Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

நீலகிரி: `35 ஆண்டுகால போராட்டத்துக்கு விடிவு!' -சாதிச் சான்று அரசாணையால் உற்சாகம்

மலையாள மொழி பேசும்  பிரிவினர்களில் ஈழுவா மற்றும் தீயா என்ற பெயரில் தங்களை அழைத்துக்கொள்ளும் மக்கள், கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

ஈழுவா மற்றும் தீயா

இந்த மக்களுக்குக் கடந்த 1984-ம் ஆண்டு வரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின்கீழ் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், சில காரணங்களுக்காக இந்த மக்களுக்கு சாதிச் சான்றிதழை வழங்குவதற்குத் தமிழக அரசு தடை விதித்தது.

இந்தத் தடையின் மூலம் தங்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி பாதிக்கப்படுவதாகவும் எனவே தங்களுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து ஈழுவா மற்றும் தீயா மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக, இந்த மக்கள் அதிகம் வாழும் நீலகிரி மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இருப்பினும் கடந்த 35 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

ஈழுவா மற்றும் தீயா

இந்தநிலையில் நேற்று தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில் ,`தமிழகத்தில் வாழும் ஈழுவா மற்றும் தீயா மக்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலின்கீழ் சாதிச்சான்று வழங்கலாம்' என உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்த மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்துகொண்ட நீலகிரி மாவட்ட ஈழுவா, தீயா சங்கத் தலைவர் சாத்தப்பன் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய மக்கள் சட்ட மைய தமிழ் மாநில இயக்குநர் வழக்கறிஞர் விஜயன் ஆகியோர், ``எங்களுக்கு வழங்கிவந்த சாதிச் சான்று நிறுத்தப்பட்டு, கடந்த 35 ஆண்டுகளாக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது.

ஈழுவா மற்றும் தீயா

எங்களின் கோரிக்கையை பரிசீலிக்கத் தமிழக அரசால், ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ரா தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 60 நாள்களுக்குள் விசாரணை மேற்கொண்டு, அறிக்கையைத் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Also Read: நீலகிரி: தபால்காரர் சிவனுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்! - நெகிழவைத்த கர்நாடக பா.ஜ.க எம்.பி

இதன்படி இக்குழு விசாரணை மேற்கொண்டு ,`ஈழுவா தீயா மக்களுக்கு சாதிச் சான்று வழங்கலாம்' எனப் பரிந்துரை செய்தது. இதற்கான உத்தரவை நேற்று தமிழக அரசு அறிவித்தது. கடந்த 35 ஆண்டுகளாக எங்களது குழந்தைகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பால், எங்களது குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஈழுவா மற்றும் தீயா

குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம். இது 35 ஆண்டுக்கால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி" என்றனர் உற்சாகத்துடன்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tn-government-clears-ban-on-community-certificate-for-ezhuva-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக