Ad

வியாழன், 30 ஜூலை, 2020

நினைவகமாக மாறும் போயஸ் கார்டன் இல்லம்... சசிகலாவின் உடமைகள் என்ன ஆனது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வேதா நிலையம் 24,322 சதுர அடி பரப்பளவு கொண்டது. அங்கு அமைந்துள்ள நிலம் மற்றும் கட்டடங்களைக் கையகப்படுத்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி தமிழக அரசு முடிவுசெய்தது. பின்னர், கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதற்கான அவசரச் சட்டத்தை கடந்த மே மாதம் 22-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்தார்.

போயஸ் கார்டன் இல்லம்

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், வேதா நிலையத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், முதல்வரின் இல்லமாக அதை ஏன் மாற்றக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை, இதை நினைவு இல்லமாக மாற்றிவிட்டாலே போதும் என்று நினைக்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபாவும் தீபக்கும் போயஸ் கார்டன் இல்லம் தங்களுக்கு உரிமையானது என்றும், அதை நினைவகமாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே, ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்ற அடிப்படையில் தீபாவும் தீபக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

போயஸ் கார்டன் இல்லம்

அதே நேரம், வேதா நிலையத்தைக் கையகப்படுத்தி, அதை நினைவகமாக மாற்றும் முடிவில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவதற்காக ரூ.68.9 கோடியை சென்னை சிவில் நீதிமன்றத்தில் சமீபத்தில் டெபாசிட் செய்தது. 24,322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையத்துக்கான இழப்பீட்டுத் தொகையாக இதை தமிழக அரசு செலுத்தியுள்ளது. இந்தத் தொகையிலிருந்து ரூ.36.9 கோடி, ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி, அபராதம் உள்ளிட்டவற்றுக்கு வருமான வரித்துறையிடம் செலுத்தப்படும். மீதித்தொகைதான் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

இழப்பீடு விவகாரத்தைப் பொறுத்தவரை இன்னொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 1991-ல் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, 1996-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து வேதா நிலையத்தில் ரெய்டு நடைபெற்றபோது தங்கம், வெள்ளி உள்பட ஏராளமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

போயஸ் கார்டன் இல்லம்

அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் இப்போது பணி ஓய்வுபெற்றுவிட்டனர். அவர்களிடம் பேசியபோது. "ரூ.68.9 கோடி இழப்பீடு கொடுத்துவிட்டு, வேதா நிலையத்தை எடுத்துக்கொள்வதாகத் தமிழக அரசு கூறுகிறது. இது தவறு. ஏனெனில், போயஸ் கார்டன் இல்லம் உட்பட ஜெயலலிதாவின் சொத்துகள் விசாரணையின்போது நீதிமன்றத்தால் முடக்கப்பட்டன. இன்றுவரை அந்த நிலை நீடிக்கிறது. சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில், அந்தச் சொத்துகளை ஜெயலலிதா தரப்பினர் அனுபவித்துக்கொள்ளலாமே ஒழிய, அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது. அந்தச் சொத்தை விற்கவோ வாங்கவோ முடியாது. உச்ச நீதிமன்றம், அந்தச் சொத்துகளை அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. எனவே, அது அரசின் சொத்து. அதற்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை” என்றனர்.

Also Read: பா.ஜ.க-வின் அதிகாரப் பசி… காங்கிரஸ் சீனியர்களின் பதவி ருசி! #RajasthanPolitics

போயஸ் கார்டன் வேதா நிலையத்தில்தான் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் வசித்துவந்தார். தற்போது அவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார். ஆனால், அவரது பல உடைமைகள் வேதா நிலையம் இல்லத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோதுகூட, அங்கு சசிகலாவின் உடைமைகள் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான எந்த ஆவணத்திலும் சசிகலா உடைமைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

வழக்கறிஞர்களுடன் சசிகலரி

இது குறித்து நம்மிடம் பேசிய சசிகலா ஆதரவாளர்கள், “சசிகலாவின் உடைமைகள் போயஸ் கார்டன் இல்லத்தில் இருப்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். வருமானவரித் துறையினர் சோதனையிட்டபோதும், சசிகலாவின் உடைமைகள் அங்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், அவரின் நெருங்கிய உறவினர்கள் இங்குதான் இருக்கிறார்கள். உடைமைகளை எடுத்துக்கொள்ளுமாறு அவர்களிடம் ஆட்சியாளர்கள் சொல்லியிருக்கலாம்” என்று வருத்தத்துடன் கூறினர்.

வேதா நிலையம் நினைவகமாக மாற்றப்படுவதற்கு தீபாவும் தீபக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “வேதா நிலையம் எங்களுடைய பாரம்பர்ய சொத்து. அது, நாங்கள் வளர்ந்த இடம். நியாயமற்ற முறையில் அதைச் சூறையாடுகிறார்கள். இதை நாங்கள் சட்டரீதியாகத் தடுத்து நிறுத்துவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

தீபா

சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்குள் நினைவு இல்லமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுமைபெற்றுவிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/jayalalithaa-house-to-be-converted-into-a-memorial-what-about-sasikalas-things-there

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக