கடந்த ஜனவரி மாதம், உலகப் பொருளாதார மன்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு மிகப்பெரிய கைத்தட்டல் கிடைத்தது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, உலகப் பொருளாதார மன்றம் முன்னெடுத்துள்ள ஒரு டிரில்லியன் மர நடும் திட்டத்தில் அமெரிக்காவை அவர் இணைத்தமைக்குத்தான் அந்த பலத்த கைத்தட்டல்.
கடந்த ஆண்டு, சயின்ஸ் என்ற ஆய்விதழில், `மரங்களை அதிகமாக வளர்ப்பதே காலநிலை மாற்றத்திற்கு எதிரான திறம்மிக்கத் தீர்வாக இருக்கும்' என்ற கோணத்தில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியானது. அதுவே, இந்த ஒரு டிரில்லியன் மரங்கள் திட்டத்தைத் தோற்றுவித்தது என்று கூறலாம். இந்தத் திட்டம் வெற்றியடைய இதன் அடிப்படைக் கூற்று உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், அதுதான் இல்லை.
மரங்கள் நடுவது, பூமி சூடாகின்ற வேகத்தை ஓரளவுக்கு மட்டுப்படுத்தும்... அவ்வளவுதான். அதைவிட அதிகமாக, நம்மை, நம்முடைய சந்ததிகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றப் போவது, சந்தைப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக நடக்கும் இயற்கை வளச் சுரண்டலை நிறுத்துவதற்கான முயற்சிதான். அந்த முயற்சியே, சுரண்டலைக் குறைத்து எளிய மக்களின் வாழ்வாதாரத்தை, பல்லுயிரிய வளத்தைப் பாதுகாக்க வழிவகுக்கும். இவை இயற்கையில் ஏற்படுத்துகின்ற சேதங்கள் ஏராளம். அதற்குச் சிறந்த உதாரணம், பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிம எரிபொருள். 2050-ம் ஆண்டுக்குள் கரிம வெளியீட்டைப் பெருமளவு குறைத்தாக வேண்டும். இல்லையேல், விளைவுகள் விபரீதமாக இருக்குமென்று காலநிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால், நாம் இன்றளவும் எரிபொருள் பயன்பாட்டில் பெட்ரோல், டீசலுக்கான சர்வதேசச் சந்தையையே பெருமளவு சார்ந்திருக்கின்றோம்.
அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கவோ, அதற்கு மாற்று தேடவோ உரிய சிறியளவிலான திட்டம்கூட முற்றிலுமாக வெற்றியடைவதில்லை. அதற்குக் காரணம், புதைபடிம எரிபொருள்களுக்கு இருக்கக்கூடிய சர்வதேசச் சந்தை. அந்தச் சந்தை மிகப்பெரியது. அதில் லாபம் பார்க்கக்கூடிய பெருநிறுவனங்கள் அத்தகைய தங்க முட்டையிடும் வாத்தை விடுவதாக இல்லை. அந்த வாத்து, உடல் தேய்ந்து, உருக்குலைந்து, உயிர் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கும் பலவீனமடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும்கூட அவர்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. அதன் உயிரோட்டத்துக்குள் எஞ்சியிருக்கும் மிச்ச சொச்ச தங்க முட்டைகளையே அவர்கள் தேடுவார்கள். இன்றைய கள நிலவரம் இப்படியிருக்க, மரங்களை மட்டுமே நட்டு வளர்த்துக் கொண்டிருந்தால் நிலைமையைச் சீர்செய்துவிட முடியாது. அதனால், கரிம வாயு வெளியீட்டு அளவு குறையப் போவதில்லை, கனிம வளச் சுரண்டல் நிற்கப் போவதில்லை, அதனால் மலைப்பகுதிகள் சந்திக்கின்ற, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் குறையப் போவதில்லை. 16 வயதே நிரம்பிய போராளியான கிரெட்டா தன்பெர்க்கிற்கும் இது புரிந்திருந்தது.
Yes, of course we need to plant as many trees as possible.
— Greta Thunberg (@GretaThunberg) July 5, 2019
Yes, of course we need to keep the existing trees standing and rewild and restore nature.
But there’s absolutely no way around stopping our emissions of greenhouse gases and leaving the fossil fuels in the ground. https://t.co/yzuPM3g6ln
காலநிலை மாற்றத்துக்கான தீர்வு மரம் நடுவதுதான் என்ற கோணத்தில் கவனம் செலுத்துவது, பிரச்னையை வேறு பக்கமாகத் திசை திருப்புவதற்கான வேலைதான். இந்த நிலைமைக்குரிய மூல காரணங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும். உதாரணத்திற்கு, நெதர்லாந்தில் ஷெல் நிறுவனத்திற்கு ஒவ்வொரு லிட்டர் எரிவாயுவிற்கும் ஒரு யூரோ அதிகமாகக் கொடுத்தால், அந்த எரிவாயுவை எரித்து வாகனம் ஓட்டுபவர் வெளியிடும் கரிம வாயுவைக் குறைப்பதற்காக மரம் நடுவதற்கு அது பயன்படுத்தப்படும் என்று ஒரு திட்டம் இருக்கின்றது. அந்தத் திட்டத்தால் எந்தவிதப் பலனும் இருக்கப் போவதில்லை என்பது, அதைச் செயல்படுத்தும் ஷெல் நிறுவனத்திற்கும் தெரியும், அதற்காக ஒரு யூரோ அதிகமாகக் கொடுக்கும் மக்களுக்கும் இந்தத் திட்டத்தை விட்டுவைத்துள்ள அரசுக்கும் தெரியும்.
அதனால் எந்தவிதப் பலனும் இல்லையென்று தெரிந்திருந்தும்கூட, செய்யும் தவறுக்குப் பாவ மன்னிப்பு கேட்டுவிட்டுச் செய்வதைப் போல், ஒரு யூரோவைக் கட்டிவிட்டு, கரிம வாயுவை வெளியிட்டுக் கொள்கின்றனர்.
இந்த விஷயத்தில் மக்களைக் குறைகூறுவதைச் சற்று அதிகப்பிரசங்கித்தனம் என்றுகூடச் சொல்லலாம். ஆம், நாட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்திருந்தால், அவர்கள் தங்களுடைய தேவைக்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டு, தாம் ஏதோ பாவம் செய்வதைப் போல் அதற்குப் பிராயச்சித்தமாக ஒரு யூரோவையும் கொடுத்துவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது. இதுதான் முக்கியப் பிரச்னை. பூமி சூடாகக் காரணம், நம்முடைய வாழ்க்கைமுறை மாறியது, நாம் மாறியது. அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சமூகச் சூழலியல் என்று அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பார்வையைக் கொண்ட திட்டங்களைத் தீட்டுவதன் மூலம்தான், இதற்கான தீர்வைக் கொண்டுவர முடியும்.
ஆம், மரங்கள் கரிம வாயுவைக் கிரகித்துக்கொள்ளும் என்பது உண்மைதான். ஆனால், அப்படி அவை கிரகிக்கின்ற கரிமமும், வேறொரு பகுதியில் நடக்கும் காடழிப்பினால் வெளியேறுகின்ற கரிமத்தோடு சமனாகிவிடுகின்றது. இன்று பூமியில் செயல்படுகின்ற மொத்த தரைவழி, நீர்வழி, வான்வழிப் போக்குவரத்துகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர காடழிப்பு நடவடிக்கைகள், சுரங்க வேலைகள் போன்றவை வெளியிடுகின்ற மொத்தக் கரிம வாயுவையும் சரிக்கட்ட, கட்டுப்படுத்த, இங்கு இப்போது நிகழ்கின்ற பாதிப்புகள் இனி நிகழாமல் தடுக்க, ஒரு டிரில்லியன் மரங்களையல்ல, அமெரிக்காவின் பரப்பளவுக்கு நிகராக அல்லது மொத்த அமெரிக்காவையுமே காடாக மாற்றினாலும்கூட போதாது.
புதைபடிம எரிபொருள் நிறுவனங்களுக்கு உலகளவில் ஓராண்டுக்கு 5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக மானியம் கிடைக்கின்றது.
மரங்களை வளர்த்தால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறிய ஆய்வறிக்கை வெளியான அதே `சயின்ஸ்’ ஆய்விதழில் கடந்த அக்டோபர் மாதம் மற்றுமோர் ஆய்வுக் கட்டுரை வெளியானது. அது, ``உலகளவில் மரங்களை வளர்ப்பது காலநிலை மாற்றத்திற்குத் திறம்மிக்கத் தீர்வாக இருக்கும் என்ற கூற்று அறிவியல்பூர்வமாகச் சரியானதில்லை, அது ஆபத்தான போக்கில் திசை திருப்பும்" என்பதை ஆய்வு முடிவுகளோடு விளக்கியிருந்தது.
காலநிலை அவசரமோ, புவி வெப்பமயமாதலோ, எதுவாக இருப்பினும் அதை, கரிமப் பிரச்னையாகப் பார்க்காமல், கரிம மாசுபாட்டுப் பிரச்னையாகப் பார்க்கவேண்டும். அப்போதுதான், அந்த மாசுபாட்டைக் குறைக்க முயலும். இல்லையேல் ஒருபுறம் மாசு நடந்துகொண்டேயிருக்க, இன்னொரு புறம் இப்படி எதையாவது செய்துகொண்டேயிருப்போம். அதனால், விளையப்போகும் பலன் என்னவோ மிகச் சொற்பமே.
தமிழகத்தையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வோர் ஆண்டும் அரசியல் கட்சிகள் தங்கள் தலைவர்களின் பிறந்தநாள்களுக்கு லட்சக்கணக்கில் மரம் நடுகின்றனர். தமிழக அரசின் மரம் வளர்ப்புத் திட்டத்தின்கீழ் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன. அதுபோக மேலும் பல சிறு குறு கட்சிகள் சில பல லட்சங்களில் மரங்களை அவ்வப்போது நடுகிறார்கள். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேறு மரக்கன்றுகளை நட்டு செல்ஃபி எடுத்துப் போடுங்கள் என்று ஒருமுறை சமூக வலைதள செயல்பாட்டை முன்னெடுத்திருந்தார். இவை மட்டுமின்றி, மாநில அளவிலும் தேசிய அளவிலும் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் என்று பல்வேறு சமூக, சூழலியல் ஆர்வலர்கள் மரம் வளர்ப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக 100 மரக்கன்றுகளை நட்டால் அதில் ஐம்பது முதல் அறுபதுவரைதான் முழுமையாகப் பிழைத்து வளரும். அரசியல் கட்சிகளும் சில நடிகர்களும் இதுவரை நட்ட மரங்களைக் கணக்குப் போட்டு அதில் பாதியைத் தேடிப் பார்த்திருந்தால்கூட இந்நேரம் தமிழகம் முழுவதும் கானகச் சோலைகளாக அல்லவா காட்சியளித்திருக்க வேண்டும். எங்கே சென்றன அந்தக் காடுகள், எங்கே சென்றன அந்த மரங்கள்?
வடிவேலு காமெடியில் வரும் கிணற்றைக் காணோம் என்ற கதையாகத்தான் போய்விடுகிறது இவர்கள் நட்ட மரத்தைக் காணோம் என்ற செய்திகளும். இந்த மரம் நடும் திருவிழாக்களை அரசியல் கட்சிகள் ஒருவித பிரசார யுக்தியாகவும் கார்பரேட் நிறுவனங்கள் தாம் செய்த சூழலியல் பாதிப்புக்குப் பிராயச்சித்தமாகவும்தான் செய்துவருகின்றன. உண்மையில் கரிம வெளியீட்டைக் கட்டுப்படுத்தவோ, காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தவோ வேண்டுமென்றால், நாம் அதற்குரிய ஆணிவேரைத் தேடவேண்டும். அந்த ஆணிவேர், அரசுகளிடமும் பன்னாட்டு நிறுவனங்களிடமும் இருக்கின்றன. மரம் வளர்ப்போம், மாமிச உணவைத் துரப்போம், கரிம வெளியீட்டைக் குறைப்போம் என்றெல்லாம் நம்மைப் பேச வைத்துவிட்டு, பின்னணியில் தொடர்ந்து காலநிலை மாற்றத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் லாபம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
எந்தப் பிரச்னையுமில்லாத, சிரமங்களற்ற, எளிமையான தீர்வையே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், ஒருபுறம் தொடர்ந்து கரிம வாயுவை எரித்துக் கொண்டே, மற்றொருபுறம் மரங்களை வளர்ப்போம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் எவ்விதப் பலனும் கிடைத்துவிடப் போவதில்லை. கரிம வாயுவைக் கட்டுப்படுத்த கரிம மாசுபாட்டைக் குறைப்போம். அதைச் செய்ய நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்போம். அத்தகைய எரிபொருள்களைத் தவிர்த்து இயற்கைசார், தூய்மையான ஆற்றல் பயன்பாட்டைக் கொண்டுவருமாறு அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்போம்.
புதைபடிம எரிபொருள் நிறுவனங்களுக்கு உலகளவில் ஓராண்டுக்கு 5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக மானியம் கிடைக்கின்றது. அதை ஏன், அரசுகள் தூய்மையான ஆற்றல்களுக்கு வழங்குவதில்லை. நம் பூமி சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னைக்கு அரசியல், பொருளாதார ரீதியாக நாம் எடுத்துவைக்க வேண்டிய முதல் படி, புதைபடிம எரிபொருள்களுக்குக் கிடைக்கின்ற மானியங்களைக் குறைத்துவிட்டு, தூய எரிபொருள்களான காற்றாலை, நீர்மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், இயற்கை எரிவாயு போன்றவற்றுக்குக் கொடுக்கவேண்டும். அவை மலிவாக, பாதுகாப்பாக, அனைவருக்குமே கிடைக்கும் விதத்தில் வைக்கவேண்டும். அதற்குரிய வகையில் எரிபொருள் சந்தையை மாற்றியமைக்க வேண்டும்.
அதற்காக மரம் வளர்ப்பதே தவறு என்று சொல்லவில்லை. மூன்றாம் நிலை நடவடிக்கைகளில் ஒன்றுதான் மரம் வளர்ப்பது. அது திட்டத்தின் ஓர் அம்சமாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, அதுவே திட்டமாக இருக்கக்கூடாது. காலநிலை அவசரத்தைக் கட்டுப்படுத்துவது, மனித இனத்தின் இருப்பைக் காப்பாற்றுவது என்று வரும்போது, நம்முடைய முழுக் கவனமும் எங்கு இருக்கவேண்டுமோ, எங்கு பிரச்னையின் வேர் அமைந்துள்ளதோ அங்கு குவிப்போம். நிச்சயமாக அந்த வேர், மரம் வளர்ப்பதில் இல்லை.
source https://www.vikatan.com/government-and-politics/environment/is-merely-planting-trees-will-mitigate-the-effects-of-climate-change
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக