Ad

புதன், 29 ஜூலை, 2020

கொரோனா: `உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்' - உதவிய கோவை போலீஸ்

திண்டுக்கல் மாவட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர், திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றி வந்தார். மங்கலம் பகுதியில் தங்கியிருந்து, அவினாசிபாளையம் பகுதி ஆம்புலன்ஸில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்தார். கொரோனாவால் மூன்று மாதங்களுக்கு மேலாக அவர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் இருந்துள்ளார்.

இளைஞர்

Also Read: பற்றாக்குறையில் 108 ஆம்புலன்ஸ்கள்! - உயிர் காக்கும் விஷயத்தில் வேண்டாம் அலட்சியம்

இதனிடையே, கடந்த மாதம் பெற்றோரை பார்ப்பதற்காகத் திண்டுக்கல் சென்றுள்ளார். இரண்டே நாள்களில் அவர் மீண்டும் திருப்பூருக்குத் திரும்பிவிட்டார்.

ஆனால், சில நாள்களிலேயே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. பரிசோதனையில் அந்த இளைஞருக்கு கொரோனா உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாகக் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரமாக சிகிக்சை பெற்று வந்த அவர், திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த மாதம் உயிரிழந்தார்.

108 ஆம்புலன்ஸ்

அவரது மரணம் அந்த இளைஞரின் குடும்பத்தினர், 108 பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே 108 பணியாளர்கள் இணைந்து தங்களாலான உதவியைச் செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவை ஆயுதப்படை மற்றும் மாவட்ட போலீஸார் இணைந்து ஒரு தொகையைத் திரட்டியுள்ளனர். திரட்டப்பட்ட ரூ.1,10,038 தொகையை, திண்டுக்கலில் உள்ள அந்த இளைஞரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து போலீஸார் வழங்கினர். போலீஸாரின் இந்தச் செயல் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதுகுறித்து 108 ஊழியர்கள், ``அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

போலீஸ் உதவி

குடும்பத்துக்கு ஒட்டு மொத்த நம்பிக்கையாக இருந்தது அவர்தான். அவரது குடும்பத்தினருக்கு போலீஸார் உதவுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.

108 ஆம்புலன்ஸை இயக்கி வரும் ஜி.வி.கே நிறுவனத்தின் தமிழக தலைமை அதிகாரி செல்வக்குமார், ``அந்த இளைஞரின் குடும்பத்துக்கு போலீஸார் உதவியது ஆறுதலாக இருக்கிறது. அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கெனவே, காப்பீட்டு தொகையில் இருந்து ரூ.5 லட்சம் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

போலீஸ் உதவி

அதேபோல, கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் ரூ.50 லட்சம், அவர்களின் குடும்பத்துக்கு கிடைப்பதற்கும் முழு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில், அந்த இரண்டு தொகையும் அவர்களுக்கு கிடைக்கும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-police-helps-108-ambulance-staffs-family-who-died-by-corona-infection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக