Ad

வியாழன், 30 ஜூலை, 2020

ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங் ஏன் அவசியம்? மனநல மருத்துவர் விளக்கம்

கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தவரை சித்தி - சித்தப்பாவின் விட்டுக்கொடுத்தல், அத்தை - மாமாவின் அன்னியோன்னியம் என்று பார்த்து வளர்ந்தவர்கள் நம் முந்தைய தலைமுறையினர். இப்படிப் பார்த்து வளர்ந்ததே அவர்களுக்குத் தாம்பத்திய பாடத்தை சொல்லிக்கொடுத்தது. தனிக்குடித்தனங்கள் பெருகிய பிறகு, ஆண், பெண் இருவரும் வேலைபார்க்கத் தொடங்கிய பிறகு, அப்பாவின் கேலியும் அம்மாவின் வெட்கப் புன்னகையுமே அரிதாகிவிட்டது. இது காலத்தின் மாற்றம். இந்த மாற்றத்தின் தொடர்ச்சியாகத்தான் வீட்டுப் பெரியவர்கள் சொல்லித் தர முடியாத திருமண பாடத்தை, `ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்’ என்ற பெயரில் உளவியல் நிபுணர்கள் சொல்லித்தர ஆரம்பித்தார்கள். வெற்றிகரமான திருமணத்துக்கு ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங் ஏன் அவசியம், ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்கில் என்னென்ன பேசுவார்கள், கொரோனா நம் வீட்டு பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் திருமண வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்க ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங் உதவி செய்யுமா? மனநல மருத்துவர் வாசுகி மதிவாணன் சொல்கிறார்.

எதிர்பார்ப்புகளைச் சரி செய்வோம்!

மனநல மருத்துவர் வாசுகி மதிவாணன்

தங்களுக்கான வாழ்க்கைத்துணையைத் தாங்களே தீர்மானிக்கிற சுதந்திரத்துடன்தான் இன்றைய தலைமுறையினர் இருக்கிறார்கள். கூடவே, நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாத சில எதிர்பார்ப்புகளுடனும் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பல பேரிடம்தான் பார்த்த நல்ல இயல்புகள் அத்தனையும் தன் லைஃப் பார்ட்னரிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய மெச்சூரிட்டியைப் பொறுத்து, லேசாகவோ, அழுத்தமாகவோ `குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. உங்களையும் சேர்த்து’ என்று புரிய வைப்போம்.

நியாயமான எதிர்பார்ப்புகளை நியாயப்படுத்த...

Love (Representational Image)

திருமணம் செய்யவிருக்கிற ஜோடியினர் ஒன்று ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்காக என்னைச் சந்தித்தார்கள். அந்தப் பையன் `என் அம்மாதான் இத்தனை வருடங்களாக வீட்டை நிர்வாகம் செய்து வந்தார். திருமணத்துக்குப் பிறகு என் மனைவி அவளுடைய வேலையை ரிசைன் செய்துவிட்டு, என் அம்மாவுக்கு ஓய்வுகொடுக்க வேண்டும்’ என்றார். அவரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிற பெண்ணுக்கு `வேலை மீதான எந்த லட்சியமும்’ இல்லாதபட்சத்தில் இதை ஏற்றுக்கொள்வாள். வேலை மீது பிடிப்புடன் இருக்கிற பெண் இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இதுதான் நியாயமும்கூட. இதுபோன்ற நேரத்தில், `மகனாக உங்கள் ரோலை சரியாகச் செய்ய ஆசைப்படுகிறீர்கள். ஆனால், கணவர் ரோலில் குறை வைக்கிறீர்கள். திருமணத்துக்குப் பிறகு உங்கள் மனைவி விருப்பப்பட்டால் வேலைக்குப் போகட்டும். உங்கள் அம்மாவுக்கு ஓய்வு கொடுப்பதற்கு வேலைக்காரர்களை வேலைக்கு அமர்த்தலாம்’ என்று யோசனை சொல்வோம். இதை சம்பந்தப்பட்ட பெண்ணும் தனிப்பட்ட முறையில் சொல்ல முடியும். `ஆனால், ‘உன்னைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால் நீ எனக்கு அட்வைஸ் செய்கிறாயா’ என்று ஆணின் ஈகோ தலைதூக்கிவிடும். இதையே நாங்கள் சொல்லும்போது யோசிக்க ஆரம்பிப்பார்கள்.

பொதுவான விருப்பு, வெறுப்புகளைத் தெரிந்துகொள்ள...

Relationship (Representational Image)

நான்கு வருடங்கள் காதலித்திருப்பார்கள். ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்கின்போது பொதுவான விருப்பு, வெறுப்புகளைப்பற்றிக் கேட்டால் தெரியாது என்பார்கள். காதலிக்கும்போது இயல்பாகவே ஒருவரையொருவர் ஈர்க்க முயற்சி செய்வார்கள். பிடிக்காத விஷயங்களையும் பகிர்ந்துகொள்வார்கள். ஆனால், தங்கள் இருவருக்கும் பொதுவான விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு நிறைய மனம்விட்டுப் பேசியிருக்க வேண்டும். இது நடக்காமல் போயிருக்கவும் வாய்ப்புண்டு. இதை ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்கில் பரஸ்பரம் தெரிந்துகொள்ள வைப்போம்.

கூட்டுக்குடும்பமா, தனிக்குடும்பமா..?

Relationship (Representational Image)

மாமனார், மாமியாருடன் சேர்ந்து இருக்கப்போகிறீர்களா, தனிக்குடித்தனம் செல்லப் போகிறீர்களா என்பதையும் பேச வைப்போம். சில குடும்பங்களில் அண்ணன், தம்பி இரண்டு பேர் இருப்பார்கள். யார் பெற்றோரை தன்னுடன் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்; ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனி வீட்டில் இருக்கப்போகிறார்களா, டபுள் பெட்ரூம் வீட்டில் ஒரு வீடு, ஒரு கிச்சன் என்று வாழப் போகிறார்களா என்பதையும் விளக்கமாகப் பேச வைப்போம். சிலர் திருமணத்துக்குப் பிறகு வேலையிடத்துக்குப் பக்கத்தில் வீட்டை மாற்றிக்கொண்டு செல்வார்கள். இதனால் ஏற்படுகிற பயண தூரம் இருவருக்கும் ஓகே தானா என்பதையும் பேச வைப்போம்.

பொருளாதார விஷயத்தில் உங்கள் பிளான் என்ன?

Couple (Representational Image)

பொருளாதார விஷயத்தில் இரண்டு பேருக்குமே ஒருமித்த கருத்துதானே இருக்க முடியும் என்று தோன்றலாம். ஆனால், இதிலும் வெவ்வேறு கருத்துகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. இருவரில் ஒருவருக்கு `திருமணமான புதிதில் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்ல வேண்டுமென்றோ, குழந்தைகள் பிறப்பதற்கு முன்னால் பல நாடுகளுக்கு டிராவல் செய்ய வேண்டுமென்றோ’ பிளான் இருக்கலாம். இன்னொருவருக்கு `திருமணமானவுடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றோ, வெளிநாடுகளுக்குச் செல்வதெல்லாம் வீண் செலவு’ என்ற எண்ணமோ இருக்கலாம். இன்னும் சிலர், `அந்த சில லட்சங்களை முன்பணமாகக் கொடுத்து ஒரு வீட்டை வாங்கலாம்’ என்று நினைப்பார்கள். இவை குறித்தும் ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்கில் இருவரையும் பேச வைப்போம்.

குழந்தை பெற்றுக்கொள்வது எப்போது? 

Love (Representational Image)

ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்கின் மிக முக்கியமான அம்சம் இந்தக் கேள்வி. ஒவ்வொருவருக்கும் இருக்கிற வெகு முக்கியமான பிரச்னை இது. சிலர், `தற்போது இருக்கும் வேலையில் நிரந்தரம் ஆனபிறகு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக’ தெரிவிப்பார்கள். சிலர் `தற்போது செய்துகொண்டிருக்கிற புராஜெக்ட் முடியும்வரை குழந்தை பெறுவதைத் தள்ளிப்போட வேண்டும் என்பார்கள். சிலர், `அம்மா - அப்பா விருப்பத்துக்காக உடனே பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்பார்கள். இன்னும் சிலர்,`தள்ளிப்போட்டால் குழந்தையின்மை பிரச்னை வந்துவிடுமோ’ என்று பயப்படுகிறார்கள். இத்தனைக்கும் தீர்வு ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்கில் அவரவர்க்கு ஏற்றபடி கிடைக்கும்.

கோபத்தின் விதங்களைத் தெளிவுபடுத்துவோம்...

Relationship (Representational Image)

திருமணத்துக்குப் பிறகு பிரச்னை வந்தால், ஒரு சிலர் கோபமாகக் கத்துவார்கள். சிலர் அமைதியாக இருந்து கோபத்தைக் காட்டுவார்கள். கோபத்தில் அமைதியாக இருக்கிற கணவரைப் பார்த்து `என்னை சமாதானப்படுத்துவதற்காகக்கூட பேசவில்லையே’ என்று கோபத்தில் இருக்கிற மனைவி நினைத்துவிடலாம். ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்கில் கோபத்தை வெளிப்படுத்துகிற விதங்கள் பற்றியும் இருவரிடமும் பேசுவோம். இதனால், திருமணத்துக்கு முன்னாடியே தன் துணையின் கோபம் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்தால்...

Love (Representational Image)

மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்யப்போகிறவர்கள், எந்த முறையில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள், தங்களுக்குப் பிறக்கவிருக்கிற குழந்தையை எந்த மதத்தின் முறைப்படி வளர்க்கப்போகிறார்கள், இதில் பெற்றோர்களின் தலையீட்டை எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் பேச வைப்போம்.

இப்படியெல்லாம் பேச வைத்துவிட்டால், திருமணத்துக்குப் பிறகு பிரச்னையே வராதா என்கிற கேள்வி உங்களுக்கு வரலாம். நிச்சயம் வரத்தான் செய்யும். ஆனால், திருமணத்துக்குப் பிறகு என்னென்ன விதங்களில் பிரச்னை வரலாம் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், பிரச்னையை எதிர்கொள்வதற்கும் அதிலிருந்து மீள்வதற்கும் சுலபமாக இருக்கும்.

கொரோனா, நம் வீட்டு பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் திருமண வாழ்க்கையை பாதிக்காமல் இருக்க ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங் உதவி செய்யுமா?  

Love (Representational Image)

Also Read: `ரோஸ்' ராதை, `ஜாக்' ஹரி... டைட்டானிக் போஸில் அறுபதாம் கல்யாணப் பத்திரிகை!

நிச்சயம் செய்யும். ஏனென்றால், கொரோனாவுக்கு முன்பிருந்த தாம்பத்தியத்தைவிட இனிமேல் திருமணம் செய்துகொள்ளவிருப்பவர்களுக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் இருக்க வேண்டும். திருமணம் செய்துகொண்ட சில நாள்களில் இருவரில் ஒருவருக்கு வேலை போய்விடலாம். அதை எப்படிச் சேர்ந்து சமாளிக்கப்போகிறோம் என்பதை முன்கூட்டியே பேசுவதற்கு ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங் உதவும். திருமணத்துக்கு முன்னால் வாராவாரம் மால், தியேட்டர் என்று செல்பவர்களாக இருந்தாலோ, அடிக்கடி ஷாப்பிங் செல்பவர்களாக இருந்தாலோ அதை மாற்றிக்கொள்ள வேண்டி வரலாம். நியூ நார்மல் என்று பேசுவதற்குச் சுலபமாக இருக்கலாம். ஆனால், அதை பிராக்டிகலாகச் செய்யும்போது என்னென்ன பிரச்னைகள் வரும், வரலாம், அவற்றை எப்படித் தீர்க்கலாம் என்பதை இப்போது எங்களிடம் ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்குக்கு வருபவர்களுக்குச் சொல்லித் தந்துகொண்டிருக்கிறோம்.



source https://www.vikatan.com/lifestyle/relationship/how-premarital-counseling-helps-for-couples-to-know-about-each-other

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக