வழக்கமாக வரலட்சுமி நோன்பு, ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும். வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமி வழிபாட்டு மிகவும் உகந்தநாள். அதிலும் ஆடிமாதம் அவரும் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்புவாய்ந்தது. இந்த நாளில் செய்யப்படும் மகாலட்சுமி வழிபாடு பல்வேறு ஆசீர்வாதங்களைத் தருவது என்பது நம்பிக்கை. இந்த முறை வரலட்சுமி விரதம் துவாதசி திதியோடு சேர்ந்துவருகிறது. துவாதசி என்பதும் மகாலட்சுமியின் அருளைப் பெறும் தினங்களில் ஒன்று.
ஆதி சங்கரர் பிட்சையின்போது நெல்லிக்கனியை தானமாகப் பெற்று தானமிட்ட பெண்மணியின் தரித்திரம் நீங்கும் வண்ணம் கனகதாரா ஸ்தோத்திரம் பாடியது ஒரு துவாதசி திதி. ஏகாதசி திதி அன்று விரதம் இருந்தவர்கள் துவாதசி திதி அன்றுதான் பாரனை முடித்து உணவு உட்கொள்வர். ஏகாதசி அன்று பெருமாளை வழிபட்டு கூடவே துவாதசி அன்று வரலட்சுமியையும் வழிபடக் கிடைத்திருக்கும் அற்புதமான நாள் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம்.
பாற்கடலில் தோன்றிய தேவி
பெருமாள் வாசம் செய்யும் இடம் பாற்கடல். அந்தப் பாற்கடலைக் கடைந்தபோதுதான் மகாலட்சுமி தேவி அவதரித்தார். மேலும் பல்வேறு ஐஸ்வர்யங்களும் தோன்றின. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள செல்வங்களில் எல்லாம்விட மிகவும் உயர்ந்த செல்வம் மகாலட்சுமித் தாயார். அவர் பெருமாளைச் சேர்ந்தார். இதில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, பெருமாள் இருக்கும் இடத்தில்தான் தாயார் எப்போதும் இருக்கிறார் என்பதுதான். அதேபோன்று தாயாரின் அருளாசி இருக்கும் இடத்தில் பெருமாளின் பேரருளும் நிறைந்திருக்கும்.
வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதத்தை ஆதியில் தேவலோகப் பெண்கள் கடைப்பிடித்ததாகவும் பின்பு சித்திர நேமி என்னும் பெண் அறிந்து தன் துயர் நீங்கப் பெற்றார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. சாருமதி என்னும் பெண்ணின் கனவில் வரலட்சுமி தாயார் தோன்றி வரலட்சுமி விரத முறைகளை உபதேசித்து அதைக் கடைப்பிடிக்குமாறு கூறினார் என்றும் அன்றுமுதல் இந்த விரதம் பூலோகத்தில் அனைவராலும் கடைப்பிடிக்கப் படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
பொதுவாகவே விரதங்கள் என்பவை குடும்பங்களில் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படுபவை. குடும்பத்தில் இல்லாத விரதங்களைக் கைக்கொள்ளும் வழக்கம் நம் மரபில் இல்லை. பெண்கள் திருமணமான பிறகு பிறந்தவீட்டில் கடைப்பிடித்த விரதங்கள் பலவற்றைப் புகுந்த வீட்டில் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாமல் இருந்தால் அவற்றை விட்டுவிடுவார்கள். ஆனால், அவ்வாறு புகுந்தவீடு, பிறந்த வீடு என்ற பேதமின்றி யாரும் கடைப்பிடிக்கலாம் என்னும் விதியை உடையது வரலட்சுமி விரதம்.
பாக்யாத லட்சுமி ராவம்மா...
வரலட்சுமி விரதம் என்பதை எளிமையாகக் கூறுவதென்றால், நம் வீட்டுக்கு மகாலட்சுமியை அழைத்து இரண்டு நாள்கள் தங்க வைத்து பூஜைகள் செய்வது என்பதுதான். வழக்கமாக நாம் மகாலட்சுமியை வீட்டில் வழிபாடு செய்வோம். திருவுருவப்படங்கள் வைத்து வணங்குவோம். ஆனால், வரலட்சுமி விரதத்தின்போது அன்னையை ஆவாஹனம் செய்து வழிபடுவோம்.
இந்த நாளில் தாயாரை ஒரு கலசத்தில் ஆவாஹனம் செய்கிறோம். ஆவாஹனம் செய்ய அரிசி, கொஞ்சம் பருப்பு ஆகியன கொண்டு கலசத்தை நிரப்ப வேண்டும். கலசத்தை மாவிலை கொண்டு அலங்கரித்து மூடி அதன் மேல் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்தால் கலசம் தயார். இதற்கு மேல் முகம் வைப்பது, ஆபரணங்கள் சூட்டுவது ஆகியன நம் வசதியைப் பொறுத்தது. மிகவும் எளிமையான ஆபரணங்களான காதோலை கருமணி, சீப்பு கண்ணாடி போன்றவற்றை அம்மனை அலங்கரிக்கும் விதமாக வைக்கலாம். இவையனைத்துமே மங்கலத்தின் அடையாளமானவை. அன்னையை வைக்கும் மண்டபம் ஆகியவற்றைக் கோலமிட்டு மாவிலை மற்றும் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சிலர் வீடுகளில் கலசத்தில் அம்மனின் திருமுகத்தை வரைந்து அதில் மஞ்சள் கொண்டு காது, மூக்கு ஆகியன ஒட்ட வைப்பார்கள்.
கட்டாயம் செய்ய வேண்டியவை இரண்டு. ஒன்று ஒரு புதிய ரவிக்கைத் துணியைக் கலசத்துக்கு சமர்ப்பிப்பது. மற்றொன்று ஒரு இனிப்பு நைவேத்தியம். துணியில் சிவப்பும், நைவேத்தியத்தில் சர்க்கரைப் பொங்கலும் விசேஷம்.
வீட்டின் கிழக்குப் பக்கமாக நுனிவாழை இலையைப் போட்டு அதில் நெல் பரப்பி, அதன் மேல் ஒரு தாம்பாளத்தில் அரிசியிட்டுப் பரப்ப வேண்டும். கலசத்தை அதன் மேல் வைத்து ஒரு பழம், வெற்றிலை பாக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பின் கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். பின்பு கலசத்தை அம்மனாக பாவித்து பக்தியோடு இரண்டுபேர் சேர்ந்து எடுத்துவந்து மண்டபத்தில் வைக்க வேண்டும். அப்போது அன்னையை வரவேற்றுப் பாடல்கள்பாட வேண்டும்.
பூஜை முறை
அனைத்து பூஜைகளின் தொடக்கமும் விநாயகர் வழிபாடுதான். மஞ்சளில் பிள்ளையார் செய்து அதற்கு மலர்கள் சமர்ப்பித்து தூப தீபங்கள் காட்டி வழிபட வேண்டும். பின்பு ஒரு பழத்தினை நைவேத்தியம் செய்து பின் வரலட்சுமி நோன்பு சிறப்பாக முடிய அருள்புரிய வேண்டும் என்று மனமாரப் பிராத்தனை செய்து பூஜையைத் தொடங்கலாம்.
பூஜையைத் தொடங்கும் முன்பாகக் கையில் கட்டிக்கொள்ளும் மஞ்சள் சரடில் ஒன்பது முடிச்சுகள் இட்டு அதைக் கலசத்தில் அலங்காரமாகச் சாத்த வேண்டும். பின்பு `தாயே இந்தக் கலசத்தில் நிறைந்து எங்கள் பூஜையை ஏற்பாயாக’ என்று வேண்டி அம்மனை கலசத்தில் ஆவாஹனம் செய்ய வேண்டும். பின்பு மலர்களால் அம்மனின் திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு நைவேத்தியங்கள் சமர்ப்பித்து கற்பூர ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும்.
இந்த பூஜையில் மிகவும் முக்கியமானது தோரக்ரந்தி எனப்படும் சரடுக்குச் செய்யும் பூஜை.
ஓம் கமலாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் லோக மாத்ரே நம:
ஓம் விச்’வ ஜநந்யை நம:
ஓம் மஹாலட்சுமியை நம:
ஓம் க்ஷீராப்தி தநயாயை நம:
ஓம் விச்வஸாக்ஷிண்யை நம:
ஓம் சந்தரசோதர்யை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
என்னும் ஒன்பது நாமங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். பின்பு வரலட்சுமி தேவியை வணங்கிவிட்டுக் கையில் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் மூத்த பெண்கள், மாமியாரிடம் கட்டிக்கொள்வது விசேஷம். தனிக்குடித்தனத்தில் இருப்பவர்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ளலாம்.
நோன்பின் பலன்கள்
எந்த நோன்பையும்விட வரலட்சுமி நோன்பு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நம் இல்லத்துக்குக் கொண்டுவரும். ஆண்டு முழுவதும் வீட்டில் ஆரோக்கியத்தையும் செல்வச்செழிப்பையும் வரமாகத் தரும் நோன்பு இது. இதனால், கணவன் மனைவி இடையே நல்ல அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும் என்பது ஐதிகம். வரலட்சுமி நோன்பை மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்களும் இந்த நாளில் அம்மனை வழிபட்டு வேண்டிக்கொள்ளலாம். இதில் ஒரு விசேஷமும் உண்டு.
மனதில் இருக்கும் குறையை அம்மனிடம் கூறி, `வரும் ஆண்டுக்குள் இந்தக் குறையை நிவர்த்தி செய்துவிடு தாயே. நான் அடுத்த ஆண்டில் வரலட்சுமி நோன்பைக் கடைப்பிடிக்கிறேன்’ என்று மனதுக்குள் வேண்டிக்கொள்ள வேண்டுமாம். அவ்வாறு வேண்டிக்கொண்டால் அடுத்த வரலட்சுமி நோன்பிற்கு முன்பாக அந்த வேண்டுகோள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு நோன்பை மேற்கொள்கிறவர்களுக்கும் அடுத்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிக்கொண்டவர்களுக்கும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டிக்கொள்வோம்.
source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-varalakshmi-nonbu-and-its-pooja-procedure
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக