Ad

திங்கள், 13 ஜூலை, 2020

அப்பாவி, வெகுளி, நக்கல்... காமெடி, சென்டிமென்ட்..! - சார்லி எனும் உன்னத கலைஞன் #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

ஒரு படத்தில் நண்பர்களுடன் வெளியே சாப்பிட சென்றபோது கடைக்காரரிடம், "சூடா ரெண்டு ஐஸ்கிரீம் கொடுங்க" என்பார் சார்லி. அந்தக் காட்சிக்குப் பிறகுதான் யாருடா இந்த நடிகர் என்று தேடி சார்லி எனும் மகா கலைஞனைப் பற்றி 90-ஸ் கிட்டான நான் ஓரளவு தெரிந்துகொண்டேன்.

"நான் எங்க அப்பா மாதிரி கலெக்டர் ஆகணும்னு ஆசப்பட்டேன்." "என்னது உங்கப்பா கலெக்டரா சொல்லவே இல்ல?" "எங்கப்பாவும் ஆசதான் பட்டாரு அவரும் கலெக்டர் ஆகல" என்று நக்கல் செய்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் இவரால் முடியும்.

"சென்னைக்கு வந்து நல்லா சம்பாதிச்ச அத்தன பேரும் வாய் கூசாம இந்த ஊர திட்டுவானுங்களே தவிர ஒருத்தன் கூட ஊர காலி பண்ணி போக மாட்டான் சார்... அது இந்த ஊரோட ராசி அப்படி."

"ராசியா... நடுரோட்டுல போட்டு ஒருத்தன அடிச்சா ஏன்னு கேக்கறதுக்கு ஒருத்தன் வரமாட்டான்..."

"நாம கேட்ருக்கமா சார்... நாம கேட்டாதான் நமக்கு நடக்கும்போது கேப்பாங்க..." என்று ஹீரோவுடன் சீரியஸ் வசனம் பேசி சிந்திக்க வைக்கவும் இவரால் முடியும்.

சார்லி என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது பட்டையும் மஞ்சள்பையுமாக அப்பாவியாய் அலைந்து திரிந்த 'வெற்றிக்கொடிகட்டு' பழனி கதாபாத்திரம்தான்.

'வெற்றிக்கொடிகட்டு' படத்தில் சார்லி

இந்திய நாட்டின் வறுமை மண்டையைப் பிய்த்து எடுக்க துபாய்க்கு போய் சம்பாதிச்சு 3 வருஷத்துல செட்டில் ஆகலாம் என நினைத்து போலி ஏஜென்சியிடம் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு பரதேசியாய் அலையும் கேரக்டர்.

"பட்டணத்துல திருட்டு பசங்க ஜாஸ்திங்கறதால பணத்த இடுப்புலயே கட்டிக்கிட்டு விடியவிடிய தூங்காம உங்ககிட்ட வந்தேன்" என்று திருடனிடமே சொல்லி நிலம், நகை அனைத்தையும் விற்ற காசை மேசையில் கொட்டும் சார்லியின் அறிமுக காட்சியிலயே நமக்கு கண்கள் கலங்கிவிடுகிறது.

'உன்னை நினைத்து' படத்தில் சார்லி

அதையடுத்து, சேகர் (முரளி) வீட்டுக்குச் சென்று துபாய் போறதுக்கு ஆசப்பட்டு ஏமாந்த கதையை சார்லி சொல்ல மனோராமா அவர் சொல்வதை நம்பாமல் சார்லியை பைத்தியம் என நினைப்பார். அந்த நேரத்தில் பார்த்திபன் அங்கு வந்து சார்லிக்கு ரகசியமாய் உண்மையைச் சொல்ல அதைப் புரிந்துகொண்ட சார்லி சட்டென்று பைத்தியம் போல் நடிக்க ஆரம்பித்துவிடுவார். "நான் துபாய் நாட்டு இளவரசன்..." என்று தொடங்கி பசுமாட்டை காண்பித்து, "இந்த ஒட்டகத்த நீங்க ஏன் சரியா கவனிக்கல" என்று வசனம் பேசும் காட்சியில் நம் மனதைக் கலங்கடித்துவிடுவார். அதுவும் இந்தக் காட்சிகளை ஒரே டேக்கில் செய்து முடித்திருப்பார். இந்த இடத்தில் நடிகர் நாகேஷ் நினைவுக்கு வந்து சென்றார்.

மனோராமாவின் வீட்டிலிருந்து கிளம்பும் வரை தன் துக்கத்தை மறைத்து அடுத்தவரின் சந்தோசத்துக்காகத் தன்னை பைத்தியம் போல் காட்டிக்கொள்வார். மனோராமாவின் வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாப்புக்குப் பார்த்திபனுடன் செல்லும்போது தன்னுடைய மோசமான நிலைமையை கூறும் காட்சியிலும் அந்த பிராடுகார பையன் கிடைச்சான்னா என்று ஆக்ரோசமாகப் பேசும் காட்சியிலும், ஒரு பத்து ரூபா கிடைக்குமா என்று ஏக்கமாகக் கேட்கும் காட்சியிலும் சார்லி எனும் மகா கலைஞன் நம்மை அசரடிக்கிறார். வீட்டில் மதிப்பிழந்து ஊர்ஊராய் அலைந்தாலும் கடைசியில் தன்னைப் போல ஏமாந்தவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்துவிட்டு உயிர் துறக்கும் பழனி கேரக்டரை சார்லிக்கு கொடுத்ததற்காக இயக்குனர் சேரனுக்கு நன்றி.

இன்றைக்கும் வெளிநாடு செல்வதற்காகப் பணம்கட்டி ஏமாந்து, பிறகு அந்தப் பணத்தை திரும்ப பெற அலைந்து திரியும் அப்பாவி கிராமத்து இளைஞர்களைப் பார்க்கும்போது பட்டை பூசிய பழனியின் முகம்தான் நினைவுக்கு வருகிறது. சென்னைக்குப் புதிதாக வந்து வழிதெரியாமல் தடுமாறும் டாக்சி டிரைவராக 'மாநகரம்' படத்தில் கலக்கியிருப்பார்.

'மாநகரம்' திரைப்படத்தில் சார்லி

வட்டி ராஜாவுக்கு வட்டி கட்ட முடியாமல் வாழ்வின் இறுதி நிலைக்குப் போயி பிறகு வட்டி ராஜாவின் இறப்பால் சிரிக்கும் சாமான்ய மனிதராக 'நேரம்' படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் யதார்த்தமாக நடித்திருப்பார். பக்கத்து வீட்டுப் பையனாக இருந்தாலும் ஜீவாவை எந்நேரமும் தன் வீட்டிலயே வைத்து வளர்த்து, அவன் ஆசைப்பட்ட கிரிக்கெட் பேட்டை சொந்தக்காசில் வாங்கிக் கொடுத்ததோடு அல்லாமல் பேட்டுக்கான காசை ஜீவாவின் அப்பா கொடுத்தனுப்ப அந்தக் காசையும் ஜீவாவின் செலவுக்கே கொடுக்கும் அன்பான பக்கத்து வீட்டுக்காரராக ஜீவாவுக்கு இன்னொரு அப்பாவாக சுசீந்திரனின் 'ஜீவா' படத்தில் அசத்தியிருப்பார். திருமணமாகாத முதிர் கண்ணனாக இருந்தாலும் சோகத்தை மறைத்து தங்கையின் திருமணத்துக்காக அலைந்து திரியும் அண்ணனாக 'ஒருநாள் கூத்து' படத்திலும், கண் பார்வை மங்கியபோதும் தன் மகனுக்காக மீண்டும் வேலைக்குப் போகும் அப்பாவாக 'வேலைக்காரன்' படத்திலும், குழந்தைப்பேறு இல்லாத குடும்பஸ்தனாக இளம் நாயகனுக்கு உடன்பிறவா அண்ணனாக 'கிருமி' படத்திலும், எந்நேரமும் குடித்துக்கொண்டே தூங்கிக்கொண்டே இருக்கும் குடிகாரனாக 'அந்நியன்' படத்திலும், தண்ணி தொட்டிக்குள் குளிக்கச் செல்வதாய் சென்று அநியாயமாக உயிரிழக்கும் வாட்ச்மேனாக 'திருட்டுப் பயலே' படத்திலும் மனிதர் அட்டகாசம் செய்திருப்பார்.

சின்ன கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதை ரசிகர்கள் மனதில் நன்கு பதிய வைக்கக் கூடிய திறமையான நடிகர். 'உன்னை நினைத்து' படத்தில் காலி ஐஸ்கிரீம் டப்பாவை கொடுத்து சக லாட்ஜ் மெம்பரையும் செத்துப்போனவன் ஜாதகத்தைப் பார்த்து 'ஓஹோ'ன்னு வருவான்னு சொல்லி ஜாதகம் பார்க்க வருபவரையும் ஏமாற்றும் பிராடு ஜோசியராக, ப்ரண்ட்ஸ் படத்தில் தலையில் அடிபட்டு "ஆமா இவங்க யாரு உங்க ஒய்ஃப்பா", "இதோ இவருதான்... இவருக்கு இதான் வேல..." என்று மறதிநோயால் பாதிக்கப்பட்ட கோபாலாக (கோவாலாக) மனிதர் பிரித்து மேய்ந்திருப்பார்.

'ப்ரண்ட்ஸ்' படத்தில் சார்லி

அந்தக் காமெடி காட்சிகள் இன்றும் என்றும் மீம் டெம்ப்ளேட்களாக சமூக வலைதளங்களில் உலாவும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கவுண்டமணி செந்தில் காமெடி வீடியோக்கள், வடிவேலு காமெடி வீடியோக்கள், விவேக் காமெடி வீடியோக்கள், சந்தானம் காமெடி வீடியோக்கள் போல சார்லியின் காமெடி வீடியோக்களும் யூடியூபில் தனித்தனி தொகுப்புகளாக கிடைக்கப் பெறுகின்றன. இத்தனை பெருமை இருந்தபோதிலும் கடந்தகால பெருமைகளைப் பேசித் திரியாமல் 60 வயதிலும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் வாங்கிய இவரை நாம் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்.

- ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-tamil-actor-charlie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக