Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2020

கொரோனா:`தனி அறை; வீடியோ கால்; ரகசியக் குழு!’ - பிரேசில் அதிபரின் முதல் வாரம்

பிரேசில் கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. அங்கு 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். கிட்டத்தட்ட 70,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இவ்வளவு மோசமாகப் பிரேசில் பாதிப்படையக் காரணம் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவின் அலட்சியம்தான் எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல் இந்தத் கொரோனா தொற்று `சிறிய காய்ச்சல்’ என்று மிகவும் குறைத்து மதிப்பிட்டு பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிபர் பொல்சனாரோவுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

முன்னதாக, தனது ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேக்கரி மற்றும் உணவகங்களில் சென்று உணவருந்தி வந்தார். பேரணிகளின்போது ஆதரவாளர்களுடன் தனிமனித இடைவெளி இன்றி நெருங்கிப் பழகி வந்தார். முகக்கவசம் அணிவதை முற்றிலுமாகத் தவிர்த்து வந்தார். மாகாண ஆளுநர்கள் விதித்த தடைகளையும் கேலிக்குரிய வகையில் பேசி விமர்சித்தார். பொருளாதார தாக்கங்கள் வைரஸைவிட மிகவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் வாதிட்டார். இதனிடையே, தொடர்ந்து வைரஸ் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வந்தார். பின்னர், கடுமையான காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகளால் 65 வயதான பொல்சனாரோ பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து அலுவலக வேலை தொடர்பான பயணங்கள் அனைத்தையும் கைவிட்டு தனது வீட்டில் உள்ள தற்காலிக அலுவலகத்தில் இருந்தபடி வீடியோ வழியாகக் கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். அரசாங்க ஆவணங்களில் கையெழுத்திடுவது தொடர்பாக ஒவ்வொரு நாளும் பொல்சனாரோ, அரசாங்கத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் ஒலிவேராவுடன் வீடியோ வழியாகப் பேசி வருகிறார். டிஜிட்டல் வழியாகவே தனது வேலைகளை பொல்சனாரோ செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி அமைச்சகத்தின் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர்களையும் நேர்காணல் செய்ததாக கடந்த வியாழக்கிழமை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். தற்போது அவரது உடல்நலம் தொடர்பாக ராபர்ட் ஜெஃபர்சன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``அதிபர் பொல்சனாரோ ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

Also Read: கொரோனா பாசிட்டிவ்: பத்திரிகையாளர்கள் முன் மாஸ்கைக் கழட்டி சர்ச்சையில் சிக்கிய பிரேசில் அதிபர்

பொல்சானாரோவுடன் கொரோனா வைரஸால் ஏற்கெனவே பாதிப்படைந்த ஒருசில உதவியாளர்கள் மட்டுமே நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அவர்களின் பெயர்களை வெளியிட அரசு மறுத்துவிட்டது. தனது வீட்டுக்கு முன்பு உள்ள தோட்டத்தில் அதிபர் பொல்சனாரோ தினமும் மதிய வேளையில் சிறிது நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்நேரத்தில் தனது ஆதரவாளர்களை அவர் சந்தித்தார். ஆனால், இனி அவர் சந்திக்கப்போவதில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாள்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை எடுத்துக்கொண்டார். இதனால், எலக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் ரத்த பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டுள்ளன. அதிபருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழு பற்றிய தகவல்களையும் பாதுகாப்பு காரணத்துக்காக வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

அதிபர் பொல்சனாரோவின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம், ``அதிபர் தனது சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலையும் சந்திக்கவில்லை” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தனது குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வருவதால் பொல்சனாரோ தனி அறையில் வசித்து வருகிறார். அவர் மனைவியும் மகள்களும் கொரோனா பரிசோதனை செய்தனர். தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். வியாழக்கிழமை ஃபேஸ்புக் நேரலையிலும் பொல்சனாரோ பேசினார். ``மன்னிக்கவும். உங்களுடன் என்னால் கலந்துரையாட முடியாது. அடுத்த வாரமும் சாத்தியம் இல்லை. ஏனெனில், நான் இன்னும் முழுமையாக தொற்றில் இருந்து குணமடையவில்லை. எனவே, பக்கத்தில் யாரும் நிற்கமாட்டார்கள்” என்றார். நேரலையில் பேசும்போது அவர் முகக்கவசம் அணியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அவருடைய வீட்டு பணியாளர்களும் குடும்பத்தினரும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துள்ளனர். இவ்வாறாக அதிபர் பொல்சனாரோ தனது கடந்த வாரத்தை கொரோனாவுடன் செலவிட்டுள்ளார்.

Also Read: கொரோனா:`1 கோடி பேர் பாதிப்பு; 5 லட்சம் பேர் பலி!’ - திணறும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா



source https://www.vikatan.com/government-and-politics/international/brazil-president-bolsonaros-first-corona-week

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக