மும்பை காட்கோபரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருப்பவர் சந்திரசேகர் தேசாய். இவரது வீடு அருகில் உள்ள தானேயில் இருக்கிறது. கடந்த ஆண்டு சந்திரசேகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் சில நாட்கள் மாநகராட்சி சார்பாக ஏற்பாடு செய்திருந்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். பூரண குணமடைந்து வீட்டிற்கும் திரும்பி விட்டார். ஆனால் அவர் கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாக தானே மாநகராட்சி அதிகாரிகள் அவரது பெயரை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டனர்.
அதோடு விடாமல், அவருக்கு இறப்பு சான்றிதழ் தயாராகிவிட்டது என்றும், உடனே வந்து இறப்பு சான்றிதழை வாங்கிச்செல்லும்படி அவருக்கே போன் செய்து தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரசேகர், `நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார். ஆனால் போன் செய்த ஊழியர் அதனை கேட்பதாக இல்லை. `எங்களது ஆவணங்களில் நீங்கள் இறந்துவிட்டதாகத்தான் இருக்கிறது’ என்று அந்த ஊழியர் தெரிவித்தார்.
உடனே சந்திரசேகர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று, `நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார். அவரிடம் அதிகாரிகள் ஆதார் கார்டு போன்ற விபரங்களை வாங்கிப்பார்த்த பிறகு அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்தனர். கொரோனாவால் இறந்தவர்கள் பட்டியலை தயாரிக்கும் போது குளறுபடி ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தனர். இது குறித்து சந்திரசேகர் கூறுகையில், ``அதிகாரிகள் இது போன்ற ஒரு செய்தியை எனது 80 வயது தாயார் அல்லது எனது மனைவியிடம் தெரிவித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்றார்.
மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சந்தீப் இது குறித்து கூறுகையில், ``வழக்கமாக கொரோனா தொற்று ஏற்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களுக்கு போன் செய்து ஏதாவது அறிகுறி இருக்கிறதா என்றும், குடும்பத்தில் யாராவது கொரோனாவால் இறந்தார்களா என்றும், தொற்று யாருக்காவது இருக்கிறதா என்று கேட்பதுண்டு. சந்திரசேகர் பெயர் இறந்தவர்கள் பட்டியலில் இருந்தது. எனவே தவறுதலாக அவருக்கு போன் செய்துவிட்டார்கள். ஆனால் இறந்தவர்கள் பட்டியலை நாங்கள் தயாரிப்பதில்லை. புனேயில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இனிமேல் முழுமையாக விசாரிக்காமல் யாருக்கும் போன் செய்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/general-news/come-and-get-the-death-certificate-officers-who-phoned-the-mumbai-teacher-who-is-alive
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக