``நான் 45 வயது இல்லத்தரசி. இந்த லாக்டௌன் முடிவதற்குள் எனக்கும் என் கணவருக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி வந்துவிடுமோ, அவர் மேல் இருக்கும் காதல் குறைந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
நான், என் கணவர் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் எங்கள் மகன் என மூன்று நபர்களைக் கொண்டது எங்கள் குடும்பம். காலையில் எழுந்ததும் என் மகன் மொபைலை எடுத்துக்கொண்டு ஆன்லைன் க்ளாஸ் என உட்கார்ந்துவிடுவான். என் கணவரோ நினைத்த நேரத்தில் எழுந்து, பல் தேய்த்துவிட்டு, மொபைலை எடுத்துக்கொண்டு மறுபடியும் படுத்துவிடுவார். நான் வழக்கம்போல் காலையில் எழுந்து கிச்சனுக்குள் சென்றால், மகனுக்கு பூஸ்ட், கணவருக்கு சுக்குமல்லி காபி அல்லது இஞ்சி டீ என்பதில் தொடங்கி, காலையில் டிபன், மதியம் லஞ்ச் என எல்லா வேலைகளையும் முடித்து, நான் சாப்பிட பகல் பன்னிரண்டு ஆகிவிடும். என் கணவரோ லஞ்ச் சாப்பிட்டு மீண்டும் படுத்துக்கொள்வார்.
தவிர, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மற்றும் பாஸ்ட்ரி என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும் நான். அடுத்து டின்னர் செய்கிற வேலை. என் கணவர் வழக்கம்போல மொபைல் போனுடன் படுக்கையில் இருப்பார். கூடவே ஆன்லைன் க்ளாஸ் முடிந்ததும் மகனும் உட்கார்ந்துவிடுவான். இதுதான் கடந்த மூன்று மாதங்களாக நடந்துகொண்டிக்கிறது.
எனக்கு வேலைகள் செய்துகொண்டே பாட்டுக் கேட்பது ரொம்பவும் பிடிக்கும். சில நேரங்களில் வேலைசெய்தபடியே என் அம்மாவுடன் பேசுவேன். என் தோழிகளுடன் அரட்டையடிப்பேன். அதற்கும், `உனக்கென்ன... ஜாலியா வீட்ல இப்டிதான் இருக்க எப்பவும்' என்கிறார் கணவர்.
எனக்குத் தையல் பிடிக்கும். மதிய வேளையில் அதைச் செய்தால், `இதெல்லாம் தேவை இல்லாத வேலை' என்று கமென்ட் செய்கிறார். என் கணவரைப் பொறுத்தவரை எது செய்தாலும் அதன் மூலம் பணம் வர வேண்டும். இல்லையென்றால், அது தேவை இல்லாத வேலைதான்.
நாள் முழுக்கப் படுத்துக்கொண்டே இருக்காதீர்கள் என்றால், `உனக்கு நான் ரெஸ்ட் எடுப்பது பொறாமையாக இருக்கிறது' என்று சொல்கிறார்.
`வீட்டு வேலையில் உதவிகூட செய்ய வேண்டாம், குறைந்தது வீட்டிலிருக்கும் நேரத்தை எங்களுடன் செலவிடுங்கள்' என்றால், `வீட்லதானே இருக்கேன், இதுக்கு மேல என்ன செய்யணும்' எனக் கேட்கிறார்.
அவர் அரசுக் கல்லூரியில் வேலைசெய்கிறார். அதனால், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விடுமுறைதான். அப்போதும் இப்படித்தான் படுத்துக்கொண்டே இருப்பார். ஏதாவது பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் வெளியே போவார், அவ்வளவுதான். ஆனால், இப்போது தினம் தினம் இவர் இப்படிச் செய்வது எனக்கு மிகவும் மனஉளைச்சலாக இருக்கிறது. இவருடைய ரிட்டையர்மென்ட்டுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறதோ என்று நினைக்கும்போது சோர்வாகிறது மனம்.
என்ன தீர்வு எனக்கு?''
சமீபத்தில் விகடனின் uravugal@vikatan.com க்கு, தன் பிரச்னைக்கான தீர்வுக் கேட்டு வந்திருந்த வாசகியின் மெயில் இது. அவருடைய வேண்டுகோளுக்கிணங்க அடையாளம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இவருக்கான ஆலோசனை மற்றும் தீர்வுகளைச் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் மாயா ராமச்சந்திரன்...
``இந்த ஊரடங்கு நேரத்தில், அனைவருக்கும் மொபைல் மீதான ஈடுபாடு அதிகமாகிவிட்டது. `வொர்க் ஃப்ரம் ஹோம்' மற்றும் `மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள்' இரண்டும் லேப்டாப் அல்லது செல்போனை சார்ந்திருப்பது இதற்குக் காரணம். தவிர, வேறு சுவாரஸ்யமான வேலைகளோ, விளையாட்டுகளோ இல்லாமல் இருப்பதும், மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசி நேரம் செலவிடாமல் செல்போன் சிறைக்குள் தங்களைச் சுருக்கிக்கொள்வதும் பிற காரணங்கள்.
``லாக்டெளன் நேரத்தில் மொபைல் மற்றும் லேப்டாப்களை ஒரு சிலர் அதிகமாகப் பயன்படுத்துவதால், பல குடும்பங்களில் உறவுகளிடையே விரிசல் விழுந்துகொண்டிருக்கிறது. அவற்றின் பயன்பாடுகளில் ஓர் எல்லை இருக்க வேண்டும். இதற்கான தீர்வு என்னவென்று பார்த்தால், அது டிவியோ, செல்போனோ... குடும்பத்துடன் ஒன்றாகத் திரைப்படம் பார்ப்பது, பிற நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பது என்று முயலுங்கள்.
குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து கேம்ஸ் விளையாடினால் மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும். வீட்டை சுத்தம் செய்வது, அலங்கரிப்பது, சமையலுக்கு உதவுவது போன்ற வேலைகளில் குடும்பமாக ஈடுபட்டாலும் உங்கள் பிரச்னை குறையலாம். இதைப் பெரியளவில் செய்ய முடியாவிட்டாலும் டீ போடுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களிலாவது முயன்று பாருங்கள்.
விருப்பமான உணவுகளைத் தயார் செய்து, மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து பேசியபடியே சாப்பிடுங்கள். இதுவும் குடும்பத்தில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.
நீங்களும் கணவரும் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசும்போது பல பிரச்னைகள் நீங்கித் தெளிவு பெற வாய்ப்புகள் அதிகம். உங்களின் இத்தனை ஆண்டுகால திருமண வாழ்வில், உங்களுக்கு ஏற்பட்ட வருத்தங்களை உங்கள் கணவரிடம் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையென்றால், அதை இந்த லாக்டெளன் நேரத்தில் செய்யுங்கள். அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உண்டு.
Also Read: முதல் மணம் தோல்வி... மறுமணம் செய்ய பயம்... கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன? #LetsSpeakRelationship
உங்கள் கணவர், நீங்கள் செய்யும் வேலைகளை அலட்சியப்படுத்துகிறார் என்றால், ஒருநாள் சில வேலைகள் செய்யாமல்விட்டு குடும்பத்துக்கு உங்கள் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்... தப்பில்லை.
உங்களுக்குத் தையல் பிடிக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில், அவருக்கு ஏற்ற உடைகள் அல்லது வீட்டிற்கான அலங்காரப் பொருள்கள் செய்து அவரிடம் காட்டுங்கள். அவர் மனம் மாற வாய்ப்புகள் அதிகம்.
எந்தச் செயலைச் செய்தாலும், அதில் சில தடங்கல்கள் ஏற்படுவது அல்லது அதைக் குறைத்துக் கூறுவது போன்ற எதிர்மறையான விஷயங்கள் நிகழ்வது சகஜம்தான். அதனால் மனமுடைந்து போகாதீர்கள்.
கணவருடைய பேச்சுகளைப் பற்றிக் கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்டுக்கொண்டே உங்கள் தினசரி வேலைகளைச் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் அருமையை, முக்கியத்துவத்தை உங்கள் கணவருக்கும் மகனுக்கும் உணர்த்துங்கள்.
`ஓய்வுக்கால வாழ்க்கை எப்படி இருக்குமோ' என்று எதிர்மறையாக எண்ணுவதைவிட, இந்த லாக்டௌனை அவருடைய ரிட்டயர்மென்ட் வாழ்க்கைக்கான பயிற்சியாக்கிக்கொள்ளுங்கள்.''
source https://www.vikatan.com/lifestyle/relationship/how-to-handle-husband-who-always-spend-his-time-with-smartphone
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக