Ad

திங்கள், 27 ஜூலை, 2020

WHO: `கொரோனா வைரஸ் உலகத்தையே மாற்றிவிட்டது!’ - டெட்ரோஸ்

சீனாவில் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பெரும்பான்மையான நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றைக் குணப்படுத்த அதிகாரபூர்வமாக மருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதாலும் எளிதில் கொரோனா பரவுவதாலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. ஆரம்பத்தில் கடுமையாகப் பாதிப்படைந்த பல நாடுகளும் தற்போது பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும் ஆரம்பத்தில் குறைவாகப் பாதிப்படைந்த நாடுகள் தற்போது கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

உலக சுகாதார நிறுவனம்

கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் பேசுகையில், ``பொதுசுகாதார அவசரநிலை பிரகடனம் கடந்த ஜனவரி 30-ம் தேதி அறிவிக்கப்பட்டபோது சீனாவைத் தவிர்த்த வெளியே உள்ள நாடுகளில் 100-க்கும் குறைவான பாதிப்புகளே இருந்தன. வைரஸ் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், தற்போது உலகளவில் தற்போது கிட்டத்தட்ட 16 மில்லியன் நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். வைரஸால் பாதிப்படைந்தவர்களில் சுமார் 6.4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். கடந்த ஆறு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது” என்றார். அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.

கொரோனா தொற்று

உலக சுகாதார அமைப்பின் தலைவர் தொடர்ந்து பேசும்போது, ``கொரோனா வைரஸ் உலகத்தையே மாற்றிவிட்டது. உலக நாடுகளையும் மக்களையும் ஒன்றிணைத்துவிட்டது. கொரோனா தொடர்பான விஷயங்களில் மற்ற நாடுகளுக்கு ஆதரவளிக்க உலக சுகாதார அமைப்பானது கடந்த ஆறு மாதங்களாக அயராது உழைத்து வருகிறது. இதற்காக உழைத்தவர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாண்டது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பி உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதிகளையும் நிறுத்தினார். இதனை தொடர்ந்து வைரஸ் தோன்றியது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பல நாடுகளும் அழுத்தம் கொடுத்தன. இந்த நிலையில் ஆய்வினை மேற்கொள்ள சிறப்பு குழு ஒன்றும் சீனாவுக்கும் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read: கொரோனா: `இந்தியா தைரியமாக நடவடிக்கைகளை எடுத்தது!’ - WHO பாராட்டு



source https://www.vikatan.com/news/world/corona-changed-our-world-says-who

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக