Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

அரை டஜன் அமைப்புச் செயலாளர், ஆளுக்கொரு தொகுதி... என்ன நடக்கிறது அ.தி.மு.க-வில்?

சமீபத்தில் அ.தி.மு.க-வில் கட்சி ரீதியாக புதிய மாவட்டங்களை உருவாக்கியும், புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தும் அறிவிப்பு வெளியானது. கடந்த பத்து தினங்களுக்கு முன்பே இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டாலும் சிலரது எதிர்ப்பின் காரணமாக அறிவிப்பு தள்ளிப்போனது. இதனால் மாவட்ட செயலாளர்கள் நியமனம் நீண்ட இழுபறிக்குப் பின்பே வெளியானது. ஏற்கெனவே அ.தி.மு.க-வில் 52 மாவட்டச் செயலாளர்களும் ஐம்பது அமைப்புச் செயலாளர்களும் பதவியில் இருக்கிறார்கள். இந்நிலையில் இப்போது புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியானதும் சத்தமில்லாமல் புகைச்சலும் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க நிர்வாகிகள் அறிவிப்புக்குப் பிறகு ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து அந்த கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் விசாரித்தபோது, ``அ.தி.மு.க-வின் எதிர்காலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் இருக்கிறது என்பது எடப்பாடிக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக தனது தலைமையில் அ.தி.மு.க நீடிக்கலாமா, வேண்டாமா என்கிற கேள்விக்கு பதிலும் இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில்தான் இருக்கிறது. அதனால் கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி. அதற்கான முதல் படியாக மாவட்ட நிர்வாகிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முடிவுக்கு வந்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க வில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் மிகப்பெரிய அளவில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், பன்னீர் அணிக்கு எதிர்பார்த்த அளவில் பதவிகள் இந்த மாற்றத்தில் கிடைக்கவில்லை. இப்போது மொத்தமாக 69 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் ஆறு மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே பன்னீர் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இந்த முறை 25 மாவட்டங்களில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இன்னும் சில மாவட்டங்களில் பிரிப்போ அல்லது மாற்றமோ நடைபெறாமல் உள்ளது. அதற்குக் காரணம் கட்சிக்குள் கச்சை கட்டும் சர்ச்சையும் ஒருகாரணம்” என்கிறார்கள்.

அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்டத்தைப் பிரித்து பன்னீரின் ஆதரவாளர் லெட்சுமணனை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அதே போல் திருநெல்வேலியைப் பிரிக்கவும் பன்னீர் திட்டமிட்டதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சென்னையில் சத்யா கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க திட்டமிட்டது. அதற்கு சத்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் முதலில் இருபத்து ஐந்து மாவட்டங்களில் மட்டும் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் பிற மாவட்டங்களில் மாற்றம் வரும் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.

எடப்பாடி- பன்னீர்

அதே நேரம் அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்து அழகுபார்த்துள்ளது கட்சித் தலைமை. புத்திசந்திரன், பரஞ்சோதி, உள்ளிட்ட சிலர் மாவட்டப் பொறுப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுக்கு அமைப்புச் செயலாளர் பதவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு வரும் என்று காத்திருந்தார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால் அவரை கொள்கை பரப்பு துணைச்செயலாளர் என்கிற பதவியை கொடுத்து ஆஃப் செய்துவிட்டார்கள். மாவட்டப் பொறுப்பை எதிர்பார்த்த சின்னையா, முன்னாள் எம்.பி இளவரசன் உள்ளிட்டவர்களுக்கு உப்பு சப்பில்லாத எம்.ஜி.ஆர் மன்றப் பொறுப்பை வழங்கியுள்ளார்கள். பிற பொறுப்புகளை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அமைப்புச் செயலாளர் என்கிற பதவியை கட்சியில் ஓய்வு பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் பதவியாகவே மாற்றிவிட்டார்கள் என்கிறார்கள். யாருக்குப் பதவி கொடுக்கவேண்டும் என்றாலும் அமைப்புச் செயலாளர் என்று அறிவிப்பைக் கட்சி தலைமை அறிவித்துவிடுகிறது. இதுவரை 61 பேர் அமைப்புச் செயலாளர் பதவியில் இருக்கிறார்கள். அவர்களின் பணி என்ன என்றுகூட இதுவரை விளக்கவில்லை.

Also Read: எடப்பாடி பழனிசாமியைத் தெரியும்... அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா?

அதே போல் மற்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி மாவட்டச் செயலாளர்கள் தேர்வையே ஒரு மினி வேட்பாளர் தேர்வாக வைத்துவிட்டார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள 69 மாவட்டச் செயலாளர்களுக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் உறுதி என்கிற பேச்சு அ.தி.மு.க-வில் பலமாக உள்ளது. இவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு நபரை சிபாரிசு செய்தால் 150 சீட் இந்த முறையில் நிரப்பப்படலாம். அப்படி என்றால் அமைப்புச் செயலாளர்களாக உள்ள 61 பேரில் எத்தனை நபர்களுக்கு சீட் கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அதே போல், வரைமுறை இல்லாமல் அமைப்புச் செயலாளர் பதவியில் ஆட்களை நியமிப்பதும் அழகா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் போல, சிதம்பரத்துக்கு, தங்கபாலுக்கு என இடங்களைப் பிரிப்பது போல பிரித்திருக்கிறார்கள். இது, கட்டுக்கோப்பான தலைமைக்கு அழகல்ல என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க தலைமைக் கழக கூட்டம்

ஆனால் தலைமை தரப்பிலோ வேறுமாதிரியாக சொல்கிறார்கள். ``கட்சி இப்போதுள்ள நிலையில் யாரையும் ஒதுக்கிவைக்க முடியாது. பலரும் மாவட்டச் செயலாளர் பதவியைக் கேட்கிறார்கள். அனைவருக்கும் கொடுக்க முடியாது என்கிற காரணத்தினாலே அமைப்புச் செயலாளர் என்று கௌரவமான பதவியை வழங்கியுள்ளோம்” என்கிறார்கள். 

அ.தி.மு.க-வில் அலங்காரப் பதவியாக அமைப்புச் செயலாளர் பதவியைப் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமான பணிகளை செய்பவர்களுக்குப் பதவியை வழங்கினால் அ.தி.மு.க பழைய பாணியில் பகட்டாக மின்னும் என்கிற எண்ணம் அனைத்து அ.தி.மு.க தொண்டர்களிடமும் உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aiadmk-cadres-unhappy-over-partys-reshuffling

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக