மத்திய பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்துக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்புக் குரல் கொடுத்து வரும் சூழலில், அந்தக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, `புதிய கல்விக் கொள்கை திட்டம் வரவேற்கப்பட வேண்டிய நகர்வு' என்று அதிரடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது இந்தச் செயல்பாடு, காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில், குஷ்புவின் கருத்துக்கு எதிர்வினையாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிர்ச்சியின்மை. விரக்தி ஒழுக்கமின்மையிலிருந்து வருகிறது. விரக்திக்கு சிறந்த மருந்து யோகா!" என்று ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்தார்.
கே.எஸ்.அழகிரியின் இந்தக் கருத்துக்குப் பதில் தெரிவித்த குஷ்பு, ``கே.எஸ்.அழகிரி, என்னுடைய பெயரைப் பதிவிட்டு எதுவும் சொல்லவில்லை. என்னுடைய கருத்துக்குப் பதில் சொல்வதாக இருந்தால், நேரிடையாக என்னை அழைத்துப் பேசுவார்" என்றார்.
இதற்கிடையே, குஷ்புவின் ட்விட்டர் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றுக்கு நேரிடையாக குஷ்பு பதில் கொடுத்தும் வருகிறார். இதில், `பா.ஜ.க-வுக்குத் தாவத் தயாராகிவிட்டார் குஷ்பு' என்ற கேள்வி அவரது ட்விட்டர் பக்கம் முழுவதும் நிரம்பி வழிகிறது.
இந்தக் கேள்விகளுக்குப் பதிலாக, ``நான் பா.ஜ.க-வுக்குச் செல்லவில்லை. எனவே, சங்கிகள் மகிழ்ச்சியடைய வேண்டாம். புதிய கல்விக் கொள்கை குறித்த என் கருத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கிறது. இதற்கான நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம் நான் ரோபோ போன்று கைப்பாவையாக இல்லாமல், உண்மையைப் பேச விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகள் நல்லது. அதுதான் ஜனநாயகத்தின் உறுதியான அங்கம். எனவே, இது சொந்த சிந்தனையில் உதித்த என் தனிப்பட்ட கருத்து.
புதிய கல்விக் கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருக்கின்றன. ஆனாலும் மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன். `ஏன் படிக்கவில்லை...' என்பதற்கான காரணத்தைத் தேடிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. மாறாக, இந்தத் திட்டத்தின் மூலம், `எல்லோருக்கும் கல்வி கிடைக்கும்' என்ற மாற்றத்தை வரவேற்க வேண்டும் என்றே நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு `புதிய கல்விக் கொள்கை'க்கு எதிராகப் பேசிவரும் நிலையில், குஷ்பு இந்த விஷயத்தில் புதிய நிலைப்பாடு எடுத்திருப்பது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்த நிலையில், `புதிய கல்விக் கொள்கையில் நீங்கள் வரவேற்பு தெரிவிக்கும் அம்சம் என்ன?' என்ற கேள்விக்குப் பதில் கேட்டு, குஷ்புவிடம் பேசினோம்...
``புதிய கல்விக் கொள்கைத் திட்டம் பற்றிய விவரங்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்துகொண்ட பிறகுதான் நான் என் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டேன். மேலும், இந்தத் திட்டத்தில் எனக்கு என்னென்ன அம்சங்கள் பிடித்திருக்கின்றன; என்னென்ன விஷயங்கள் பிடிக்கவில்லை என்பது மாதிரியான அனைத்து விவரங்களையும்கூட தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன்.
எனவே, மறுபடியும் இதுபற்றி விரிவாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் இதுகுறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை. தப்பாக நினைக்காதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் நமக்கு எழும் கேள்விகளை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டோம்...
``காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்புவே, கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளாரே..?''
``அவரது ட்விட்டர் பதிவை இதுவரையில் நான் முழுவதுமாகப் படிக்கவில்லை.''
``கருத்து சுதந்திரம் காங்கிரஸ் கட்சியில் உண்டு. ஆனால், கட்சிக்கு வெளியே பேசக்கூடாது என்று நீங்களும் ட்விட்டரிலேயே பதில் கொடுத்திருக்கிறீர்களே..?''
``அது என்னுடைய பதிவுதான். ஆனால், அந்தப் பதிவின் எந்த இடத்திலும் நான் குஷ்புவின் பெயரைக் குறிப்பிடவேயில்லை. பின் எப்படி, அது குஷ்புவுக்கான பதில் என்று நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள்?''
``குஷ்பு, நேற்றைய தினம் ஆதரவு கருத்து தெரிவித்திருந்த நிலையில் இன்றைக்கு நீங்கள் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கிறீர்களே?''
``என்னுடைய பதிவு குஷ்புவுக்கானது அல்ல... அது எல்லோருக்குமே பொருந்தக்கூடியது. எனக்கேகூட அது பொருந்தும். பொதுவான அந்தக் கருத்தை எல்லா கட்சியினருமே கடைப்பிடிக்க வேண்டும்.''
``கடந்தகாலத்தில், ரஜினிகாந்த்துக்கு ஆதரவாகச் செயல்பட்டார், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பேசினார் என்பதற்காக கராத்தே தியாகராஜனை இடைநீக்கம் செய்த, தமிழக காங்கிரஸ் கமிட்டி, குஷ்பு மீது மட்டும் கருணைப் பார்வை காட்டுகிறதே ஏன்?''
``கராத்தே தியாகராஜன் மீது காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கைக்கும் ரஜினிகாந்த் விஷயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது முடிந்துபோன விஷயம். அதற்கான சூழல் வேறு; இதற்கான சூழல் வேறு. எனவே, இரண்டு நிகழ்வுகளையும் பொதுமைப்படுத்த வேண்டாம்.''
``கட்சிக் கட்டுப்பாட்டை மீறிப் பேசினார் என்பதால்தானே கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டார்?''
``மறுபடியும் சொல்கிறேன்... இரண்டு நிகழ்வுகளையும் பொதுமைப்படுத்த வேண்டாம். அந்தப் பிரச்னை வேறு; இந்தப் பிரச்னை வேறு!''
``குஷ்பு, தேசிய செய்தித் தொடர்பாளர் என்பதால், அவர் மீதான நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமைதான் எடுக்க வேண்டும் என்கிறீர்களா?''
``நீங்கள் சொல்வது மாதிரி எதுவுமே இல்லை... குஷ்பு, ஒரு கருத்துச் சொல்லியிருக்கிறார்... அவ்வளவுதான். `யாராக இருந்தாலும், கருத்துச் சொல்லும்போது எப்படிச் சொல்ல வேண்டும்' என்பது பற்றி நானும் ஒரு விளக்கத்தைச் சொல்லியிருக்கிறேன். அது குஷ்புவுக்காகச் சொல்லப்பட்ட விளக்கம் அல்ல'' என்று உறுதியாக மறுத்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-in-tamilnadu-congress-party-over-kushboos-tweet-on-new-education-policy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக