புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். புளிச்சங்காடு கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி பள்ளத்திவிடுதி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த 10 மாதங்களுக்கும் மேலாகவே சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. `ஊராட்சியில் எனக்கு நெருக்கடி, அதனால், நான் வேலைக்கே போகவில்லை. இடமாறுதலும் கொடுக்க மறுக்கின்றனர். செலவுக்கே வழியில்லாமல் தவித்து வருகிறேன்’ என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் நண்பர்களிடம் தன் வேதனையைக் கூறி பகிர்ந்திருக்கிறார்.
ஊராட்சிக்குக் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டியிருந்ததால், அவருக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதியில் உள்ள தனது மாமானார் வீட்டிற்குச் சென்றவர், அங்கிருந்து நண்பர்களுக்குப் புகைப்படத்துடன் மீண்டும் ஒரு பதிவை அனுப்பியிருக்கிறார். ``வீட்டு வரவு செலவு, வாடகை கூட கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறேன். கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். மதுவில் விஷம் கலந்து வைத்துள்ளேன்.
அதைக் குடித்துவிட்டுச் சாகப்போகிறேன்" என்று அனுப்பிவிட்டு செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார். இதையடுத்து, அவரது நண்பர்கள், உறவினர்களிடம் தகவலைக் கூற, முருகேசனை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து வடகாடு போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட முருகேசனுக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இதுபற்றி திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரிடம் கேட்டபோது, ``மே மாதம் ஊராட்சியிலிருந்து 50,000 பணம் எடுத்திருக்காரு. வேலைக்கு அடிக்கடி லீவு போட்டுருவாரு. கூப்பிட்டுக் கண்டிப்போம். ஊராட்சியில் அதிகாரிகளிடம் இருந்து எந்த நெருக்கடியும் இல்லை. அவருக்கு குடும்பத்தில் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்திருக்கக்கூடும்" என்றார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
source https://www.vikatan.com/news/crime/panchayat-secretary-commits-suicide-in-pudukkottai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக