Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2020

`டெக் உலகின் தோனி’... `கூகுள்’ சுந்தர் பிச்சை பிறந்தநாள் பகிர்வு!

கல்லூரி ஒன்றுக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்ற அவரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. `நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் எத்தனை மதிப்பெண் எடுத்தீர்கள்?' - அதற்கு அவர் சற்று சிரித்தபடியே ``உங்கள் கல்லூரியில் சீட்டு கிடைக்கத் தேவையான மதிப்பெண்களைவிடக் குறைவான மதிப்பெண்தான்" என்கிறார். அரங்கமே அதிர்கிறது. அவர் வேறு யாருமில்லை... கூகுள், ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சைதான். இன்று பிறந்த நாள் காணும் இவரது வாழ்க்கைப் பயணம் எப்படியானதாக இருந்தது?

சுந்தர் பிச்சை | Sundar Pichai

மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்கான விமான‌ டிக்கெட் கட்டணம் அவருடைய தந்தையின் ஒரு வருட வருமானத்தைவிட அதிகம். அப்படிக் கடன்‌வாங்கி அமெரிக்காவுக்குச் சென்று சேர்ந்த சுந்தர் பிச்சை, சமீபத்தில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கான விசா ரத்து செய்யப்படும் என்ற அமெரிக்க அரசின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்து, `புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நாங்கள் ஆதரவைத் தருவோம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பதிலளிக்கும் அளவு உயர்ந்துள்ளார். மதுரையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, இப்போது டெக் உலகையே ஆளும் சுந்தர் பிச்சை, 1972-ல் இதே நாள் பிறந்தார்.

சுந்தர் பிச்சையின் கதை சுவாரஸ்யமானது. பாலிவுட்டில் இன்னும் யாரும் இவரைப் பற்றி பயோபிக் எடுக்கிறேன் எனக் கிளம்பாதது ஆச்சர்யமே. ('சர்கார் சுந்தர் பிச்சை பயோபிக்தான பாஸ்!' என்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்). சுந்தர் பிச்சை சராசரி தமிழ் மாணவனாகவே வளர்ந்தார். டெலிபோன், டிவி என எதுவும் இல்லாத இரு அறைகள் உடைய வீட்டில் வளர்ந்தவர். எல்லா இந்தியர்களைப் போலவே கிரிக்கெட் வீரனாக ஆசைப்பட்டு முடியாமல் போய் கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். சிறுவயதிலிருந்தே எண்கள் மீதும் அது தொடர்பான புதிர்கள் மற்றும் விளையாட்டுகளில் மீதும் தீராத ஆர்வம் கொண்டவராக இருந்தார் சுந்தர் பிச்சை. அவர்கள் வீட்டில் புதிதாக டெலிபோன்‌ வாங்கியபோது அதில் டயல் செய்யும் எண்களை எல்லாம் மனப்பாடமாகச் சொல்லுவது அவருக்கு ஒரு பொழுதுபோக்கு.

அவர் சொல்லியது போலச் சிறுவயதிலிருந்த தொழில்நுட்பத்தின் மீதிருந்த ஆர்வம் அவருடனே பயணித்தது. பன்னிரண்டாம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண்கள் பெறவில்லை என்றாலும் நுழைவுத் தேர்வெழுதி காரக்பூர் ஐ.ஐ.டி-‌யில் உலோகவியல் பிரிவில் நான்காண்டுகள் பயின்றார். காரக்பூரில்தான்‌ அஞ்சலியைச் சந்தித்தார். அவரைத்தான் பிற்காலத்தில் கரம் பிடித்தார் சுந்தர். காரக்பூர் ஐ.ஐ.டிக்கு பிறகு, உதவித் தொகையுடன் அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்குக் கிடைக்கிறது. முன்பு சொன்னது போல அப்போது அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டின் கட்டணம் சுந்தர் பிச்சையின் தந்தையின் ஒரு வருடச் சம்பளத்திற்கும் அதிகமானதாக இருக்கிறது. சமீபத்தில்தான் இந்தக் கதைகளை அமெரிக்காவின் இறுதியாண்டு மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

Also Read: `அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்! #TechTamizha

கடன் வாங்கி அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற சுந்தர் ஸ்டான்ஃபோர்டில் படித்து முடித்தவுடன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிக்கிறார். சுந்தர் படிக்கும் காலத்தில், வீட்டுக்கு போன் செய்வதுகூட முடியாத காரியமாகவே இருந்தது. கல்லூரி அளிக்கும் உதவித்தொகை, அவரது சாப்பாட்டிற்கும் மற்ற அத்தியாவசிய தேவைகளுக்குமே சரியாக இருந்தது. எம்.பி.ஏ படித்து முடித்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவருக்கு குடும்பத்திற்குப் பணம் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம். அதற்காக, மெக்கின்ஸி (Mckinsey) எனும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சில காலம் பணியாற்றினார். பின் 2004-ல் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் பிச்சை.

அதுதான் இன்டெர்வெல் ப்ளாக்! அங்கு கூகுளில் என்னவெல்லாம் சாதித்தார் என்பதுதான் இரண்டாம் பாதி கதை.
Sundar pichai

கூகுளில் வேலைக்குச் சேர்ந்த பின்னர் சுந்தர் பிச்சை, முதல் முக்கிய வெற்றியாக கூகுள் டூல்பாரை உருவாக்கினார். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான டூல்பார் அது. அந்தக் காலகட்டத்தில், மைக்ரோசாஃப்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் இவை இரண்டும்தான் பிரவுசர்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அப்போதுதான், `டூல் பாருடன் ஏன் நிறுத்த வேண்டும், சர்ச் என்ஜின் வைத்திருக்கும் நாம் பிரவுசர் வெளியிடலாமே' என்று எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது. இதை முதலில் கூகுள் நிறுவனத்திடம் சொன்னபோது ``எதுக்கு வீண் வேலை" என்று நிராகரிக்கவே செய்தனர். ஒரு பிரவுசரை உருவாக்குவதென்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு, ஏகப்பட்ட தொகை செலவாகும்.

ஆனாலும், சுந்தர் பிச்சை அந்த சிந்தனையைக் கைவிடவில்லை. கூகுள் பிரவுசரை தயாரிப்பதற்கான முழுமையான வழிமுறைகளை உருவாக்கி அதை கூகுள் நிறுவனர் லாரியிடம் காட்டினார். அரை மனதாக அவரும் ஒப்புக்கொள்கிறார். அப்படி அறிமுகமானதுதான் கூகுள் குரோம். இது இன்று எந்த அளவு பிரபலம் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கூகுள் குரோம்

போட்டி பிரவுசர்கள் எல்லாம் காணாமல் போகும் அளவுக்கு வளர்ந்தது குரோம். அதன்பின் கூகுள் மேப்ஸ், கூகுள் டிரைவ் எனப் பல்வேறு சேவைகள் கூகுள் வெளியிட்டது. இது அனைத்துக்குப் பின்னும் சுந்தர் பிச்சையின் பங்கு பெரிதாக இருந்தது. சுந்தருடன் கூகுளும் வளர்ந்தது. வெறும் சர்ச் என்ஜினாக இருந்த கூகுள் இன்று மைக்ரோசாஃப்ட் போன்ற பெரும் நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி மென்பொருள் உலகின் மிக முக்கிய நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.

`இவர் நம் நிறுவனத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்' எனப் பல்வேறு நிறுவனங்கள் சுந்தர் பிச்சையை அணுகின. ஆனால், அவற்றையெல்லாம் சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். ``எனக்கு வாய்ப்பளித்தது கூகுள்தான். நான் கூகுள் நிறுவனத்தில்தான் பணிபுரிவேன்" என்று உறுதியாக இருந்தார்.

கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான துணை நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவர, கூகுளின் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்ஜி ப்ரின் இருவரும் `ஆல்ஃபாபெட்' எனும் நிறுவனத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தனர். அப்போது, கூகுள் நிறுவனத்தை மட்டும் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள ஒருவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என முடிவுசெய்தனர். அதற்கு சுந்தர் பிச்சையைவிடச் சிறந்த சாய்ஸ் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. 2015-ம் ஆண்டு, கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக இனி சுந்தர் பிச்சை செயல்படுவார் என்று லாரி பேஜ் அறிவித்தார். அப்போதுதான் உலகமே இவர் யார், எங்கு படித்தார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று அலச ஆரம்பித்தது. உலகின் நம்பர் ஒன் டெக் நிறுவனத்தின் CEO தமிழர் என்பது நமக்குப் பெருமைதானே!

சுந்தர் பிச்சை

CEO-வான பிறகு இன்னும் உயரங்களுக்கு கூகுளை அழைத்துச் சென்றார் சுந்தர் பிச்சை. கூகுளின் முகமாக மாறினார். பாராட்டுகள் என்றாலும் சரி, சர்ச்சைகள் என்றாலும் சரி... முதலில் சுந்தர் பெயர்தான் அடிபட்டது. கடினமான நேரங்களிலும் பொறுமையாகவும் திறம்படவும் செயல்பட்டார். நல்ல தலைவருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். சுந்தரை `டெக் உலகின் தோனி’ என்றே சொல்லலாம். அந்தளவுக்கு ஆள் கூல்..!

இதன் விளைவாகக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இன்னொரு புரொமோஷனும் அவருக்குக் கிடைத்தது. மொத்தமாக ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். இது, மீண்டும் அவரை உலகளாவிய பேசுபொருளாக மாற்றியது.

பிறந்த நாள் வாழ்த்துகள் சுந்தர் பிச்சை!



source https://www.vikatan.com/technology/tech-news/birthday-special-article-on-google-ceo-sundar-pichai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக