Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

அர்ச்சனாவுக்கு மூளைப் பகுதியில் ஏற்பட்ட திரவக் கசிவு; யாருக்கெல்லாம் ஏற்படும்? தீர்வுகள் என்ன?

தொலைக்காட்சி தொகுப்பாளரும் பிக்பாஸ் பிரபலமுமான அர்ச்சனா சில நாள்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். தனது மண்டை ஓட்டில் சிறிய துளை (Hole) ஏற்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து திரவம் கசிவதாகவும். இதனால் அந்தப் பகுதியை மறுசீரமைப்பு செய்வதற்கான அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். நான்கு மணி நேரம் அறுவைசிகிச்சை நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். அவரின் இந்தப் பதிவு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அர்ச்சனா மீது எதிர்மறை விமர்சனங்கள் வைத்தவர்களைக்கூட சற்று அசைத்துவிட்டது. அவர் தைரியமான பெண் என்றும் இந்தத் தடையை எளிதாகத் தாண்டி வந்துவிடுவார் என்றும் பல வாழ்த்துகள் குவிந்தன.

மருத்துவர் எஸ். திலீப் சந்த் ராஜா

அர்ச்சனாவுக்கு ஏற்பட்ட Cerebrospinal fluid leak (CSF Leak) யாருக்கெல்லாம் ஏற்படும், அதன் காரணங்கள் தீர்வுகள் என்ன என்று விளக்குகிறார் எலும்பு, மூட்டு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ்.திலீப் சந்த் ராஜா.

``CSF Leak பற்றி தெரிந்துகொள்ளும் முன் CSF என்பது என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். மூளையைச் சுற்றியுள்ள திசுக்களிலும் தண்டுவடத்தின் மேற்புறத்திலும் காணப்படும் நிறமற்ற ஒரு திரவம்தான் செரிப்ரோஸ்பைனல் ஃபளுயிடு (Cerebrospinal fluid). அந்த திரவத்தில் பீட்டா 2 டிராஸ்ஃபெரின் (beta 2 transferrin) என்னும் புரதம் இருக்கும். இது உலோகம் போன்ற வாசனையுடன் உப்பு கரித்து நிறமில்லாமல் இருக்கும்.

மூளைப்பகுதி மற்றும் அதை ஒட்டிய தண்டுவடத்தின் மேற்பகுதியும் பாதுகாப்பாக அசைவதற்கு குஷனிங் போன்று இந்தத் திரவம் செயல்படுகிறது. மூளை மற்றும் தண்டுவடத்தின் மேற்புறம் இரண்டும் பாதுகாப்பாக இருப்பதற்கு மூன்று அடுக்குகள் இருக்கும். அதாவது மூளையைத் தாண்டி முதல் அடுக்கு பயா மேட்டர் (pia mater), இரண்டாவது அடுக்கு அரக்னாய்டு (arachnoid), மூன்றாம் அடுக்கு டூரா மேட்டர் (Dura mater). இதில் இரண்டாம் அடுக்குக்கும் மூன்றாம் அடுக்குக்கும் இடையில்தான் CSF திரவம் இருக்கும்.

மூளைக்கு வெளியேயிருக்கும் மூன்றாவது அடுக்கான டூரா மேட்டரில் துளை ஏற்படுவதனால் CSF திரவம் வெளியில் கசியும். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நுங்கின் உள்ளே இருக்கும் திரவம், அதைச்சுற்றி இருக்கும் ஜெல் போன்ற அமைப்பு போல அடுக்குகள் காணப்படும். இந்தத் திரவம் கசிவதைத்தான் CSF Leak என்கிறோம். இந்தத் துளை பல நேரங்களில் காரணம் இல்லாமல்கூட உருவாகும், மரபு நோய்களால், தலையில் ஏற்படும் விபத்துகளால் அல்லது வேறு அறுவை சிகிச்சைகளில் ஏற்படும் தவறுகளால் மற்றும் இணைப்புத் திசு (connective tissue disease) நோய்களால் ஏற்படலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் மற்றும் இதயம்கூட வலுவற்று இருக்கும். இவர்களுக்கு மூளையின் டூரா மேட்டரும் வலுவில்லாமல் இருக்குமென்பதால் CFL ஏற்படலாம்.

Brain

டூரோ, அரக்னாய்டு மற்றும் பயா மேட்டர் ஆகிய மூன்றும் சேர்ந்ததைத்தான் மெனிஞ்சஸ் (meninges) என்று அழைக்கின்றனர். இவை மூளையை வெளிப்புறத்திலிருந்து தொற்று தாக்காமல் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன. மூளைப்பகுதியில் துளை ஏற்பட்டு CFL ஏற்படும்போது மூக்கு, காதிலிருக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் மூளைப்பகுதிக்குச் சென்று மெனிஞ்சஸ் பகுதியில் தொற்றை ஏற்படுத்தும்.

இது மூளைக்காய்ச்சல் (meningitis) எனப்படும் தீவிர பாதிப்புக்கு வழி வகுக்கும். CFL கசிவு ஏற்பட்டால் மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிகின்றனவா எனக் கண்டறிய வேண்டும். இல்லாவிடில் அதிக டோஸ் ஆன்டிபயாடிக் மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டும். நிலைமை தீவிரமானால் உயிருக்குக்கூட பாதிப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்:

தலைவலி, வாந்தி வருவது, தலைச்சுற்றல் ஆகியவை பொதுவான அறிகுறிகள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு போட்டோ போபியா ஏற்படலாம் என்பதால் வெளிச்சத்தைப் பார்க்கும்போது கூசுவது போன்ற உணர்வு ஏற்படும். அதே போல போனோ போபியாவும் ஏற்படலாம் என்பதால் சத்தம் கேட்கும்போது எரிச்சலுணர்வு ஏற்படும். இவை தவிர சிலருக்கு கழுத்துவலி மற்றும் அப்பகுதியில் விறைப்புத்தன்மை ஏற்படலாம்.

Human brain

Also Read: ``அன்பு ஜெயிக்கும்னு இனியும் நம்புவேன்!" - `பிக்பாஸ்' அர்ச்சனா பளிச் #VikatanExclusive

எப்படி கண்டறிவது?

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு மூக்கு, காதில் தண்ணீர் போன்ற திரவம் கசியலாம். அதைச் சோதனை செய்து அதில் பீட்டா 2 டிரான்ஸ்ஃபெரின் புரதம் கண்டறியப்பட்டால் CFL உறுதியாகும். பின்னர் சரியாக எந்த இடத்தில் கசிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். எம்ஆர்ஐ ஸ்கேன், சிஸ்டர்னோகிராபி (Cisternography) ஆகிய பரிசோதனைகள் உதவும்.

தீர்வு என்ன?

இந்தப் பிரச்னை ஏற்படும் பெரும்பாலானவர்களுக்கு சில வாரம் ஓய்வு, மூக்கு சிந்தாமல் இருமல், தும்மல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் சில நாள்களில் தானாகவே பிரச்னை சரியாகும். மேலும், இவர்களுக்கு கசிவு ஏற்படுவதைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இந்த சிகிச்சையில் பிரச்னை குணமாகாத பட்சத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும். டூரா மேட்டரில் உள்ள துளையை அடைக்க நம் சதை அல்லது கொழுப்பையே பயன்படுத்தலாம்.

நவீன முறையில் எபிடூரல் (epidural), கொலாஜென் போன்ற பேட்ச் மூலமும் அதைச் சரிசெய்யலாம். ஃபைபிரின் (fibrin) என்ற ஒரு வகை பசையைக் கொண்டும் அடைக்கலாம். சிலருக்கு CFL ஏற்பட்டாலும் திரவக் கசிவு இருக்காது. தலைவலி மட்டுமே ஏற்படும். இது லேசான பாதிப்புதான். இதைக் கண்டறிய அதிக காலம் ஆகலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது.

பெரிய துளை இருக்கும்பட்சத்தில் அறுவை சிகிச்சை அவசியம். அறுவைசிகிச்சையில் டூரா மேட்டரில் உள்ள துளையை தைத்துவிடுவர் அல்லது கிளிப் போடப்படும். சிகிச்சைக்குப் பின்னர் டூரா மேட்டரில் தையல் போட்டிருந்தால் உடனே குணமடைந்து விடுவர். பசை மட்டும் போட்டிருந்தால் குணமடைய 2 வாரங்கள் வரை ஆகலாம்.

அர்ச்சனா

Also Read: அர்ச்சனா பாத்ரூம் டூர் வீடியோ சர்ச்சை : "இது சோலோ vs கார்ப்பரேட் பிரச்னையல்ல!"- விளக்கும் யூ-ட்யூபர்

டூரா, நுங்கின் உள்பகுதி போன்று மெல்லியதாக இருக்கும். நுங்கில் துளையிட்டதும் ஜூஸ் வருவது போல டூராவிலிருந்து திரவம் வெளியே வராமல் அந்தப் பகுதியில் தையல் போடுவது கடினம். இதனால்தாம் பெரும்பாலும் பிற சிகிச்சைகளையே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்” என்கிறார்.

அர்ச்சனா சரியான நேரத்தில் மருத்துவர்களை அணுகி அவருக்கு சிகிச்சையும் ஆரம்பித்துவிட்டது. எனவே, கவலை வேண்டாம்!



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-about-what-is-cerebrospinal-fluid-leak-and-its-causes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக