Ad

திங்கள், 13 ஜூலை, 2020

சயீத் அன்வர்... சேப்பாக்கம் மட்டுமல்ல; சென்சூரியனிலும் சம்பவம் நடந்திருக்கும்? - அண்டர் ஆர்ம்ஸ் - 5

1997-ம் ஆண்டு... 8-ம் வகுப்பு தேர்வுகள் முடித்த விடுமுறைக்காலம். இந்தியாவின் 50-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டமாக இந்தியாவில் இன்டிபென்டன்ஸ் கப் நடக்கப்போகிறது என அந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆஸ்திரேலியாவில் நடப்பதைப்போன்று இந்தியாவில் முதல்முறையாக பெஸ்ட் ஆஃப் 3 ஃபைனல்ஸ் போட்டிகள் நடக்கப்போகிறது என பயங்கர பரபரப்பாக இருந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தானோடு நியூஸிலாந்தும் இந்தத்தொடரில் சேர்க்கப்பட்டிருந்தது. 1996 உலகக்கோப்பை காலிறுதிப்போட்டிக்குப்பிறகு இந்தியாவில் இந்திய பாகிஸ்தான் போட்டி, அதுவும் சென்னையில்தான் அந்தப் போட்டி நடக்க இருக்கிறது என ஷெட்யூல் வெளியானதில் இருந்தே சென்னைப் போட்டிக்கான டிக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கானப் போட்டாபோட்டி கடுமையாக இருந்தது.

பக்கத்து வீட்டு அண்ணணுக்கு இந்தியன் ஏர்லைன்ஸில் வேலை. சென்னையில் எப்போது கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியன் ஏர்லைன்ஸுக்கு காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட்டுகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கொடுக்கும். 1996 உலகக் கோப்பையின்போது நியூசிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த காலிறுதிப்போட்டியிலேயே டிக்கெட் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால், அது மிஸ் ஆகிவிட்டது. இந்தமுறை நிச்சயம் மேட்ச்சை நேரில் பார்த்துவிட வேண்டும் என அந்த அண்ணணிடம் தினந்தோறும் விண்ணப்படிவங்கள் நிரப்பப்பட்டுக்கொண்டிருந்தன. பல வார சஸ்பென்ஸுக்குப் பிறகு அந்த நாள் வந்தது. `மேட்சுக்கு முந்தைய நாள் டிக்கெட் கையில் கிடைத்தது. டி-ஸ்டாண்ட்... பெல்ஸ் ரோடு, சேப்பாக்கம்' என அந்த டிக்கெட்டைப் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருந்தது.

அப்போதெல்லாம் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடந்தால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிப்பார்கள். அது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால் அரசு அலுவலகங்களுக்கெல்லாம் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

55 டெஸ்ட் மற்றும் 247 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சயீத் அன்வர் டெஸ்ட்டில் 11 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 20 சதங்களும் அடித்திருக்கிறார்.

சேப்பாக்கம் போய் இறங்கியதும், கண்ணில் கண்ட முதல் காட்சி ரசிகர்களுக்கு இணையாகப் போலீஸும் இருந்ததுதான். பெல்ஸ் ரோடு, டி ஸ்டாண்டுக்குள் நுழைந்து டிக்கெட்டை கிழித்து உள்ளே அனுப்பிய நொடிகள் எல்லாம் இப்போது நினைக்கும்போது த்ரிலாக இருக்கிறது. டி-ஸ்டாண்ட் முழுக்க பழுப்பு வண்ண மரச்சேர்கள் போடப்பட்டிருந்தன.

சச்சின் டெண்டுல்கர்தான் இந்தியாவின் கேப்டன். இந்த இன்டிபென்டஸ் கோப்பையின் முதல் போட்டியில் நியூஸிலாந்தின் 221 ரன்களை இந்தியா சேஸ் செய்திருக்கும். டெண்டுல்கர் 117 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெறவைத்திருப்பார். அடுத்த போட்டி அப்போது இந்தியாவை அடித்து துவைத்துக்கொண்டிருந்த இலங்கையுடன், மும்பையில் நடந்தது. சச்சினின் ஹோம் கிரவுண்ட். ஆனால், சச்சின் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆக, எப்படியோ இந்தியா தட்டுத்தடவி 225 ரன்கள் அடிக்கும். ஆனால், இதெல்லாம் ஒரு ஸ்கோரா என்கிற அளவுக்கு இந்தியாவைப் போட்டு வெளுத்திருப்பார் ஜெயசூர்யா. ஓப்பனிங் பேட்ஸ்மேனனான அவர் மட்டுமே 150 ரன்கள் அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருப்பார்.

Saeed Anwar

முதல் முறையாக இந்தியா, இந்தியாவில் நடக்கும் பெஸ்ட் ஆஃப் 3 ஃபைனல்ஸில் விளையாட வேண்டுமென்றால் சென்னைப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்தே ஆக வேண்டும் என்கிற சூழல். அதுவும் இந்தியாவின் இன்டிபென்டன்ஸ் கோப்பையில் இந்தியா இறுதிப்போட்டியில் ஆடவில்லையென்றால் அது பயங்கர அவமானம் என்கிற பில்ட் அப்களோடு சென்னை போட்டி தொடங்கியது. பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பார்.

மேட்ச் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே ஷாகித் அஃப்ரிடி குருவில்லா பெளலிங்கில் அவுட். மேட்ச் இந்தியா பக்கம் இருப்பதுபோலவே முதல் 5 ஓவர்கள் வரை ஸ்டேடியம் முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், ஐந்தாவது ஓவருக்கு மேல் ஃபார்முக்கு வந்தார் சயீத் அன்வர். பவுண்டரிகளாகப்போக ஆரம்பித்தது. வெங்கடேஷ் பிரசாத்தின் ஓவரில் ஒரு சிக்ஸர் பறந்தது. சென்னை என்றால் ஸ்பின் விக்கெட்தானே என ஒன்பதாவது ஓவரிலேயே அணில் கும்ப்ளேவைக் கொண்டுவந்தார் சச்சின் டெண்டுல்கர். இங்குதான் அன்வரின் ருத்ரதாண்டவம் தொடங்கியது. கும்ப்ளேவின் லெக் ஸ்பின்னை எல்லாம் கொஞ்சம்கூட மதிக்காமல் ஆட ஆரம்பித்தார் அன்வர். ஒருபக்கம் ரமீஸ் ராஜா, இஜாஸ் அஹமது என விக்கெட்டுகள் விழந்தாலும் அன்வரை அசைக்க முடியவில்லை. முக்கால்வாசி நேரம் ஸ்ட்ரைக் அன்வரிடம்தான் இருந்தது.18வது ஓவரின்போதே 70 ரன்களைக் கடந்துவிட்ட அன்வர் சென்னை வெயிலால் டீஹைட்ரேட் ஆக, பைரன்னர் கேட்டார். ஷாகித் அஃப்ரிடி பை ரன்னராக வந்தார். இந்த இன்னிங்ஸில் அன்வர் அடித்த பெரும்பாலான ரன்கள் பை-ரன்னரின் துணையோடு அடிக்கப்பட்டவைதான்.

முதலில் அன்வரின் பவுண்டரிகளுக்கு கடுப்பான சென்னை கூட்டம், ஒருகட்டத்தில் கைதட்ட ஆரம்பித்தது. அணியின் ஸ்கோர் 143... ஆனால், இதில் அன்வரின் ஸ்கோர் மட்டுமே 100 என 26வது ஓவரிலேயே சதம் அடித்துவிட்டார் அன்வர். சேப்பாக்கம் முழுக்கவே அன்வருக்கு மனப்பாடம் ஆனதுபோல இருந்தது.

சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதைப்போல இந்திய பெளலிங்கை டீல் செய்துகொண்டிருந்தார் அன்வர். இந்திய ஃபீல்டர்கள் எங்கெல்லாம் இல்லையோ, அங்கே சரியாகப் பொசிஷன் பார்த்து பவுண்டரிகளைத் தட்டி விட்டுக் கொண்டிருந்தார். அதுவும் கும்ப்ளேவின் அந்த 40-வது ஓவரை எல்லாம் இப்போது நினைத்தாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

40-வது ஓவர்... கும்ப்ளேயின் இந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள். தொடர்ந்து மூன்று சிக்ஸர். இதில் முதல் சிக்ஸர் மட்டும் டிராப் ஆகி சிக்ஸ் ஆகியிருக்கும். மற்றதெல்லாம் நேரடியாக ஸ்டாண்டுக்குள் போய்விழுந்த சிக்ஸர்கள்தான். கேப்டன் சச்சினுக்கு அன்வரை எப்படி அவுட் ஆக்குவதென்றே தெரியாமல் ஒருகட்டத்தில் தன்னையே முழுமையாக நம்ப ஆரம்பித்தார். இதற்கிடையே விவியன் ரிச்சர்ஸின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரான 189 ரன்களைக் கடந்து டபுள் சென்சுரி அடித்துவிடுவார் என்கிற அளவுக்கு திகில் கூடியது. 194 ரன்னில் இருக்கும்போது கங்குலி சூப்பர் கேட்ச் பிடிக்க, டெண்டுல்கரின் பெளலிங்கில் அவுட் ஆகியிருப்பார் அன்வர். ஒரு பாகிஸ்தான் வீரருக்கு இந்தியாவில் முதல்முறையாக ஸ்டாண்டிங் ஓவேஷன் அன்றுதான் கொடுக்கப்பட்டிருக்கும். அன்வர் இன்னிங்ஸில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் அடிக்கப்பட்ட ரன்கள் மட்டும் 118.

Saeed Anwar

இந்தியாவுக்கு எதிராக அன்வர் அடித்த முதல் சதம் அது. இதன்பிறகு இந்தியாவுக்கு எதிராக நான்கு சதங்கள் அடித்தார். அன்வரின் கடைசி சதமும் இந்தியாவுக்கு எதிராகத்தான் அடிக்கப்பட்டது.

டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மேட்டிலுமே பாகிஸ்தானின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சயீத் அன்வர். இடதுகை பேட்ஸ்மேனான இவர் ஆடும்போது முகத்தில் எந்த ரியாக்‌ஷனுமே இருக்காது. ஃபுட் மூவ்மென்ட் பெரிதாக இருக்காது. ஆனால், ஃபீல்டிங் பொசிஷன்களை சரியாகப் பார்த்து நின்ற இடத்தில் இருந்தே பவுண்டரி, சிக்ஸர்கள் அடிப்பார் அன்வர். பெரும்பாலும் கிரீஸைத்தாண்டி வரமாட்டார். 90-ஸிலேயே அப்பர் கட் எல்லாம் முயற்சித்த பேட்ஸ்மேன் அன்வராக மட்டுமே இருப்பார். 90'ஸில் பிரையன் லாராவுக்கு அடுத்து பிரபலமான இன்னொரு இடது கை பேட்ஸ்மேன் சயீத் அன்வர்தான்.

அன்வர் ஒருநாள் போட்டியில் மட்டுமல்ல, டெஸ்ட்டிலும் இந்தியாவுக்கு எதிராக இதேபோல் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். 1999-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி அது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆவார் அன்வர். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் சிங்கிளாக நின்று இந்திய பெளலிங்கை மிரட்டியிருப்பார். ஒருபக்கம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் விழுந்துகொண்டேயிருக்கும். ஆனால், அன்வர் மட்டும் பவுண்டரிகளாக அடித்துக்கொண்டேயிருப்பார். இந்த இன்னிங்ஸில் பாகிஸ்தான் லெவனில் 7 பேட்ஸ்மேன்கள் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகியிருப்பார்கள். ஆனால், அன்வர் மட்டும் 23 பவுண்டரி 1 சிக்ஸர் என 188 ரன்கள் அடித்து கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருப்பார். இந்தியா வெற்றிபெற்றிருக்க வேண்டிய போட்டி அப்படியே பாகிஸ்தான் பக்கம் போய்விடும்.

90'ஸில் உலக சாதனைப்படைத்த அன்வரின் 194 ரன்கள் இன்று உலகின் அதிகபட்ச தனிநபர் ரன் சாதனையில் 10-வது இடத்தில் இருக்கிறது. அன்று அன்வரை அவுட் ஆக்கிய சச்சின்தான் அன்வரின் 194 ரன்கள் சாதனையையும் முறியடித்தார்.

இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து எனப் பல நாடுகளுக்கு எதிராகவும் பல முக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார் அன்வர். குறிப்பாக, இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் வெற்றிபெற மிகப்பெரிய லீட் தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் சதங்கள் அடித்திருக்கிறார். 94-ல் நியூசிலாந்தின் வெலிங்டனில் 169 ரன்கள், 96-ல் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் 176 ரன்கள் என இவரின் பெரிய இன்னிங்ஸ்கள் பலவுமே எதிரணியினரின் மைதானங்களில் அடிக்கப்பட்டவைதான்.

Saeed Anwar

Also Read: ஜான்ட்டி ரோட்ஸ்... இவர் ஆடிய எல்லா மேட்சுமே சென்சுரிதான்... எப்படி?! அண்டர் ஆர்ம்ஸ் - 4

கரியரின் உச்சத்தில் இருந்தபோதுதான் அன்வரின் பர்சனல் வாழ்வில் பெரும் சோகம் ஏற்பட்டது. 2000-ம் ஆண்டு பாகிஸ்தானின் முல்தானில் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தது பாகிஸ்தான். இந்தப் போட்டியில் அன்வர் உள்ளிட்ட பாகிஸ்தானின் ஐந்து வீரர்கள் சதம் அடித்து சாதனை படைத்தார்கள். ஆட்டத்தின் கடைசி நாளில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி பாகிஸ்தான் பயணித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்தச் செய்தி பாகிஸ்தானின் பெவிலியனுக்கு வந்து சேர்ந்தது. `உடல்நலக்குறைபாட்ட்டால் அவதிப்பட்டுவந்த அன்வரின் 3 வயது மகள் மரணமடைந்துவிட்டார்' என்பதுதான் அது. கொண்டாட்டங்கள் எல்லாம் காணாமல் போனது. வெற்றிபெற்ற பாகிஸ்தான் வீரர்கள் எல்லோரும் அமைதியாகப் பெவிலியன் திரும்பினார்கள். இந்தச் சம்பவம் அன்வரின் கரியரையே அப்படியே புரட்டிப்போட்டது. நீண்டநாள்கள் அணிக்குள் வராமலேயே இருந்தார் அன்வர். தீவிர இஸ்லாத்துக்குள் மூழ்கினார். மதப்பிரசாகரானார். அணிக்குள் அடிக்கடி வந்துபோனாலும் பழைய ஃபார்ம் இல்லை. ஆனால், 2003 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலககக் கோப்பை அணியில் அன்வருக்கு இடம் கிடைத்தது.

இந்த உலகக்கோப்பை லீக் போட்டிகளில் சுமாராகவே ஆடிவந்த அன்வர், இந்தியாவுக்கு எதிராக மட்டும் மீண்டும் சம்பவம் செய்யப் பார்த்தார். தென்னாப்பிரிக்காவின் சென்சூரியனில் அந்தப்போட்டி நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் வழக்கம்போல மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாமே சொதப்ப, அன்வர் மட்டும் சிங்கிளாக நின்று ஆடிக்கொண்டிருந்தார். அன்வருக்கு அடுத்து அடுத்த டாப் ஸ்கோரரான யூனிஸ்கான் அடித்தது 32 ரன்கள்தான். அன்வர் 101 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு 273 ரன்கள் டார்கெட்டை செட் செய்திருப்பார். இந்தியா ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை யாருக்குமே இல்லை. வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷோயிப் அக்தர் என வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் மூன்று உலகத்தரமான வேகப்பந்து வீச்சாளர்களோடு ஆடியது பாகிஸ்தான். ஆனால், சச்சின் டெண்டுல்கரின் அதிரடி இன்னிங்ஸ் அப்படியே இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை மாற்றியது. இந்தப் போட்டிதான் சயீத் அன்வர் கடைசியாகப் பேட் பிடித்த போட்டி. சென்சுரியோடு தனது கரியரை முடித்துக்கொண்டார் சயீத் அன்வர்.

இப்போது பட்டியலிடப்படும் மிகச்சிறந்த 11-களில் அன்வரின் பெயர் இருக்காது. சச்சின், லாரா, கிரிஸ்டன், மார்க் வாக் என 90-ஸில் உலகம் முழுக்கவே மிகச்சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அந்தக்கூட்டத்துக்கு இடையே காணாமல்போய்விடுகிறார் அன்வர். ஆனால், கூட்டத்தில் ஒருவனல்ல அன்வர்... உலகம் கொண்டாட மறந்த பேட்ஸ்மேன். பர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம் மட்டுமில்லையென்றால் இன்னும் பல உச்சபட்ச இன்னிங்ஸ்களை ஆடியிருப்பார் அன்வர். காலம் எல்லோரையும் கருணையுடன் நடத்துவதில்லையே!



source https://sports.vikatan.com/cricket/saeed-anwars-magnificent-innings-against-india-at-1997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக