"விவசாயிகள் பலரும் கடன் வாங்கி, தங்களது கடின உழைப்பினால் உழைத்து விவசாயம் செய்தார்கள். நல்ல மகசூல் பெறும் வேளையில் தொடர் மழையின் காரணமாக அறுவடை செய்யும் நேரத்தில் விவசாயிகள் செய்த வெள்ளாமை கடும் மழையினால் பாதிக்கப்பட்டு, இழப்பினைச் சந்தித்துள்ளது. அவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்" என்று செந்தில் பாலாஜி பேசினார்.
தமிழகத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டிருந்த விவசாயம் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது.
Also Read: கரூர்: `15 வருஷத்துக்குப் பிறகு தண்ணீர் தேக்கப்போறோம்!' - மராமத்து பணியில் இளைஞர்கள்
இந்த நிலையில், `நங்கவரம் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு தர வேண்டும்' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நங்கவரம் சாத்தாயி அம்மன் கோயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செந்தில் பாலாஜி தலைமை வகித்தார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி,``தொடர் மழையால் குளித்தலை மற்றும் நங்கவரம் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நங்கவரம் பகுதியில் கடந்த 16 ஆம் தேதி மறைந்த பேரூர் கழக செயலாளர் ஏணி சுந்தரத்தின் திருவுருவப் படம் திறப்பு விழாவிற்கு நான் வந்தேன். அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வேண்டுக்கோளை ஏற்று, பாதிக்கப்பட்ட அவர்களின் விளைநிலங்களை நேரில் சென்று பார்த்தேன். மழைநீரில் மூழ்கிய பயிர்கள், வயலிலேயே முளைக்கத் தொடங்கியிருந்தன. விவசாயிகள் பலரும் வட்டிக்கு கடன் வாங்கி, தங்களது கடின உழைப்பால் வெள்ளாமை செய்திருக்கிறார்கள்.
நன்றாக விளைந்து, அவர்கள் மகசூல் பெறும் வேளையில், தொடர் மழையின் காரணமாக பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு தர வேண்டும். விவசாயிகளை நசுக்கும் வகையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அதற்கு, தமிழக அரசு ஆதரவு தெரிவித்து, விவசாயிகளை வஞ்சிக்கிறது. புதிய வேளாண் சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக உள்ளது. குளித்தலை சட்டமன்றத் தொகுதியில், மறைந்த தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞர் அவர்கள், முதல்முறையாக போட்டியிட்டு வென்று, சட்டசபைக்குச் சென்றார். அவரது வெற்றிக்கு காரணம், 'நாடு பாதி நங்கவரம் பாதி' என்று இங்கு விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் நடத்திய மிகப்பெரிய போராட்டம்தான்.
சட்டமன்றத்தில் பேசிய முதல் கன்னிப் பேச்சும், அந்த போராட்டம் பற்றிதான் அவருக்கு அமைந்தது. அப்படிப்பட்ட நங்கவரம் பகுதியில், தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்பினை சந்தித்துள்ளனர். அவர்களுக்காக தி.மு.க துணை நிற்கும். நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டு, பயிர் காப்பீடு செய்த, செய்யாத விவசாயிகள், வெறும் ஒரு சென்ட் நிலத்தில் நெல்லை பயிரிட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசிடம் இருந்து பெற்றுத்தர கரூர் மாவட்ட தி.மு.க பாடுபடும். அப்படியும், இங்குள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீட்டை தராவிட்டால், தி.மு.க சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.
source https://www.vikatan.com/news/protest/dmk-staged-protest-in-karur-nangavaram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக