தேயிலைச் செடிகளுக்கு நடுவே இறந்து கிடக்கும் காட்டுமாட்டின் கொம்பில் கயிற்றைக் கட்டி சிலர் சிரித்துக்கொண்டே இழுக்க, அதன் அருகிலேயே குழி ஒன்று தோண்டப்பட்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குந்தா வனச்சரக எல்லைக்குள் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதை உறுதி செய்து குந்தா வனச்சரகர் சரவணனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட கம்மந்து பகுதியில் வயது முதிர்ந்த பார்வையற்ற காட்டுமாடு ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்து கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. கால்நடை மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறாய்வு செய்தோம்’’ என்றார்.
அப்போது, ``சாம்ராஜ் டீ எஸ்டேட் பகுதியில் ஒரு காட்டுமாடு இறந்துகிடப்பதாகப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளனவே’’ என்ற கேள்வியை நாம் முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்த வனச்சரகர், ``ஆம். அது ஹாலாடா வேல்லி பகுதியில், இந்தக் காட்டுமாடும் வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுமாடு. அதையும் உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்துவிட்டோம்" என முடித்துக்கொண்டார்.
அதற்குள்ளாகவே தூதூர்மட்டம் பகுதியில் ஒரு காட்டுமாடு இறந்துகிடப்பதாகத் தகவல்கள் வந்தன. இதுகுறித்து மேலதிக விவரங்களைப் பெற உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமாரிடம் பேசினோம்.``காட்டுமாடுகள் இறந்திருப்பது உண்மைதான். நேற்று ஒரு காட்டு மாட்டின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. மருத்துவர்கள் இல்லாததால் இன்று மற்றவற்றுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.
சாம்ராஜ் எஸ்டேட் பகுதியில் இறந்த காட்டுமாட்டிற்கு உடற்கூறாய்வு செய்த கால்நடை மருத்துவர் நந்தினியிடம் பேசினோம்.``இறந்தது ஒரு பெண் காட்டுமாடு. இதற்கு சுமார் 2 வயது இருக்கக்கூடும். நேற்றுதான் பிரேதப் பரிசோதனை செய்தோம். மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்தபின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும்’’ என்றார்.
தனியார் தேயிலைத் தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் காட்டுமாட்டை, ஆண் காட்டுமாடு என்றும், இரண்டே வயதான விலங்கை வயது முதிர்வால் இறந்துள்ளது எனவும், உடற்கூறாய்வு செய்யாமலே செய்யப்பட்டுள்ளது என முரணாகப் பேசும் குந்தா வனச்சரகரின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
`வன விலங்குகளின் உடற்கூறாய்வு முடிவுகள் குறித்து யாரும் அக்கறை காட்டுவதில்லை. இதனை சாதகமாக்கி, வனத்துறையினர் சமாளித்து வருகின்றனர்’ எனக் காட்டுயிர் ஆர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நீலகிரியில் ஒரே நாளில் 3 காட்டுமாடுகள் உயிரிழந்தது காட்டுயிர் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/environment/three-indian-gaur-found-dead-in-one-day-at-nilgiri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக