மதுரையில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் ராமகிருஷ்ணன், இவர், கர்ப்பிணி ஒருவரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கே இறக்கிவிட்டுவிட்டு வரும் வழியில் போலீஸார் ஆட்டோவை மறித்து அபராதம் வித்தித்துள்ளனர். அதைக் கண்டித்து அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
Also Read: `12 மணி நேரமாகக் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி!’ - மதுரை ரயில் நிலைய சர்ச்சை
வீடியோவில் அவர் கூறியதாவது, ``ஊரடங்கு நேரத்தில் சவாரி இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல் அனைவருக்கும் தெரியும். காலையில், ஒரு வயதான அம்மா, மருத்துவமனைக்குப் போக வேண்டும் எனக் கேட்டார். அவருடைய மகளா அல்லது மருமகளா எனத் தெரியவில்லை. பிரசவத்துக்குக் கேட்கிறார்கள்… போகாமல் இருக்கக் கூடாது என்பதால், அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, பெரிய ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன்.
கோரிப்பாளையம் சிக்னலில் வண்டியை போலீஸார் மறித்தனர். பிரசவத்துக்காக ஒருவரை மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு வருகிறேன் எனக் கூறினேன். ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை. ஆட்டோ நம்பரைப் பார்த்தார்கள். உடனே, ரூ.500 அபராதம் போட்டார்கள். மேலும், ஏற்கெனவே ஒருமுறை எனக்கு அபராதம் விதித்ததால், அடுத்தமுறை ஊரடங்கை மீறினால், ஆட்டோவை பறிமுதல் செய்வோம் எனக் கூறினர். நான், பிரசவத்துக்கு எப்போதும் காசு வாங்குவதில்லை. சேவை செய்ய நினைத்து அபராதம் கிடைத்தது. ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்பதால்தான் ஆட்டோவை அழைக்கின்றனர். சரியான காரணத்தைக் கூறியும் இப்படி அபராதம் விதித்தால், எப்படி ஆட்டோகாரர்கள் சவாரிக்கு வருவார்கள்” எனக் காட்டமாக வீடியோவில் பேசியிருந்தார்.
இந்த வீடியோ மதுரை மட்டுமல்லாமல், தமிழகம் முழுக்கவே பலராலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதை அறிந்த மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணனை போனில் அழைத்துப் பேசினார். அப்போது, ராமகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்வதாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, காவல்துறையினர், பொதுமக்களிடம் கண்ணியத்துடனும் அன்புடனும் நடந்தகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாகக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
Also Read: மதுரை: `மாலைக்கு 10 ரூபாய் கிடைக்கும்... இப்ப அதுவும் போச்சு’ -கலங்கும் பூ வியாபாரிகள்
source https://www.vikatan.com/news/tamilnadu/the-video-released-by-the-auto-driver-from-madurai-went-viral-on-social-media
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக