Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

கோவை: `சச்சின் போட்டோ விளம்பரம்; 10% வட்டி... 8,200 பேர் முதலீடு!’ - அதிர வைத்த மோசடி

கோவை, ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மென்ட் என்ற எம்.எல்.எம் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. மணிகண்டன் மற்றும் அவர் மகன் சஞ்சய் குமார் ஆகியோர் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். அவர்கள், `எங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் நூற்றுக்கு 0.5% வட்டி தருவோம்.

சச்சின் உடன் மணிகண்டன்
சஞ்சய்குமார்

Also Read: `சச்சின் உள்ளிட்ட செலிபிரிட்டிகளுக்கு விற்கப்பட்ட ஏரி நிலம்?’ - அதிரவைத்த ரியல் எஸ்டேட் மோசடி

முதலீடு செய்ய ஆள் சேர்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்’ என்று ஆசையைத் தூண்டியுள்ளனர். மேலும், அவர்களை நம்ப வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கருடன் இருந்த புகைப்படங்களைக் காண்பித்தும் விளம்பரங்கள் செய்துள்ளனர்.

அதனால், அவர்கள் சொன்னதை நம்பி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர். இதுகுறித்து அதில் பணம் போட்ட முதலீட்டாளர்கள் கூறுகையில், “குறைந்தபட்சம் ரூ.56,250 முதலீடு செய்ய வேண்டும். அப்படி முதலீடு செய்தால் தொடர்ந்து 10 மாதங்களுக்கு 10 சதவிகிதம் வட்டி கொடுப்போம் எனக் கூறியிருந்தனர். அதை நம்பி கோவையில் மட்டும் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோரும், தமிழகம் முழுவதும் 8,200 பேரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளோம். ஆரம்பத்தில் பணம் சரியாகக் கொடுத்து வந்தனர். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணம் கொடுக்கவில்லை.

மணிகண்டன் வீடு

யாரும் அவரைப் பார்க்கவும் முடியவில்லை. செல்போனில்தான் பேசிவந்தார். திடீரென அவர் வீட்டை காலி செய்து ஊரைவிட்டு போவதாகக் கேள்விப்பட்டோம். அதனால்தான் இங்கு கூடியுள்ளோம். வீட்டுக்குள் 18 அடியாட்களை வைத்துள்ளார். ‘உங்கனால என்ன முடியுமோ அதப்பண்ணுங்க’ என்று பதிலக்கிறார்கள். எங்களுக்கு நாங்கள் கட்டிய பணம் வேண்டும்” என்றனர்.

இதனிடையே பணத்தைக் கேட்டும், மணிகண்டன் மற்றும் சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்களின் வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும், முதலீட்டாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்ற பிரிவிலும் இது தொடர்பாகப் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் மணிகண்டன் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் பல கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

முதலீட்டாளர்கள்

இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-finance-company-scam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக