

புதுக்கோட்டை: `அப்பா இல்லாம நாங்க பட்ட கஷ்டம்..!’ - ஃபேஸ்புக் பதிவால் இணைந்த குடும்பம்

திருவாரூர் மாவட்டம் மகாதேவபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி (68). குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்னையில், மகளிடம் கோபித்துக்கொண்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே கிளம்பி வந்துவிடுகிறார். எங்கே செல்வது என்று தெரியாமல், கிட்டத்தட்ட 300 கி.மீக்கும் அதிகமாகச் சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்த அந்தோணிசாமியின் சைக்கிள் புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அருகே வந்தபோது பஞ்சராகி நின்றுள்ளது.

பேஸ்புக் பதிவால்சேர்ந்த குடும்பம்

பஞ்சர் ஒட்டுபவரிடம் தன்னை ஆதரவற்றோர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு இங்கு அவர் தங்குவதற்கான இல்லம் ஏதும் இருக்கிறதா என்று கேட்க, அவரோ, அழியாநிலை நமது இல்லத்தைக் கைகாட்டியுள்ளார். உடனே நமது இல்லத்துக்குப் புறப்பட்ட அந்தோணிசாமி, காப்பாளர் சந்திரசேகரிடம் தன் நிலையை எடுத்துக்கூற உடனே சாப்பாடு கொடுத்து அரவணைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நமது இல்லத்தில் இணைந்தாலும், குடும்பத்தினரின் நினைவில் அந்தோணிசாமி தவித்து வந்துள்ளார். வீட்டைவிட்டு வெளியே வந்ததால், சற்றே மனதளவிலும் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.

தான் தவிப்பதை யாரிடமும் அவர் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. இதனையறிந்த காப்பாளர் சந்திரசேகர், அந்தோணிசாமி கொடுத்த தகவலை வைத்து முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட, அதைப் பலரும் பகிர, இதன்மூலம் ஜெர்மனியில் இருக்கும் மூன்றாவது மருமகன் பார்த்துவிட்டு இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவிக்க, தற்போது அந்தோணிசாமியை அவரது குடும்பத்தினர் நமது இல்லத்திற்கு வந்து அழைத்துச் சென்றுள்ளனர். அந்தோணிசாமியின் மூன்றாவது மகள் தந்தையை இறுக்கிக் கட்டியணைத்து, ஆனந்தக் கண்ணீருடன் அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஃபேஸ்புக் பதிவால்சேர்ந்த குடும்பம்

இதுபற்றி நமது இல்ல காப்பாளர் சந்திரசேகர் கூறும்போது, "என் மகள் என்னை விரட்டிவிட்டுட்டாள்னு" சொல்லிதான் அடிக்கடி புலம்புவாரு. நான் அவருக்கு ஒரு பொண்ணுதான் இருப்பாங்கன்னு நெனச்சேன். அவரோட மனைவி சொன்ன பிறகுதான் அவங்களுக்கு மூணு பொண்ணுங்க இருக்காங்கன்னு தெரியும். அட்ரஸைத் தவிர பெருசா வேற எதையும் அவர் சொல்லலை. நானும் அவருக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்கலை விட்டுட்டேன்.

என்னை வீட்டைவிட்டு விரட்டிவிட்டுட்டாளேன்னு மொத நாளு எனக்கிட்ட சொல்லி புலம்பியவர், அடுத்த நாள், `என் மகள் எப்படி இருக்காளோன்னு தெரியலை மனைவி பிள்ளையைப் பார்க்கணும்போல இருக்குன்னு’ பக்கத்துல இருக்கவங்க கிட்டச் சொல்லி புலம்பி இருக்காரு.

இதைக் கேள்விப்பட்ட உடனே அவர் சொன்ன தகவல்களை வச்சு முகநூலில் இவரைப் பற்றி பதிவு போட்டேன். இந்தப் பதிவைப் பார்த்த பலரும் அதிகமாக ஷேர் பண்ணியிருக்காங்க. அதனால, தான் ஜெர்மனியில் இருக்கிற அவரின் மாப்பிள்ளையால் பார்க்க முடிஞ்சிருக்கு. அவரோட மூன்றாவது மகள், அந்தோணிசாமியைக் கட்டிப்பிடிச்சி அழுத நிகழ்வு எங்களது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவரைக் குடும்பத்தோட சேர்த்ததில் எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி" என்றார்

ஃபேஸ்புக் பதிவால்சேர்ந்த குடும்பம்

அந்தோணிசாமி மூன்றாவது மகள் சவத்தியம்மாள் கூறும்போது, "அப்பாவை தெரிஞ்ச எல்லா இடத்திலயும் தேடிப்பார்த்தும் அப்பா கிடைக்கலை. அப்பதான், ஜெர்மனியில் வேலை பார்க்கும் என்னோட வீட்டுக்காரர் ஃபேஸ்புக்ல எங்க அப்பாவைப் பார்த்துவிட்டு அந்த வீடியோவை அனுப்பி வச்சாரு. உடனே பாஸ் வாங்கிக்கிட்டு கார் எடுத்துக்கிட்டு கூட்டிக்கிட்டு வர்ற கிளம்பிட்டோம். வசதி எல்லாம் இருக்கு. அப்பா எங்களுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டாரு. அவர்பாட்டுக்கு கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியே போயிட்டாரு. அப்பா இல்லாம நாங்க பட்ட கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். இனி அவரை மனசு கஷ்டப்படுத்தாம பார்த்துக்கணும்" என்கிறார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/daughter-found-father-who-left-the-house-because-of-a-family-fight

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக