பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
திண்ணைப் பேச்சுகளின் புதிய தொழில்நுட்ப வடிவமாக கிளப் ஹவுஸ் (Clubhouse) உரையாடல்கள் மாறிப்போய் இருக்கின்றன. ஆடியோ பேச்சுக்களால் மட்டுமே ஆயுள் வளர்க்கும் கிளப் ஹவுஸினால் பல ஆக்கப்பூர்வமான நன்மைகள் உண்டு. ஆனாலும் இதில் ரகளைகளுக்கு பஞ்சமில்லை.
கிளப் ஹவுஸின் மாடரேட்டர் (Moderator) பணி என்பது, சாகசப் பயணம் செல்வது போன்றதொரு கடினமான- சுவாரஸ்யமான பணி.
கிளப் ஹவுஸ்களில் நடக்கும் கலாட்டாக்கள்-ஒரு ஜாலி பதிவு!
*ஆலமரத்தடியில் சொம்புடன் பஞ்சாயத்து செய்வதும், கிளப் ஹவுஸ் மாடரேட்டராக இருப்பதும் ஒன்றுதான்.
"ஒரு ரூம் ஆரம்பிச்சது குத்தமா?" என நொந்தபடியே பல பஞ்சாயத்துகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது."திரும்பத் திரும்ப பேசுற நீ! "திரும்பத் திரும்ப பேசுற நீ" என்று மாடரேட்டரின் மைண்ட் வாய்ஸ் அவ்வப்போது அலறுவதை தவிர்க்க முடிவதில்லை. வழக்கமான பஞ்சாயத்துகளில் சட்டை கிழியும்.
கிளப் ஹவுஸ் பஞ்சாயத்துகளில் சட்டைக்கு பதில் காது கிழிவதுதான் ஹைலைட். "எத்தன ஊர் பஞ்சாயத்தடா பார்க்கறது?" என்று உள்ளுக்குள் அங்கலாய்த்தபடியே வெளியே கெத்தாக பல மாடரேட்டர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
*என்ன கேள்வி கேட்டாலும் மூன்றாம் வகுப்பு மாணவன் கைதூக்குவது போல,கிளப் ஹவுஸ் உரையாடலின் ஆரம்பம் முதலே ஒருவர் Hand Rise செய்து கொண்டிருப்பார்.அப்படி என்னதான் பேசப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவருக்கு வாய்ப்புக் கொடுக்க மாடரேட்டர் நினைக்கும் போது,Leave quietly என சைலண்டாக வெளியேறி இருப்பார் அந்த ஸ்லீப்பர் செல்!
*குழாயடி குடுமிப்பிடி சண்டைகளின் அடுத்த அப்டேட்டட் வெர்ஷனாக சில கிளப் ஹவுஸ் ரூம்கள் இருக்கின்றன.
வழக்கொழிந்து போன வட சென்னை குத்துச்சண்டைப் போட்டிகள் எல்லாம் வாய்ச்சண்டைகளாக பரிமாற்றம் அடைந்து விட்டனவோ என்னும் சந்தேகம் அங்கு ரூமில் இருப்பவர்களுக்கு ஹெவியாய் எழுகிறது. வருங்காலங்களில் WWE சண்டைகள் எல்லாம் கிளப் ஹவுஸ்களில் தான் நடக்கப் போவதாய் கற்பனையில் தோன்றுவது நமக்கு மட்டும் தானா என்னும் பிரம்மை பீறிட்டுக் கிளம்புகிறது!
*பல மணிநேரம் செலவிட்டு, பற்பல மூலங்களிலிருந்தும் தகவல்களை பக்காவாகத் திரட்டி நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போது, இடையில் வரும் ஒரு கொட்டாவி சத்தம் நமக்கு சத்திய சோதனையாய் மாறிப்போகும்.
அதைக் கண்டும் காணாமல் இருந்தோம் என்றால் தப்பித்தோம். அதைப்பற்றி பேசினோம் என்றாலோ, "கொட்டாவி விட்டது குத்தமா?" என்றொரு குரூப் கிளம்பி ரூமின் டாபிக்கை மாற்றக் கூடிய சாத்தியக்கூறு அதிகம்!
*பட்டிமன்றப் பேச்சாளர்கள் போல சொன்னதையே தொகுத்துக் கூறுகிறேன் என்ற பெயரில் திரும்பத் திரும்பக் கூறி சில புண்ணியவான்கள் நம்மைக் கடுப்படித்துக் கொண்டிருப்பார்கள்.
"ஆண்டவா! மொக்கையாய் பேசுபவர்களை நான் கவனித்துக் கொள்கிறேன், தொகுத்துக் கூறுபவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று!" என்று வேண்டியபடி நம் வேலையைப் பார்க்க வேண்டியதுதான்!
*நாம் ஒன்று கேட்டால் பல நேரங்களில் அதற்கு சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு பதில் நமக்குக் கிடைக்கும்."ஏம்பா நான் சரியாத்தானே பேசறேன்!" என்று மனதிற்குள் உறுதிப்படுத்திக் கொண்டபடியே தான் அடுத்து பேசவேண்டியிருக்கும்!
*மைக் கிடைத்தால் போதுமென மூச்சுப் பிடிக்க பேசுபவர்கள் ஒரு ரகம் என்றால், மைக் கிடைத்த பிறகு தொண்டையைச் சொருமி பேச ஆரம்பிக்கவே ஐந்து நிமிடம் ஆக்குவோர் அடுத்த ரகம்."உங்களை எல்லாம் ரூமுல சேர்த்ததுக்கு" என்று மனதுக்குள் நொந்து நூடுல்ஸ் ஆகி அலைவதைத் தவிர மாடரேட்டர்களுக்கு வேறு மார்க்கமில்லை!
*கிளப் ஹவுஸே கதியாய் கிடப்போருக்கு பல நேரங்களில் கடுப்படிக்கும் உரையாடல்களே அகப்படும். உள்ளே-வெளியே விளையாட்டு விளையாடும் ஆட்களுக்கு மட்டும் அவ்வப்போது நல்ல கன்டென்ட்கள் கிடைக்கும். "இது என்னடா கிளப் ஹவுசுக்கு வந்த சோதனை!" என்று ஆச்சரியப்பட்ட படியே கடந்து செல்ல வேண்டியதுதான்!
*"நீ எனக்கு எல்லாம் இன்வைட் அனுப்புவியா?" என்னும் நண்பர்கள், டிராபிக் சிக்னலில் இருந்து கொண்டு ஆக்ரோஷமாக உரையாடும் போராளிகள், டவர் இல்லாமல் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல பேசும் கனவான்கள், அரைத்தூக்கத்தில் உளரும் மங்குனிகள் ஆகியோரை சகித்துக்கொண்டு ரூமை வழிநடத்துவது என்பதெல்லாம் கத்திமேல் நடப்பது போன்றதுதான். ஒரு துளி பிசகினாலும் நம் சோலி முடிந்தது
*டி.வி யில் மொக்கையான ஸ்டாண்ட் அப் காமெடிகளுக்கு பின்னனியில் கைதட்டும் சத்தம் போடுவது போல, கிளப் ஹவுஸ் உரையாடல்களில் சிலர் பேசும்போது மட்டும் ஒரு குரூப் பாராட்டி, கைதட்டிப் புகழ்ந்து கொண்டே இருக்கும்."ஏம்பா இங்கயும் கைதட்ட ஆள் கூட்டிட்டு வந்துட்டியா?" என்ற நம் மைண்ட் வாய்ஸ் வெளிவரத் துடிக்கும் தருணம் இது.
"வகுப்பறையில் மாணவர்களை அமைதிப்படுத்த லீடர் இருப்பது போல, கிளப் ஹவுஸ் ரூமை அமைதிப்படுத்த ஒருவர் இருப்பார். தாமரை இலைத் தண்ணீர் போலதான் இவர் செயல்படுவார். "ஆளாளுக்கு பேசாதீங்கப்பா, மைக்க ஆஃப் பன்னுங்க, ஒவ்வொருத்தரா பேசுங்க" என்று கூறுவது மட்டுமே இவரது வேலையாக இருக்கும். ரூமின் தலைப்பு- உரையாடல்களுக்கும் இவருக்கும் இடையே எந்தவித சம்பந்தமும் இருக்காது!
*"பொறுப்பா பாய்ண்ட் வரட்டும்" என்றபடி வாய்பொத்தி அமைதியாக அமர்ந்திருக்கும் குளோஸ்டு ரூமின் பேசா மடந்தைகளைப் பேச வைப்பது என்பது மாடரேட்டருக்கு தண்ணீரில் கயிறு திரிக்கும் கலை!
*கிளப் ஹவுஸில் ஓப்பன் ரூம் ஆரம்பிக்க ஒரு முரட்டுத்தனமான தைரியம் வேண்டும். ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவரால் மட்டுமே தில்லாக ஓப்பன் ரூம் ஆரம்பித்து, தலைப்பிற்கான பேச்சை மட்டும் பேச வைக்க முடியும்!
*கிளப் ஹவுஸ் ரூமில் இரண்டு பேர் காது கிழிய, உணர்ச்சி பொங்கப் பொங்க சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது,
"அங்கிட்டு போய் விளையாடுங்கப்பா!" என்று ஒரு குரூப் தமக்கு சம்பந்தம் இல்லாதது போல நம்மைக் கடந்துபோகும்.
"இதுவும் கடந்து போகும்!" என்று எண்ணியபடியே உரையாடலைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை!
-அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-instagram-club-house
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக