தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை செப்டம்பர் 30-க்குள் நடத்திமுடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். கொரோனா காரணமாக தேர்தல் நடக்குமா, நடக்காதா என்கிற கேள்விகள் எழுந்துவந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்துக்குள்ளாகவே ஒரு தனி அணி உருவாகி, புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்குவதற்கான வேலைகள் நடந்திருக்கின்றன.
புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூத்த இயக்குநரும், தயாரிப்பாளருமான பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தயாரிப்பாளர்கள் 50 பேர் சேர்ந்து இந்தப் புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த சங்கம் தொடர்பாக விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் பாரதிராஜா.
``திரைப்பட படப்பிடிப்பு நடத்திட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்'' என முதலைமைச்சரின் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது. ஆனால், புதிய சங்கத்தின் தொடக்கவிழா ஆடி பெருக்கு தினமான ஆகஸ்ட்-2 ம் தேதி நடைபெற இருப்பதாகவும், அதில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொள்ள ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.
இதுதொடர்பாக கோலிவுட்டில் சிலரிடம் விசாரித்தோம்.``இந்தப் புதிய சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். துணைத்தலைவராக எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக சத்யஜோதி தியாகராஜன், செயலாளராக டி.சிவாவும், இணைச் செயலாளராக சுரேஷ் காமாட்சியும், லலித்குமாரும் இருப்பார்கள் எனத்தெரிகிறது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பொறுப்புகள் எதுவும் கிடையாது. ஆனால், அவர் இந்த சங்கம் ஆரம்பித்ததில் முக்கியமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் வீட்டில் வைத்து பாரதிராஜாவுக்கு விருந்து வைத்திருக்கிறார். மேலும், இந்தப் புதிய சங்கத்தில் இணைச்செயலாளர்களில் ஒருவராக இருக்கும் லலித், விஜய்க்கு நெருக்கமானவர். அதனால், இந்த சங்க உருவாக்கத்தின் பின்னணியில் நடிகர் விஜய்யும் இருப்பார் எனத் தெரிகிறது'' என்றார்கள்.
புதிய சங்கம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தோம். ``எந்த சங்கத்துடனும் விஜய்க்கு எந்த நெருக்கமும் இல்லை. உண்மையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இதுபோன்று சினிமா துறையில் தொடர்ந்து இயங்குவதிலேயே நடிகர் விஜய்க்கு விருப்பம் இல்லை. 80 வயதை நெருங்கும் அவர் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு சந்தோஷமாக குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவேண்டும் என்பதுதான் விஜய்யின் எண்ணம். இதுதொடர்பாக அவர்களுக்குள் மனக்கசப்பும் இருக்கிறது. மற்றபடி பாரதிராஜாவை விஜய் சந்தித்திருக்கலாம். ஏனென்றால் நீலாங்கரையில் அவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் சந்தித்துக்கொள்வது சகஜம்தானே'' என்றார்கள்.
இதற்கிடையே புதுப்பஞ்சாயத்தாக தயாரிப்பாளர் தாணு நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். சிங்காரவேலன் எனும் தயாரிப்பாளர் தன்னுடைய பெயரில் பண மோசடி செய்துள்ளதாக அந்தப்புகார் மனுவில் தாணு குற்றம்சாட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதற்கு சிங்காரவேலன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ``அவருடைய கையெழுத்தைப் பயன்படுத்தி எந்தக் கடிதத்தையும் நான் வெளியிடவில்லை. அப்படி ஒரு கடிதத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுதொடர்பாக அவர் சங்கத்திலேயே புகார் தெரிவித்திருக்கலாம். ஆனால் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். தோல்வி பயத்தால் தாணு இப்படி செய்கிறார்'' என்று சிங்காரவேலன் பேசியிருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கப் பிரச்னை இன்னும் சில தினங்களில் பல அதிரடி திருப்பங்களோடு விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/senior-directors-and-producers-forms-new-tamil-film-producers-council
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக