பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
ஒன்று மட்டும் இருந்தால்தான் மதிப்பு. ஒன்றுக்கு மேல் இருந்தாலே சாய்ஸ்தான் என்பார்கள். ஒன்றுக்கு மேல் அதிக பொருள்கள் வரும்போது நல்ல பொருள்களைக் கூட புறக்கணித்துவிடுவோம். அவ்வாறு இல்லாமல் பாரம்பர்ய தனித்துவமான அடையாளத்தை ஆக்கபூர்வமாக ஒரு பொருளுக்கு அளிப்பதுதான் புவி சார் குறியீடு (Geographical indication). தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் கொடுக்கிறது.
இவ்வாறு ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் அப்பொருளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறது. அப்பொருளின் ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட பொருளின் தயாரிப்பில் ஈடுபடும் பலருக்கு முழுமையான பலன் கிடைக்கும். வேறு பகுதியில் புவிசார் குறியீட்டு பொருளைத் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அபராதமும் விதிக்கலாம். இதற்கென தனியாக முத்திரையுடன் கூடிய வாக்கியம் கொடுக்கப்படும்.
#இந்தியாவில்...
இந்தியாவில் புவி சார் குறியீடுகள் சட்டம் 1999-ல் நிறைவேற்றப்பட்டு... 2002-ல் விதிமுறைகள் வகுக்கப்பட்டு 2003-ல் நடைமுறைக்கு வந்தது.
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவு சார் சொத்துரிமைக் கழகம்தான் இக்குறியீட்டை வழங்குகிறது. முதன்முதலில் டார்ஜிலிங்கின் தேநீர் 2004 - 2005-ம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. காஷ்மீரின் குங்குமப்பூ மற்றும் மணிப்பூரின் chak-hao எனும் கறுப்பு அரிசி வரை மே 2020 வரை 365 பொருள்கள் புவி சார் குறியீடு பெற்றுள்ளன.
இந்தியாவில் அதிகமாக கர்நாடக மாநிலம் 47 பொருள்களுக்கும், மஹாராஷ்ட்ரா 33 பொருள்களும் பெற்றுள்ளன. கோவா மாநிலம் இரு பொருள்களையும் பெற்றுள்ளது.
புதுச்சேரியில் வில்லியனூர் மற்றும் திருக்கன்னூர் கைவினைப் பொருள்கள் ஆகிய இரண்டிற்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
#தமிழகத்தில்
தமிழகத்தில் பண்ருட்டி பலாப்பழம், பழனி பஞ்சாமிர்தம், கோவை வெட் கிரைண்டர், தஞ்சாவூர் வீணை, பத்தமடை பாய், மதுரை மல்லி, தஞ்சாவூர் பொம்மை உட்பட 35 பொருள்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இதில் 2019-ல் மட்டும் தமிழகத்திற்கு 7 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் 35வது பொருளாக கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு கிடைத்தது.
ஏழாண்டு காத்திருப்பிற்கு பின் தஞ்சை கைவினைப்பொருள் மற்றும் அரும்பாவூர் சிற்பங்களுக்கு கிடைத்த நிகழ்வுகளும் உண்டு.
பாரம்பர்ய பெருமைமிக்க பல தமிழக பொருள்கள் இக்குறியீடு கோரி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேறு பகுதியினர் யாரும் தயாரிக்க முடியாது என்பதால் இக்குறியீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உதாரணத்திற்கு திருநெல்வேலி அல்வா சுவைமிக்கதாக இருப்பதற்கு தாமிரபரணி நீரும், அத்தொழிலாளர்களின் தயாரிப்பு பக்குவமும் காரணம். எனவே, இதுபோன்ற பொருள்களுக்குத் குறியீடு வழங்குவது உரிய கெளரவத்தைக் கொடுக்கிறது.
#புவிசார் குறியீடு
புவிசார் குறியீடு என்பது ஒரு நாட்டின் நிலப்பரப்பில் அல்லது ஒரு பகுதியிலிருந்து உருவானவை எனக் குறிக்கும். உற்பத்தி செய்யும் பொருள்களின் குணாதிசியத்தைக் கொண்டிருப்பது அடிப்படை காரணமாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.
TRIPS ஒப்பந்தத்தின் படி ஒரு வகை அறிவுசார் சொத்தாக கருதப்படுகிறது. இதன் வர்த்தக முத்திரைகள் மதிப்புமிக்கவை.
உணவுப் பொருள்கள், கைவினைப்பொருள்கள், தொழில்துறை பொருள்கள், பானங்கள் மற்றும் விவசாய தயாரிப்புகளுக்கு புவியியல் குறிச்சொற்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அப்பொருள்களுக்கு உரிய அறிவுசார் பாதுகாப்பு கிடைக்கிறது. இப்பொருள்களின் தரம் குறைந்தாலோ, கலப்படம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
#எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை கிண்டியில் இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் புவியியல் சார் குறியீடு வழங்கும் அலுவலகம் செயல்படுகிறது. எந்த ஒரு பொருளுக்கும் தனிநபர் விண்ணப்பிக்க முடியாது.
தொழில் செய்யும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மூலமாக விண்ணப்பிக்கலாம். பரவலாக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், நெடுங்காலம் அத்தொழில் செய்துகொண்டிருக்கவும் வேண்டும்.
படிவத்தில் அப்பொருள் குறித்த விபரம், பாரம்பர்யம் முதலியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென உள்ள நிபுணர் குழுவால் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆய்வு செய்யப்பட்டு அரசிதழில் பதிவு செய்து குறிப்பிட்ட மாதங்கள் வரை ஆட்சேபணை வருகிறதா என்று பார்ப்பார்கள்.
அதன்பிறகே மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
#பயன்கள்
புவி சார் குறியீடு பெறுவதன் மூலம் விலை நிர்ணயிக்கும் உரிமை ஏற்படும். உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். விவசாய இடுபொருள்கள் மற்றும் பாரம்பர்ய பொருள்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதால் இத்தொழிலில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பொள்ளாட்சி இளநீர், திருப்பூர் ஏற்றுமதி ஆடைகள் ஆகியவை புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளன. இதே போல பல பாரம்பர்யமிக்க பொருள்கள் இக்குறியீடு பெற்று உலகளவில் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும்.
- மணிகண்டபிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-geographical-indication
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக