Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2020

``அல்லு அர்ஜுன்கூட நடிக்க மாட்டேன்னு நேர்ல போய் சொல்லிட்டு வந்தேன்... ஏன்னா?!'' - விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி என்றாலே வெரைட்டிதான். ஹீரோ, வில்லன், தாத்தா, திருநங்கை எனத் தனக்குப் பிடித்திருந்தால் எந்தவிதமான கேரக்டரிலும் நடிப்பார். சினிமாவிலும் நடிப்பார், குறும்படத்திலும் இருப்பார், வெப்சிரிஸூக்கும் வருவார் எனத் தன்னைச் சுற்றி எந்த இமேஜ் வட்டத்தையும் வரைந்துகொள்ளாதவர். கையில் ஏகப்பட்ட படங்களோடு தினந்தோறும் ஷூட்டிங் எனத் பரபரப்பாக இருந்தவரை லாக்டெளன் விருகம்பாக்கத்துக்குள்ளேயே முடக்கியிருக்கிறது. விஜய் சேதுபதியிடம் பேசினேன்!

`` `துக்ளக் தர்பார்' படத்துல சீனியர் நடிகர், இயக்குநர் பார்த்திபனோட நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?''

``பார்த்திபன் சாருடைய டைமிங் ரொம்பப் பிடிக்கும். அவர் யோசிக்குற விதம் நல்லா இருக்கும். அப்புறம், டிஸ்கஸ் பண்றப்போ அவர்கிட்ட இருந்து ஐடியாஸ் கொட்டிட்டே இருக்கும். அவர்கூட பேசுறதே அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கும். அவர் ஸ்பாட்லகூட இருக்குறப்போ ரொம்ப பிடிச்சு, ரசிச்சு வேலை பார்ப்பேன். ஸ்பாட்லயே திடீர்னு ஏதாவது டயலாக் போடுவார். சரியா இருக்கும். அவர் ஒரு ஊற்று. புதுப்புது எண்ணங்கள் அவர்கிட்ட இருந்துவந்துட்டே இருக்கும்.''

``நீங்க சினிமால ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 10 வருஷங்கள் ஆகிடுச்சு... இந்தப் பயணத்தில் கற்றதும் பெற்றதும், இழந்ததும் என்ன?''

``அறிவு, செல்வம், பேரு, புகழ் இதெல்லாம் பெற்றதுனு நினைக்குறேன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் இன்னொசென்ட்டா இருந்தேன். இதை இப்போ முழுசா இழந்துட்டேன். அதே மாதிரி ஓரளவுக்கு நல்லவனா, கொஞ்சம் நேர்மையா இருந்தேன். இப்போ எப்படியிருக்கேன்னு எனக்கே தெரியல. என்னை சுத்தி நிறைய மனுஷங்க முகமூடியோட சுத்தியிருக்காங்க. இதெல்லாம் லேட்டாதான் தெரிய வந்தது. இதை அறிவு, ஞானம், அவஸ்தைனு எப்படி சொல்றதுனு தெரியல. சில சமயம் உங்களுக்கு அறிவு இருக்குறதே பெரிய அவஸ்தைதான். சில சமயம் `நாம முன்னாடி மாதிரியே இருந்துட்டு போயிருக்கலாம்'னு தோணும். இந்த வயசுல கேட்குறப்போ இதை சொல்றேன். 10 வருஷம் கழிச்சு கேட்டா வேற மாதிரி சொல்லுவேன். அப்படி இல்லாம இதையே சொல்லிட்டிருந்தா நான் இன்னும் வளரலைனு அர்த்தம்.''

Parthiban, Vijay Sethupathi

`` `ஓ மை கடவுளே' படம் மாதிரி உங்களுக்கு கோல்டன் டிக்கெட் கிடைச்சா, கடந்த காலத்துல நடந்த எதை மாத்தணும்னு நினைப்பீங்க?''

``நான் பொறக்காமலேயே இருந்துருவேன். ஏன்னா, பொறந்துட்டு வாழ்றது ரொம்ப டார்ச்சரா இருக்கு. என் மனைவிகிட்ட பேசுறப்போ, `என்ன எழவுக்கு பொறந்தோம்னே தெரிய மாட்டேங்குது. சுமையை தூக்கி தோள்ல வெக்குறாங்க. படிக்கணும் ஓடணும், வேலைக்குப் போகணும். இதுல ஏதாவது ப்ரூவ் பண்ணி காட்டணும், நிக்கணும். அப்புறம் திருமண வாழ்க்கைகுள்ள போகணும். உங்களையெல்லாம் பத்திரமா பாத்துக்கணும். இதெல்லாம் சேர்த்து உடம்பையும் பத்திரமா பார்த்துக்கணும். கொஞ்ச நாள்ல வயசாகிடும்... செத்துருவோம்'னு சொன்னேன். என்னன்னே தெரியாம தள்ளி விட்டு தார் குச்சியை வெச்சு குத்திக்கிட்டே இருக்க மாதிரி இருக்கு வாழ்க்கை. அதனால, கோல்டன் டிக்கெட் கிடைச்சா பொறக்கமாலேயே இருந்திருவேன்.''

``பேன் இந்தியா சப்ஜெக்ட் படங்கள்ல நடிக்குறதுக்கு எல்லாருடைய முதல் சாய்ஸாவும் நீங்கதான் இருக்கீங்க... இதை எப்படிப் பார்க்குறீங்க?''

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லோரும் ஒரே கூரையின் கீழதானே இருக்கோம். நிறைய பேர் அப்ரோச் பண்றாங்க. எல்லாருக்கும் என்னை பிடிச்சிருக்கு. எல்லாரையும் ரசிக்கிறேன். கலைக்கு எல்லைகள் இல்ல. இந்த எண்ணத்தை அந்த மனுஷனுக்கு உருவாக்குறது என்னோட தொழில். இதுல அவனோட அன்பும் பெருசு. இது ரெண்டும் கிடைக்குறப்போ நான் சந்தோஷமாகிடுறேன்.''

``அல்லு அர்ஜூனின் `புஷ்பா' படத்துல நடிக்கிறீங்களா?''

Vijay Sethupathi

``கால்ஷீட் பிரச்னை காரணமா அல்லு அர்ஜுன்கூட நடிக்க முடியல. இயக்குநர் சுகுமாரன் சார்கிட்ட நேர்ல போய் பார்த்து இந்த விஷயத்தை சொன்னேன். அல்லு அர்ஜூனும் பெரிய நடிகர். டேட் இல்லாம நம்மால் சொதப்பிடக் கூடாதுனு பயமா இருந்துச்சு. `சைரா' படம் போதுகூட இந்த பயம் இருந்தது. எல்லாருமே பெரிய பெரிய ஆர்டிஸ்ட். அவங்க எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டு நான் போக முடியாம போயிட்டா நல்லாயிருக்காதுல. `என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்'னு சொல்லி கூப்பிட்டாங்க. ஆனாலும், மறுத்துட்டேன். வாக்கு கொடுத்துட்டு போக முடியலைனா நல்லாயிருக்காது. வேலை செய்றோம்னு சொல்லிட்டு சொதப்புறதுக்கு பதிலா, பேசமா தள்ளி நின்னுறலாம்னு தோணும். ஆனா, `புஷ்பா' கதை சூப்பரா இருந்தது. பெரிய டைரக்டர் வேற. இதை மிஸ் பண்ணதுக்கு நான் வருத்தப்படுறேன்.''

``சினிமால வாரிசுகளோட ஆதிக்கம் இருக்குன்னு சொல்றாங்களே... நீங்க அப்படி எதுவும் ஃபீல் பண்ணியிருக்கீங்களா?''

``ஒரு தொழில்ல நேரடியா வேலை செய்றவங்களைத்தாண்டி இதை சார்ந்து சிலர் இருப்பாங்க. அவங்களுக்கு சார்பு நிலைனு ஒண்ணு இருக்கும். அவங்க அவங்களுக்கு ஃபேவரான வேலையை செஞ்சிட்டே இருப்பாங்க. அவங்க எப்பவும் திரைக்கு பின்னாடிதான் இருப்பாங்க. இவங்கதான் முக்கியமான கேம் ஆடுவாங்க. ஆனா, வெளியே தெரியாது. வெளியே சொல்லியும் பிரயோஜனம் கிடையாது. இதைத்தாண்டிதான் இங்கே சர்வைவ் ஆகணும். இந்த வயசுல என் வீட்டுலயே என்னை Pamper பண்ண மாட்டாங்க. தொழில் பண்ணப்போற இடத்துலயும் யாரும் Pamper பண்ணப் போறதில்ல. நாம இருக்குற இடத்துல இருந்து காய் நகர்த்தி முன்னாடி எப்படி எடுத்துட்டு போறோம்குறதுதான் முக்கியம். எவ்வளவு பெரிய இடத்துக்குப் போனாலுமே, சிலர் சிலதை பண்ணிட்டேதான் இருப்பாங்க. கொஞ்ச நாள்ல நமக்கு இது பழகிடும். இவரு, அவருனு பேர் சொல்லலாம். ஆனா, சொல்லி என்ன நடக்கப்போகுது?!''

Vijay Sethupathi , Shruti Haasan

``தெலுங்குல `உப்பண்ணா' படத்துல ஹீரோயினுக்கு அப்பாவா நடிச்சிக்கிட்டே, இங்கே ஹீரோயின் கூட டூயட்டும் பண்றீங்களே?''

``எனக்கு சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி, 27 வயசுலயே தாடி, மீசைலாம் நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. டை அடிச்சிட்டே இருப்பேன். கொஞ்சம் சாப்பிட்டாலும் வெயிட் போட்ரும். அதனால, அப்பா, அண்ணண் கேரக்டர்ல நடிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். ஏன்னா, எங்கேயாவது ஆடிஷனுக்குப் போனா, `மூஞ்சி ரொம்ப முத்தியிருக்கு... ஹீரோ மெட்டீரியல் இல்ல'னு சொல்லுவாங்க. நானும், சரி அப்பா கேரக்டருக்கு முயற்சி பண்ணலாம்னு இருந்தேன். ஏன்னா, நிஜ வாழ்க்கைல வயசு முப்பதைத்தொட்டு ரெண்டு குழந்தைகளுக்கு அப்பாவா இருந்தேன். ஆனா, ஹீரோவா நடிச்சிட்டேன். இப்போதான் அப்பாவா நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. தெலுங்குல `உப்பண்ணா' படத்துல சாதி வெறி பிடிச்ச ஒரு தகப்பனா நடிச்சிருக்கேன். இந்த ஸ்க்ரிப்ட் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. என்னைப் பொறுத்தவரைக்கும் சாதியை எப்போவும் நான் ஏத்துக்க மாட்டேன். எல்லா மனுஷனும் எனக்கு சமம். சாதி வலி எனக்குத் தெரியும். சாதியோட கொடூரம் தெரியும். அதனால, இந்த கேரக்டர்ல நடிக்கலாம்னு பண்ணேன்.''

``ஹீரோவா நடிக்கும்போதே வில்லனாவும் நடிக்கிறீங்களே... இதெல்லாம் என்ன கணக்கு?''

``வில்லனுக்கு இங்கே தனியா பாடிலாங்குவேஜ்லாம் கிடையாது. எல்லார் வாழ்க்கையிலும் 10 வில்லனாவாது இருப்பாங்க. வில்லனுக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு கையும், காலுமா இருக்கு. தனியான பாடிலாங்குவேஜ்லயா இருக்காங்க? அவனோட குணத்துலதான் அவன் வில்லன். இன்னொரு உயிர் வதைக்கப்படுதுனு கவலைப்படுறவன் ஒருத்தன். ரசிக்குறவன் வேறொருத்தன். அதனால, முன்னாடி சொன்னமாதிரி நாங்க எல்லாரும் கருணையுள்ள கடவுளாவும் மாறி நடிக்க முடியும். கொடூரமான சாத்தனாவும் மாற முடியும். மனசுல நினைச்சிட்டா போதும். கடவுளும், சாத்தானும் உள்ளதானே இருக்கு. எப்போ எதை தொடுறமோ அப்போ அது வெளியே வரும்.''

`` `அப்பாவோட பயோபிக்ல விஜய்சேதுபதி நடிக்கணும் ஆசைப்படுறேன்'னு ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டில மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் சொல்லியிருக்கார். உங்க விருப்பம் என்ன?''

``யுகேந்திரன் அவரோட விருப்பத்தை சொல்லியிருக்கார். இதுல நான் என்ன சொல்றதுனு தெரியல. மலேசியா வாசுதேவன் சாருடைய பெரிய ஃபேன் நான். நிஜமாவே அவரோட வாய்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். யூடியூப்ல மலேசியா வாசுதேவன் சாரும், ஜானகி அம்மாவும் சேர்ந்து பாடுனா பாட்டு கலெக்‌ஷன்ஸ் கேட்டுகிட்டேயிருப்பேன். `அரிசி குத்தும் அக்கா மகளே' பாட்டு ரொம்பப் பிடிக்கும். தேன் குழைச்சு பாடியிருப்பார். ரொம்ப யுனிக்கான வாய்ஸ். அவர் மேல பெரிய மரியாதை இருக்கு.''



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-vijay-sethupathi-speaks-about-his-upcoming-projects-and-cinema-career

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக