Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் வேண்டாம்!

தமிழகத்தில் மழைக்காலமும் அதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் சீஸனும் தொடங்கிவிட்டன. ஏற்கெனவே கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த டெங்கு மேலும் ஒரு பெரும் சவாலாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Dengue

சென்னை மாநகராட்சி, டெங்கு காய்ச்சல் குறித்த அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும், அதைத் தடுக்க வேண்டிய முறைகள் குறித்த வழிகாட்டல்களும் அடங்கியுள்ளன. கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீர் தேக்கத் தொட்டிகள் அனைத்தையும் கொசு புகாத வண்ணம் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும் என்றும், வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்காத வகையில் தேவையற்ற பொருள்களை அகற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்புக் குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்ற சித்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்தலாம் என்றும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கொரோனாவின் அறிகுறிகளில் ஒன்று, காய்ச்சல். டெங்குவுக்கும் அதுவே முக்கிய அறிகுறி என்பதால், லேசான காய்ச்சல் ஏற்பட்டால்கூட இது கொரோனாவா இல்லை டெங்குவா என்ற குழப்பம் ஏற்படலாம். ஆகையால், கொரோனா மற்றும் டெங்கு அறிகுறிகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் குறித்தும், டெங்குவிலிருந்து தற்காத்துக்கொள்ள என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றியும் பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.

டெங்கு

`ஏடிஸ் எகிப்தி (Aedes aegypti)' என்ற ஒருவகை கொசுவால் ஏற்படக்கூடியதே டெங்கு காய்ச்சல். சிக்குன் குனியா காய்ச்சலும் இந்த வகை கொசுவால்தான் ஏற்படுகிறது. மற்ற வகை கொசுக்களிலிருந்து ஏடிஸ் எகிப்தி வகை கொசுக்களை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். இவற்றின் உடல் மற்றும் கால்களில் வெள்ளை நிற வரிகள் காணப்படும். அதனால் இவற்றை `புலி கொசு' என்றும் கூறுவார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஒருவரை ஏடிஸ் எகிப்தி கொசு கடிக்கும்போது, எளிதில் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்பாகிறது. இது கொரோனாவை போல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தொற்றுநோய் இல்லை. ஏடிஸ் எகிப்தி வகை கொசு ஒருவரைக் கடிப்பதால் மட்டுமே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்!

டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு முதல் மூன்று நாள்களுக்குக் கடுமையான காய்ச்சல் இருக்கும். உடலின் வெப்பநிலை 101 டிகிரிக்கு மேல் இருக்கும். பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டாலும் இந்தக் காய்ச்சல் குறையாது. டெங்குவில் இந்த முதல் மூன்று நாள்களை ஃபெப்ரைல் பேஸ் (febrile phase) என்பார்கள். இதற்கடுத்த மூன்று நாள்களை கிரிட்டிகல் பேஸ் (critical phase) என்பார்கள். இந்த கிரிட்டிகல் பேஸ் நிலையில் உடலின் காய்ச்சல் முழுவதும் குறைந்து கைகால், பாதம் எல்லாம் ஜில்லென்று இருக்கும். இந்த நிலையில்தான் உடலின் ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகள் (Platelets) குறையத் தொடங்கும்.

symptoms of dengue

மூட்டுவலி, தசைவலி, பல் ஈறுகளில் ரத்தம் கசிதல் இவையும் டெங்குவின் அறிகுறிகள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றின் உள்ளே ரத்தக் கசிவு ஏற்படும். இந்த ரத்தக் கசிவு இரைப்பைக்கு மேலே ஏற்பட்டால் அது ரத்த வாந்தியாக வெளிப்படும். இரைப்பைக்குக் கீழே, குடல் பகுதிகளில் இந்த ரத்தக் கசிவு ஏற்பட்டால் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கறுப்பு நிறத்தில் இருக்கும். வயிற்றுக்குள் ஏற்படும் இதுபோன்ற ரத்தக் கசிவால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். இதுவும் டெங்குவின் முக்கிய அறிகுறிகளுள் ஒன்று.

கொரோனாவும் டெங்குவும்!

கொரோனா, டெங்கு இரண்டு நோய்களும் வைரஸ்களின் காரணமாகத்தான் ஏற்படுகின்றன. ஆனால், கொரோனா தொற்று நோய். கொரோனா பாதிப்பு உள்ள ஒருவரைத் தொடுவதாலும், அவர்களின் சளி, இருமல் வழியே வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமாகவும் இந்த நோய் எளிதில் மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளும். ஆனால், டெங்கு தொற்றுநோய் அல்ல. ஏடிஸ் எகிப்தி வகை கொசு கடிப்பதாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

கொரோனாவைப் பொறுத்தவரையில் அந்த நோய்த்தொற்றால் ஏற்படும் காய்ச்சல் பெரும்பாலும் மிதமான அளவிலேயே இருக்கும். ஆனால், டெங்குவைப் பொறுத்தவரை முதல் மூன்று நாள்களுக்குக் கடுமையான காய்ச்சல் இருக்கும். இருமல், மூச்சுத்திணறல் எல்லாம் டெங்கு காய்ச்சலில் ஏற்படாது. கடுமையான தலைவலி, மூட்டுவலி, தசைவலி போன்றவை டெங்குவின் முக்கிய அறிகுறிகள்.

Also Read: கொரோனாவா, சைனஸ் பிரச்னையா... வித்தியாசம் காண்பது எப்படி?

தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஏடிஸ் எகிப்தி கொசுவின் காரணமாகவே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்பதால் வசிக்கும் இடங்களைச் சுற்றி எங்கும் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். 10 மிலி தண்ணீர் தேங்கியிருந்தாலும்கூட இந்தக் கொசு அதில் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டுச்செல்லும். அதனால் வீடு, அலுவலகம் மற்றும் மக்கள் வசிக்கும் இடங்களைச் சுற்றிலும் தேங்காய் சிரட்டைகள், பேப்பர் கப்புகள், பாட்டில்கள் போன்ற தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள குப்பைகளைப் போட்டுவைக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டிகளை கொசுக்கள் நுழையாதபடி நன்றாக மூடிவிட வேண்டும்.

Dengue

குளிர்சாதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, விண்டோ ஏசி பொருத்தப்பட்டுள்ள ப்ளேட் போன்றவற்றில் சேரும் தண்ணீரை வாரம் ஒருமுறை அகற்றிவிட வேண்டும். குழந்தைகளைக் கொசு கடிக்காமல் இருக்க முழுக்கை உள்ள ஆடைகளை அணிவிக்கலாம். இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் வீடுகளில் கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தலாம். கொசு கடிக்காமல் இருக்கப் பயன்படுத்தப்படும் க்ரீம்களை கைகால்களில் தடவிக்கொள்ளலாம். வீட்டில் உள்ள ஜன்னல்களின் வழியே கொசு நுழையாமல் இருக்கக் கொசுவலை கட்டி வைக்கலாம்.

டெங்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

டெங்கு காய்ச்சலோ, டெங்குவிற்கான அறிகுறிகளோ தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி அவரின் பரிந்துரையின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.

hospital

டெங்கு காய்ச்சலின் முதல் நிலையிலேயே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து குணமடைய நிறைய வாய்ப்புள்ளது. ஆனால், டெங்குவின் இரண்டாம் நிலையில் மருத்துவமனைக்குச் சென்றாலோ, சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறினாலோ அவர்களைப் பிழைக்க வைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏதேனும் காய்ச்சல், கொரோனா, டெங்குவிற்கான அறிகுறிகள் அல்லது வேறு ஏதாவது நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் நீங்களாகவே மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது" என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-symptoms-and-precautionary-measures-to-dengue-fever

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக