Ad

திங்கள், 13 ஜூலை, 2020

கேரளா:`அரசக்குடும்பத்துக்கு உரிமை உள்ளது!’ - பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் புதிய உத்தரவு

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் பிரசித்திபெற்ற பத்மநாபசுவாதி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்துவருகின்றனர். பத்மநாபசுவாமி கோயில் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதால் இங்கு சில ரகசிய அறைகள் உள்ளன. 150 வருடங்களுக்கும் மேல் திறக்கப்படாமலேயே இருந்த அந்த அறைகளைத் திறக்க வேண்டும். மன்னர் குடும்பத்தினர் பராமரிப்பில் உள்ள அக்கோயிலின் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை. எனவே,கோயில் சொத்துகளை அரசு நிர்வகிக்க வேண்டும் என சுந்தரராஜன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றம்

இதை விசாரித்த கேரள நீதிமன்றம் கோயில் நிர்வாகத்தை அரசு கவனிக்க வேண்டும் என 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து திருவிதாங்கூர் அரசக் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த விசாரணையில், கேரள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் அதே நேரத்தில் 2 முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. அப்படி திறக்கப்பட்ட அறைகளில் தங்கத்தாலான நிறைய சாமி சிலைகள், விலை மதிக்க முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள், தங்க நாணயங்கள், நகைகள், அரிய வகை கற்கள் போன்றவை கண்டுப்பிடிக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கூறப்பட்டது.

Also Read: `பரம்பரை உரிமை இல்லை; அரசுக்குத்தான் சொந்தம்' - பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் கேரள அரசு வாதம்!

அந்த நேரத்தில், பத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் ரகசிய அறை உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியது. பின்னர் அங்கு கண்டுப்பிடிக்கப்பட்ட பொருள்களைத் தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய தணிக்கை அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கு மீண்டும் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. இதில் இரண்டு தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்த பிறகு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 9 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் லலித், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று உத்தரவுகளைப் பிறப்பித்தது. அப்போது பேசிய நீதிபதி லலித், ``திருவிதாங்கூர் மன்னரின் இறப்பு, அரச குடும்பத்தின் சொத்துகள், உரிமைகளைப் பாதிக்காது. எனவே, கேரள பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தின் மீது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது. அந்தக் கோயிலின் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு இடைக்கால குழுவை அமைக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. மேலும், அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறைகள் திறக்கப்படுவது தொடர்பாக இடைக்கால குழு முடிவு செய்யும். இடைக்கால குழுவின் முடிவே இறுதியானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/india/the-sc-recognized-the-authority-of-the-travancore-royalty-in-the-management-of-the-padmanabhaswamy-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக