கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. பாதிப்பு குறைந்து வந்தாலும், கோவை தடுப்பூசி பிரச்னை ஓய்ந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதும், கோவை முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது.
Also Read: Covid Questions: முதல் தடுப்பூசி போட்ட 4 நாள்களில் பாசிட்டிவ்; இப்போது 2-ம் தடுப்பூசி போடலாமா?
இதையடுத்து, கோவை புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. தடுப்பூசி விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டன. ஆனாலும், தடுப்பூசி பிரச்னையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதிகாலை 3 மணி முதல் நீண்ட வரிசையில் நின்றால்தான் ஊசி என்கிற நிலவரம் மாவட்டம் முழுவதும் பரவியது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் வந்துவிட்ட நிலையில், பணிக்கு செல்வோர் பலரும் தடுப்பூசி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால், முந்தைய நாள் இரவில் இருந்தே மக்கள் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்குகின்றனர்.
ஆர்.எஸ்.புரம் அம்மன்னியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியில் இருந்தே மக்கள் வரிசையில் காத்திருக்க தொடங்கினர். போலீஸார் வந்து கூட்டத்தை கலைத்து, காலை வரும்படி கூறினர்.
அதேபோல, மேட்டுப்பாளையம், ராக்கிபாளையம் பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதலே தடுப்பூசிக்காக வரிசையில் காத்திருக்க தொடங்கிவிட்டனர். ராக்கிபாளையத்தில் காலை 8.20 மணிக்கு தான் தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்பட்டது. ‘மேட்டுப்பாளையத்தில் பெயரளவுக்குதான் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தைவிட குறைவான மக்கள் தொகையை கொண்ட காரமடைக்கு 1,300 ஊசிகள் வழங்கப்படுகின்றனர். அதேநேரத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையத்துக்கு 200 ஊசிகள் தான் வழங்கப்படுகின்றன’ என வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.
தடுப்பூசிக்காக முந்தைய நாள் இரவு முதலே காத்திருந்து சாலையில் படுத்து தூங்கி, தனி மனித இடைவெளியையும் கடைபிடிக்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகுகின்றனர். இரவு முழுவதும் காத்திருந்து பலருக்கு டோக்கன் கிடைக்காத அவலமும் நடக்கிறது.
நீண்ட நேரம் காத்திருந்து ஊசி போடுவதால் சிலர் மயக்கம், வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். ‘அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் இனியும் அலட்சியமாக இல்லாமல் அனைத்து மக்களுக்கும் எளிதில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது மக்களின் கோரிக்கை.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-covid-vaccine-issue-people-asking-for-more-preparations
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக