தஞ்சாவூர் மாவட்டத்தில் கொலை,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 81 ரவுடிகள், 320 சமூக விரோதிகள் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மணல் கடத்தல், ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை, கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு மற்றும் மது விற்பனை என தொடர்ச்சியாக பல்வேறு குற்றசம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக போலீஸாருக்கு புகார்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தன.
இந்நிலையில் தஞ்சை சரக டி.ஐ.ஜியாக ரூபேஷ் குமார் மீனா, எஸ்.பியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு பதவியேற்றுக் கொண்டனர். அப்போதே அவர்கள், இனி ஒரு குற்ற சம்பவமும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக போலீஸார் மத்தியில் கூறியிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து கொலை குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்கள், கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்தவர்களை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலீஸாரின் இந்த செயல் தஞ்சை மக்களை நிம்மதியடைய வைத்துள்ளதாக சமுக ஆர்வலர்கள் பலர் நடவடிக்கை எடுத்த போலீஸ் உயர் அதிகாரிகளைப் பாராட்டி வருகின்றனர்.
Also Read: தஞ்சாவூர் அதிர்ச்சி: டாஸ்மாக் கடை வாசலில் இறைச்சிக் கடைக்காரர் வெட்டிக் கொலை!
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``தஞ்சையில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தன. எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், `குற்ற செயல்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தஞ்சாவூர் சுத்தமான ஊராக மாற வேண்டும்’ என பதவியேற்ற உடனேயே அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். அதன்படி, மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம், தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா, எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
எஸ்.பியின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் தனிப்படை எஸ்.ஐ கண்ணன் தலைமையில் தனிப்படை எஸ்.ஐக்களான தஞ்சை சுகுமார், வல்லம் சந்தரசேகர், திருவையாறு கேசவமூர்த்தி, பாபநாசம் முத்துக்குமார், கும்பகோணம் கீர்த்திவாசன், திருவிடைமருதூர் காமராஜ், பட்டுக்கோட்டை தென்னரசு, ஒரத்தநாடு மோகன்ராஜ் என 8 டிவிஷனுக்கும் 8 எஸ்.ஐ-க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், அதிரடியாகவும் விரைவாகவும் நடவடிக்கையில் இறங்கி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களைக் கைது செய்யத் தொடங்கினர்.
இதில், அமைச்சர் ஒருவரின் உதவியாளர் கொலை மற்றும் திருச்சி இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய திருவையாறு மேலபுனல்வாசல் கிராமத்தை சேர்ந்த எமரசன் என்பவனைக் கைது செய்துள்ளோம். கூலிப்படையைச் சேர்ந்த இவன், பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் கொலை செய்பவன். இவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதேபோல், பிள்ளையார்பட்டி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் ரவுடிகளான சங்கர், மருத்துவக் கல்லூரி பகுதியைச் சேர்ந்த அந்தோணி ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் அந்தோணி, சங்கரைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தான். அவர்கள் இருவரையும் கைது செய்ததால், இந்த கொலை தடுக்கப்பட்டுள்ளது. முனியாண்டவர் கோயில் காலனியை சேர்ந்த மார்டின் என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளான். இவனும் கூலிப்படையாக செயல்பட்டு வருபவன்.
மேலும், பெரிய ரவுடி, சின்ன ரவுடி, கூலிப்படையைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களான 81 ரவுடிகள், 320 சமூக விரோதிகள் என மொத்தம் 400 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். 90 சதவீதம் இந்தப் பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 10 சதவீதம் பேரை கைது செய்ய இருக்கிறோம்.
Also Read: தஞ்சாவூர்: `ரூ.5 கோடி வேணும்!’ - நகைக்கடை அதிபர் கடத்தலில் சிக்கிய 6 பேர்
இதனால் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்த குற்ற செயல்களில் என்ணிக்கை குறையும். இனி குற்றங்கள் நடக்காத வகையில் அவை முற்றிலுமாக தடுக்கப்படும். இதற்காகவே இந்த ஆபரேஷனை கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளோம்’’ தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/crime/tanjore-police-execute-operation-to-arrest-400-to-curb-crimes-in-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக