Ad

திங்கள், 13 ஜூலை, 2020

பெரம்பலூர்: `சிக்கிய தொழிலாளி... மீட்கப்போன தீயணைப்பு வீரர்! -பதறவைத்த விஷவாயு மரணங்கள்

கிணற்றில் விஷவாயு தாக்கியதில் வாலிபர் ஒருவரும், அவரை மீட்கச் சென்ற தீயணைப்பு படை வீரரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட மூன்று பேர் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷ வாயு தாக்கி பலி

பெரம்பலூர் மாவட்டம், செல்லியம்பாளையம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வயலில் புதிதாகக் கிணறு தோண்டப்பட்டு வருகிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் கிணற்றை வெடிவைத்து வெட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு வெடிவைத்து வைத்து வெட்டியும் தண்ணீர் வராததால் நேற்று காலை 10 மணியளவில் கிணற்றில் சைடு போர் போட்டுள்ளனர். இந்நிலையில் சைடு போரில் தண்ணீர் வருகிறதா என மாலை 5 மணியளவில் உள்ளே சென்று பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் விஷவாயு தாக்கி மயங்கி கிணத்துக்குள் விழுந்துள்ளர்.

இதைப் பார்த்து அவரைக் காப்பாற்றச் சென்ற பாஸ்கர் என்பவரும் கிணற்றுக்குள் இறங்க அவரும் விஷவாயு தாக்கி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் தீயணைப்பு வீரரான ராஜ்குமார், தனபால், பால்ராஜ் ஆகியோர் விரைந்து சென்று கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கினர்.

தீயணைப்பு வீரர்

இதில் மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர் மூவரும் கிணற்றுக்குள் மயங்கி விழுந்ததால் மேலும் பதற்றம் ஆனது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட தீயணைப்புத்துறைத் தலைவர் தாமோதரன் தலைமையில் தீயணைப்புப் படையினர் ஆக்ஸிஜன் பெட்டிகளுடன் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

விஷ வாயு தாக்கி தீயணைப்பு வீரர் பலி

ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு பாஸ்கர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தவறி விழுந்த ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் மயக்கமடைந்த 3 தீயணைப்பு வீரர்களில் ராஜ்குமார் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். மீட்கும் பணியில் இறங்கி மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்களும் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் எஸ்.பி. எஸ்.நிஷா பார்த்திபன் ஏ.டி.எஸ்.பி கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து. கிணற்றைப்பார்வையிட்டார். கிணறு வெட்ட பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். சக வீரரை பலி கொடுத்ததால் தீயணைப்பு வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.



source https://www.vikatan.com/news/accident/two-died-in-poison-gas-attack-in-perambalur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக