பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பு மொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இவர் உயிரிழப்பு தொடர்பாக மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சுஷாந்துக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் என 30-க்கும் அதிகமானவர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் நேற்று தன் வாக்குமூலத்தை அளித்துள்ளார். சுமார் 4 மணி நேரம் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வாரத்துக்குள் கரண் ஜோஹரும் நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறபடுகிறது.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், தன் மகனை தற்கொலை செய்யத் தள்ளியது அவர் தோழி ரியா சக்ரபர்த்திதான் என அவர் மீது எஃப்.ஐ.ஆர் மற்றும் தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
Also Read: சுஷாந்த் இறப்பு: தொடர்ந்து அவதூறு, அவமானம்! - அதிர்ச்சி கொடுத்த 8 மணிநேர விசாரணை
அவர் அளித்துள்ள புகாரில், ``ரியா தன் மகனின் நிதியைக் கட்டுப்படுத்தி சுஷாந்த் கணக்கிலிருந்து தனது கணக்குக்கு ரூ.15 கோடி மாற்றியுள்ளார். அவரது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறார், குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் கம்பெனிகளின் பங்குகளை நிர்வகிறார். சுஷாந்துக்கு மன அழுத்தத்தைப் பகிரங்கப்படுத்துவதாக மிரட்டியுள்ளார். மேலும் அவரது சிகிச்சையின்போது அதிகப்படியான மருந்துகளை எடுக்க வைத்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். ரியா மீது சுஷாந்தின் தந்தை பதிவு செய்த எஃப்.ஐ.ஆரின் நகல் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் சுஷாந்தின் உயிரிழந்தபோது அவரது வீட்டில் தடயவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவின் சில விநாடி காட்சிகள் தற்போது வெளியில் கசிந்துள்ளன. டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் இரு அதிகாரிகள் பேசிக்கொள்கின்றனர். அதில் ஒருவர், `இந்த வீடியோ வெளியில் கசிந்துவிடக் கூடாது இல்லையெனில் நம் விசாரணை முழுவதும் பாழாகிவிடும்’ எனச் சொல்கிறார். சுஷாந்த் மரணத்தில் தொடர்ந்து வெளியாகும் பல தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read: சுஷாந்த் சிங்: `நீ இப்போது இன்னும் அமைதியான இடத்தில் இருப்பாய்!’ - தோழி ரியா உருக்கம்
source https://www.vikatan.com/news/cinema/sushant-singh-father-kk-singh-filed-an-fir-against-rhea-chakraborty
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக