Ad

திங்கள், 5 ஜூலை, 2021

மும்பை: தனியே செல்லும் முதியவர்கள் டார்கெட்! - தன் வலையில் விழவைத்து நகை, பணத்தை அபகரித்த பெண்

வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் பல வழிகளில் தங்களது வேலையைக் காட்டுகின்றனர். மும்பையைச் சேர்ந்த ஒரு பெண், தன் மகனுடன் சேர்ந்துகொண்டு, தனியாக நடந்து செல்லும் முதியவர்களைக் குறிவைத்து பணம் பறித்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்தப் பெண் எப்போதும் ஆடம்பரமான கார் ஒன்றில் தனது இலக்கைத் தேடி அலைவார். அவருடன் அவருடைய மகனும் செல்வது வழக்கம். காரில் சென்றுகொண்டிருக்கும்போது எங்காவது முதியவர்கள் தனியாகச் செல்வதைப் பார்த்தால், உடனே காரை தூரத்தில் நிறுத்திவிட்டு முதியவரிடம் சென்று நயமாகப் பேசி, பாலியல் உணர்ச்சியைத் தூண்டி அவரிடமிருக்கும் பொருள்களைக் கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பை சார்க்கோப் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு தனியாக சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் முதியவரை அணுகி அழ ஆரம்பித்தார். தனது கணவர் தன்னை துன்புறுத்துவதாகத் தெரிவித்தார். இதனால் அந்த முதியவர் அந்தப் பெண்மீது பரிதாபப்பட்டார்.

கீதா பட்டேல்

அதோடு, தன் கணவன் தன்னை தாம்பத்யரீதியாக திருப்தியாக வைத்துக்கொள்வதில்லை என்று கண்ணீர்மல்கப் பேசினார். பிறகு அந்த முதியவரிடம், தங்களுடன் சிறிது சேரத்தை செலவிட விரும்புவதாக தெரிவித்தார். அதை முதியவர் உண்மையென நம்பினார். உடனே அந்தப் பெண் ஆட்டோ ஒன்றில் ஏறி, அவரை அழைத்துக்கொண்டு அருகில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருக்கும் ஓர் இடத்துக்குச் சென்றார்.

அங்குவைத்து முதியவர் அணிந்திருந்த தங்க செயின், அவரிடமிருந்த பணத்தைக் கட்டாயப்படுத்திப் பிடுங்கினார். கொடுக்கவில்லையெனில் வன்கொடுமைசெய்துவிட்டதாகக் கத்தி கூச்சல் போட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் முதியவர் தன்னிடமிருந்த பொருள்களை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். தொடர்ந்து இது குறித்து போலீஸிலும் புகார் செய்தார். போலீஸார் உடனே இது குறித்து விசாரணையில் இறங்கினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்ததில், அந்தப் பெண் காரில் வந்து இந்தக் காரியத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் புகைப்படம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அந்தப் பெண்ணின் பெயர் கீதா பட்டேல் (40) என்று தெரியவந்தது. ஏற்கெனவே அந்தப் பெண் இது போன்று 14 முதியவர்களிடம் தனது கைவரிசையைக் காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடி

அவருடன் அவர் மகனும் சேர்ந்து இந்தக் காரியத்தில் ஈடுபடுவது தெரிந்தது. அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகிலேயே அவரை மடக்கிப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். போலீஸாரே ஒரு போலி முதியவரை அனுப்பிவைத்தனர். அந்தப் பெண்ணும் வழக்கம்போல் முதியவரிடம் நயமாகப் பேசி அழைத்துச் செல்லப் பார்த்தார். அதற்குள் போலீஸார் அந்தப் பெண்ணையும் அவர் மகனையும் கைதுசெய்தார்கள். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து கீதா பட்டேலிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் முதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனியாகச் செல்லும் முதியவர்கள் திடீரென யாராவது வந்து பேச்சுக்கொடுத்தால் அதைத் தவிர்க்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு வயது முதிர்ந்த பெண்களிடம் அருகில் திருடர்கள் இருப்பதாகக் கூறி, தங்க நகைகளைக் கழற்றி கர்ச்சீப்பில்வைத்துச் செல்லும்படி கூறி அந்த நகைகளை அபேஸ் செய்யும் சம்பவங்கள் நடந்தன. இப்போது மோசடிப் பேர்களின் பார்வை முதியவர்களிடம் திரும்பியிருக்கிறது.

Also Read: மும்பை: `இறப்புச் சான்றிதழை வாங்கிச் செல்லுங்கள்!‘ - உயிருடன் இருப்பவருக்கு வந்த அதிர்ச்சி போன் கால்



source https://www.vikatan.com/news/crime/a-woman-who-stole-jewelery-and-money-from-senior-citizens-in-mumbai-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக