Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

தஞ்சை: `வங்கிக் கணக்கிலிருந்து மாயமான பணம்!’ - சினிமாவை விஞ்சும் ஹைடெக் மோசடி

நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் வருவது போல் தஞ்சாவூரில் நிஜத்திலும் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்த ஹைடெக் மோசடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரூ. 5 கோடி வரை இந்த மோசடியில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வங்கி கணக்கு புத்தகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான எஸ்.பி.ஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கியின் வாடிக்கையாளர்கள், சிலருக்கு அவர்கள் பணம் எடுக்காமலேயே பணம் எடுக்கப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளது. அதிலும் சில வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து அடுத்தடுத்து ரூ.50,000 வரை மர்ம நபர்கள் எடுத்தது, பாதிக்கப்பட்ட பலரையும் பதைபதைக்க வைத்தது.

மேலும், இது போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்ததையடுத்து, இந்தச் சம்பவம் தஞ்சை மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதில் பாதிக்கப்பட்ட சிலர் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று எனது வங்கி கணக்கிலிருந்து நான் பணத்தை எடுக்கவில்லை, ஆனால் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

பணம் எடுக்கப்பட்டதாக வந்த எஸ்.எம்.எஸ்

இதனை கேட்ட வங்கி அதிகாரிகள் இது தொடர்பாக எங்களுக்கு தெரியாது என பதில் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கி நிர்வாகத்தை நம்பியே வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துகின்றனர். வங்கியில் இருந்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணமும் இதற்குக் காரணம்.

ஆனால், வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட பணமே எங்களுடைய அனுமதி இல்லாமல் மர்ம நபர்கள் எடுக்கின்றனர். வங்கி நிர்வாகம்தான் இதன் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால், தங்களுக்கு சம்பந்தம் இல்லாதது போல் நிர்வாகத்தில் பேசுவது வேதனையைத் தருகிறது என புலம்பியபடியே நூதன மோசடி மூலம் பணத்தை இழந்த சிலர் தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

ஹேக்கிங்

இது குறித்து சிலரிடம் பேசினோம், ``வங்கிக் கணக்கு எண்ணை ஹேக் செய்து சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமலேயே ஏ.டி.எம் மிஷின் மூலம் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் ஹைடெக் மோசடி கடந்த சில வாரங்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடக்க தொடங்கியுள்ளது. இதனை தடுக்க வங்கி நிர்வாகத்தில் மெத்தனம் காட்டியதால் இவை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.

கடந்த வாரத்தில் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி கிளையில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து சுமார் 2-லிருந்து 3 கோடி ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டது. அப்பகுதியினர் வெளிநாடு மற்றும் பல்வேறு தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்து வருவதால் எப்போதும் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். இதனை அறிந்த மோசடி கும்பல் அங்கே கைவரிசையைக் காட்டியுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

வங்கியின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள்

இதனால் அதிர்ந்த அப்பகுதி வாடிக்கையாளர்கள் வங்கியில் முறையிட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் விசாரணை செய்த நிலையில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து மோசடியாக பணம் எடுக்கப் பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டதட்ட நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் வருவது போலவே நிஜத்திலும் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

தற்போது இது தொடர்பான வழக்குகளை தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார், சென்னையில் உள்ள எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினர்.

ஹேக்கிங்

இது குறித்து பாதிக்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரிடம் பேசினோம், ``என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து மோசடி கும்பல் 40,000-க்கும் மேல் பணத்தை எடுத்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ந்த நான் எனது பாஸ்புக்கில் பதிவு செய்து பார்த்தேன். பின்னர் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திலிருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

அதன் பிறகுதான் என்னை போன்ற பலர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது எனக்கு தெரிய வந்தது. வங்கி நிர்வாகத்தினர் இதில் துரித நடவடிக்கை எடுத்தால் மேலும் பலர் பாதிக்கப்படாமல் காக்கலாம். அத்துடன் குற்றவாளிகள் தப்பி விடாமல் உடனடியாகப் பிடித்து விடலாம்” எனத் தெரிவித்தார்.

பாலசுந்தரம்

இது குறித்து அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஊழியர்கள் கூறியதாவது, ``இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், நாங்கள் தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸிடம் மனு அளித்துடன், இதனை தலைமை அலுவலகத்துக்கும் தெரிவித்தோம். இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/bank-fraud-happen-in-thanjavur-investigation-on

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக