டிப்ரஷன், மன அழுத்தம் பற்றி இப்போது அதிகம் பேசுகிறோம். பொது சமூகத்தில் இந்த வார்த்தைகள் இப்போதுதான் அதிக அளவில் பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு மன அழுத்தம், டிப்ரஷன், மனப்பதற்றம் ஆகியவை புதிதல்ல. அதுவும் கிரிக்கெட் வீரர்களின் மன அழுத்தத் கதைகளைக் கேட்கும்போதும் மனம் கலவரமாகும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருமே தனிப்பட்ட முறையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கவுன்சலர்களாக வைத்திருப்பார்கள். சரிவை சந்திக்கும்போதெல்லாம் அவர்களை மீட்டுக்கொண்டுவர இந்த கவுன்சலர்கள் மிகப்பெரிய உதவியாக இருப்பார்கள்.
அணிக்குள் இடம் கிடைக்குமா, கிடைத்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமா, இரண்டு போட்டிகளில் ஆடவில்லை என்றால் வெளியே தூக்கிவிடுவார்களா, மீண்டும் அணிக்குள் கம்பேக் கொடுக்க முடியுமா, இன்ஜுரிகளில் இருந்து மீளமுடியுமா, இழந்த ஃபார்மை மீண்டும் சரிசெய்ய முடியுமா என்று கிரிக்கெட் வீரர்களுக்கான மன அழுத்தம் பல காரணங்களோடு இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடக் கிடைக்கும் வாய்ப்பு என்பது அதிகபட்சம் 10 - 15 ஆண்டுகள்தான். இதை வெற்றிகரமாக அமைப்பது எப்படி என்றுதான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் சிந்திப்பார். மன அழுத்தம் கொள்வார். இந்த மன அழுத்தங்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக வெளியே வந்தவர்கள்தான் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஸ்டூவர்ட் பிராட்.
பிராட் என்றதுமே இந்திய ரசிகர்களுக்கு பிராடைவிட நினைவுக்கு வருபவர் யுவராஜ் சிங்தான். 2007 டி20 உலகக்கோப்பையில் பிராட்டின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்ஸர்களாக்கி சாதனை படைத்தார் யுவராஜ் சிங். ஒரு சர்வதேசப் போட்டியில், அதுவும் ஒரு உலகக்கோப்பையில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களைக் கொடுத்தவரின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? எவ்வளவு மன அழுத்தம் கூடியிருக்கும், அதுவும் 21 வயது இளைஞனுக்கு இந்த மரண அடிகளையெல்லாம் தாங்கும் வலிமை இருந்திருக்குமா, தூக்கத்தில் எல்லாம் யுவராஜ் அடித்த சிக்ஸர்கள்தானே ஞாபகத்தில் வந்திருக்கும். ஆனால், சிக்ஸர்களால் மிரட்டப்பட்டவன், பீஸ் பீஸாகக் கிழிக்கப்பட்டவன்தான் இன்று 500 விக்கெட்டுகளோடு நம்மைப் பார்த்து புன்னகைக்கிறான்.
நேற்று முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது டெஸ்ட் கரியரின் 500-வது விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் பிராட்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்தத் தொடர்கூட பிராடுக்குப் பெரிய சவாலோடுதான் ஆரம்பித்தது. இங்கிலாந்தின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தவரை, கொரோனா சூழலிலும் தீவிரமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவரை முதல் டெஸ்ட்டில் பென்ச்சில் உட்கார வைத்தது இங்கிலாந்து அணி. தேர்வாளர்கள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் பிராட்.
``எனக்கு இப்படி ஒரு சூழல் ஏற்படும் என நினைக்கவேயில்லை. அதிகமான கோபம் வருகிறது. ஏமாற்றமும் விரக்தியாகவும் இருக்கிறது'' என்று சொல்லியிருந்தார் பிராட். முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்தது இங்கிலாந்து. இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸின் சேஸிங்கை இங்கிலாந்து பெளலர்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. பிராட் இருந்திருந்தால் நிச்சயம் விக்கெட்டுகள் வீழ்திருக்கும் எனத் தேர்வாளர்களையும், அந்த டெஸ்ட்டின் கேப்டன் பென் ஸ்டோக்ஸையும் சொல்ல வைத்ததுதான் பிராடின் வெற்றி. இரண்டாவது டெஸ்ட்டில் அணிக்குள் வந்தார்.
இரண்டு இன்னிங்ஸ்களிலுமே தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.
மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி தடுமாறிக்கொண்டிருந்தபோது பேட்டிங்கில் 62 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியவர், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் பிராத்வெயிட், சேஸ், ஹோல்டர், டவ்ரிச் என நான்கு முக்கிய விக்கெட்டுகளும் அடங்கும். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பிராத்வெயிட், கேம்ப்பெல், ரோச், பிளாக்வுட் என நான்கு விக்கெட்டுகள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கும் பெளலர்கள் வரிசையில் இப்போது 7-வது இடம் பிடித்திருக்கிறார் பிராட். முத்தையா முரளிதரனின் 800 விக்கெட்டுகள் சாதனையை வீழ்த்தக்கூடிய வாய்ப்பு இன்றைய சூழலில் இங்கிலாந்து வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், ஸ்டூவர்ட் பிராடுக்கும்தான் இருக்கிறது. இந்த இருவரும்தான் 500 விக்கெட்டுகளைக் கடந்து தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் பட்டியலில் இருக்கிறார்கள்.
இன்று 500 விக்கெட்டுகளைக் கடந்து வெற்றிகரமான பெளலராக மாறியிருப்பதற்குப் பின்னால் பிராடின் கடுமையான உழைப்பு இருக்கிறது. அதேபோல் இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் உதவியும் இருக்கிறது. 2007 செப்டம்பரில் டி20 உலகக் கோப்பையோடு ஸ்டூவர்ட் பிராடை கைவிடுடவில்லை இங்கிலாந்து அணி நிர்வாகம். அந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இலங்கைக்கு எதிரான தொடருக்கு பிராடை அழைத்துச்சென்றது இங்கிலாந்து. பிராடின் டெஸ்ட் அறிமுகம் இலங்கையில்தான் நடந்தது.
ஒரு தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கும் பிராடுக்கும் ஒரு வினோத ஒற்றுமை இருக்கிறது. முதல் டெஸ்ட்டில் பிராட் சேர்க்கப்பட மாட்டார். அந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து தோற்கும்.
அப்படித்தான் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் பிராட் சேர்க்கப்படவில்லை. இரண்டாவது டெஸ்ட்டில் பிராடுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், 36 ஓவர்கள் வீசி சமீந்தா வாஸின் விக்கெட்டை மட்டும்தான் எடுக்க முடிந்ததே தவிர பெரிய தாக்கத்தை பிராடால் ஏற்படுத்த முடியவில்லை. மூன்றாவது டெஸ்ட்டில் மீண்டும் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார் பிராட்.
அடுத்து 2008 மார்ச்சில் நியூசிலாந்துக்கு செல்கிறது இங்கிலாந்து. இங்கேயும் முதல் டெஸ்ட்டில் பிராடை சேர்க்கவில்லை. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தோல்வியடைகிறது. இரண்டாவது டெஸ்ட்டில் சேர்க்கப்படுகிறார் பிராட். இந்த டெஸ்ட்டில்தான் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டை எடுத்தவர், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவியாக நியூசிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளான ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் மற்றும் பெல்லின் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். பிராடின் பெயர் முதல்முறையாக கிரிக்கெட் வட்டத்தில் பாசிட்டிவாக உச்சரிக்கப்படுகிறது.
அடுத்த டெஸ்ட்டில் கெவின் பீட்டர்சனுடன் இணைந்து பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் போடுகிறார். பீட்டர்சன் சென்சுரி அடிக்க அன்று உடன் நின்றவர் பிராட்தான். டெய்ல் எண்டரான பிராட் அடித்த 42 ரன்கள் அன்றைய இன்னிங்ஸில் மிகவும் முக்கியாமானது. பெளலிங்கில் ராஸ் டெய்லரின் விக்கெட்டோடு இன்னும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் மீண்டும் 31 ரன்கள் நாட் அவுட், பெளலிங்கில் ஸின்க்ளெய்ர், எலியட் என இரண்டு முக்கிய விக்கெட்டுகள் என இங்கிலாந்து தொடர் வெற்றிபெற காரணமாக அமைகிறார் பிராட். 2007 உலகக் கோப்பையில் பதிந்த அவமானத்தை நியூசிலாந்தில்தான் துடைத்தார் பிராட்.
பெளலர் மட்டுமல்ல... தரமான பெளலிங் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட். 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட்டில் 169 ரன்கள் அடித்திருக்கிறார் பிராட். 102 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமாக இருந்த இங்கிலாந்து அணியை ஜோனத்தன் ட்ராட்டுடன் இணைந்து மீட்டெடுத்தார் பிராட். இங்கிலாந்து இந்த டெஸ்ட்டில் வெற்றிபெற்றது.
ஸ்டூவர்ட் பிராடின் கரியரில் மிக முக்கியமானது 2015 ஆஷஸ் தொடர். 2 - 1 என லீடிங்கில் இருந்த இங்கிலாந்தை நான்காவது டெஸ்ட்டிலேயே ஆஷஸைக் கைப்பற்றவைத்தார் பிராட். நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இந்த டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பிராடின் பிரமாதமான பெளலிங்கால் வெறும் 60 ரன்களுக்கு முதல் இன்னின்ஸில் ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. ரோஜர்ஸ், ஸ்மித், மார்ஷ், கிளார்க், வோக்ஸ், ஜான்சன், ஸ்டார்க், லயான் என வெறும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டூவர்ட் பிராட். இந்த 8 விக்கெட்டுகளோடுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300 விக்கெட்டுகளைக் கடந்தார் பிராட்.
34 வயதான ஸ்டூவர்ட் பிராடின் முகம் இப்போதும் பால் வடியும் குழந்தை முகமாகத்தான் இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரிய ஆக்ரோஷம் பெரும்பாலும் ஸ்டூவர்ட் பிராடிடம் இருக்காது. இடது கை பேட்ஸ்மேன். ஆனால், வலது கை வேகப்பந்துவீச்சாளர். இவரைப்போலவே இடது கை பேட்டிங், வலது கை பெளலிங் ஸ்டைலைக் கொண்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து பெளலிங்கில் பல சாதனைகளை நிகழ்த்திகொண்டிருக்கிறார்.
இதுவரை 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 501 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். பிராடின் ஃபிட்னஸ் மற்றும் ஃபார்முக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். நான்கு ஆண்டுகள் இதே ஃபார்மில் தொடர்ந்தால் முத்தையா முரளிதரனின் சாதனையை பிராட் எட்டிப்பிடித்துவிடுவார்.
வாழ்த்துகள் ஸ்டூவர்ட் பிராட்!
source https://sports.vikatan.com/cricket/how-stuart-broad-achieved-500-test-wickets
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக