மகாராஷ்டிராவில் 30 ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளாக இருந்த சிவசேனா மற்றும் பாஜக இடையே கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விரிசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக இரு கட்சிகளும் பிரிந்துள்ளன. தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. இதில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆளும் சிவசேனாவுக்கு அடிக்கடி குடைச்சல் கொடுத்து வருகிறது. சரத்பவார் துணையுடன் மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியமைத்து விடலாம் என்று பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வந்தது. ஆனால் அத்திட்டம் வெற்றி பெறவில்லை. எனவே சிவசேனாவை நேரடியாக கூட்டணியில் சேர்க்கும் வேலையில் பாஜக இறங்கி இருக்கிறது.
சமீப காலமாக சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். இதனால் இரு கட்சிகளும் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைக்கும் என்று செய்திகள் வெளியானது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை தொடர்ந்து முதல்வராக இருக்க சொல்லிவிட்டு, இரண்டு துணை முதல்வர் பதவிகளை பாஜகவுக்கு உருவாக்கிக்கொள்ளலாம் என்று பாஜக தரப்பில் திட்டம் முன் வைக்கப்பட்டது.
ஆனால் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இத்திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பட்னாவிஸை மத்திய அமைச்சராக்கிவிடலாம் என்றும் பாஜக திட்டம் தீட்டியது. எனவேதான் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இவ்வளவு தாமதமாக நடக்கிறது. இந்த செய்தி குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கேட்டதற்கு, ``மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த போது நடக்காததா இப்போது நடந்துவிடப்போகிறது. சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் ஆரோக்கியமான ஜனநாயகமாக தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்க மத்திய அரசிடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அவணங்களை கேட்டு தீர்மானம் நிறைவேற்றியதில் பாஜக கத்தி கூச்சல் போட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
பாஜக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாட்டால் வெக்கத்தில் எங்களது தலையை தொடங்கப்போடவேண்டிய நிலை ஏற்பட்டது. தீர்மானம் பிடிக்கவில்லையெனில் அதற்கு ஆதரவு கொடுக்கவேண்டியதில்லை. அதற்காக ஏன் அவையில் அமளியில் ஈடுபடவேண்டும். மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தகவல்களை கொடுக்காத போது அதில் தவறு இருக்கிறது என்று எப்படி உங்களால் சொல்ல முடியும். அதில் தவறு இருந்தால் 2019ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் அரசு இதே தகவல்களை மத்திய அரசிடம் ஏன் கேட்டது?. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தனர்.அது முடியவில்லை. இதற்கு முன்பும் இதே போன்று முயன்று தோல்வி அடைந்தனர்.
எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்ததை ஜனநாயக படுகொலை என்றும், கருப்பு அத்தியாயம் என்றும் பாஜக கூறுகிறது. அப்படியென்றால் அமலாக்கத்துறையும், சிபிஐயும் ஜனநாயகத்திற்கு வெள்ளையடிக்கிறதா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். சபாநாயகர் தேர்தல் குறித்து கேட்டதற்கு, நோய்த்தொற்று காலத்தில் மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் குறுகிய காலத்தில் கொரோனா சோதனை செய்து அறிக்கை பெறுவது கடினம். அதோடு 2 நாட்கள் மட்டுமே நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தேர்தலை நடத்துவது கடினம் என்றும் தெரிவித்தார். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அடிக்கடி பாஜகவை புகழ்ந்து பேசி வருகிறார் என்பதும் உத்தவ் தாக்கரே டெல்லி சென்ற போது பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசினார் என்பதும் குறிப்பிடதக்கது.
source https://www.vikatan.com/news/politics/is-shiv-sena-join-again-with-bjp-in-maharashtra-chief-minister-uddhav-thackerays-answer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக