Ad

திங்கள், 27 ஜூலை, 2020

கொரோனா: புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உயிரிழப்பு!

நியமன எம்.எல்.ஏ:

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 2,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 1,720 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 43 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மீதமுள்ள 1,109 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பாலன், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸின் பொதுச் செலாளராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து 2011-ல் வெளியேறிய முன்னாள் முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த பாலன் ரங்கசாமியுடன் வெளியேறினார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கும்போதும் ரங்கசாமியுடன் இருந்தவர்களில் இவரும் ஒருவர். அதன்பிறகு அக்கட்சியின் நியமன எம்.எல்.ஏ-வாகவும் ஏ.எஃப்.டி பஞ்சாலை வாரியத்தில் தலைவராகவும் பணியாற்றினார்.

ரத்த அழுத்தம் - சர்க்கரை நோய்:

68 வயதான இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அதன் காரணமாகக் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த 23-ம் தேதி மதகடிப்பட்டில் இருக்கும் ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதல்வர் நாராயணசாமியும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை அல்லது புதுச்சேரி அரசின் கோவிட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருமாறு வலியுறுத்தினார்கள். ஆனால், தான் இருக்கும் மருத்துவமனையிலேயே நல்லமுறையில் சிகிச்சை அளிப்பதாகக் கூறி மறுத்துவிட்டார் பாலன்.

Also Read: `கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு; தீவிர சிகிச்சையில் 5 பேர்' - அதிர்ச்சியில் புதுச்சேரி

ஏற்கெனவே ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலனின் உடல்நிலை நேற்று மாலையில் இருந்து மோசமடைந்தது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு புதுச்சேரி அரசு சார்பில் முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ என்.எஸ்.ஜே ஜெயபாலுக்கு கடந்த 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/india/balan-general-secretary-of-nr-congress-has-passed-away-due-to-corona-in-puducherry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக