Ad

சனி, 6 பிப்ரவரி, 2021

நெல்லை: காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு! - பைக்கில் வந்த இருவரைத் தேடும் போலீஸ்

தென்மாவட்டங்களில் நாட்டு வெடுகுண்டு வீசும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வல்லநாடு மலைப் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியைப் பிடிக்கச் சென்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்த சம்பவம் நடந்தது.

கண்ணபிரானிடம் காவல்துறை விசாரணை

அதனால், வெடிகுண்டு கலாசாரம் பரவி வருவதாகச் சர்ச்சைகள் கிளம்பின. இந்த நிலையில், நெல்லை மாநகர எல்லைக்கு உள்பட்ட தச்சநல்லூர் காவல் நிலைய வாசலில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது பற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர், கண்ணபிரான். தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஸ்டேஷனில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

சில மாதங்களுக்கு முன்பு தளவாய் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் கண்ணபிரான் உள்ளிட்ட சிலர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள கண்ணபிரானும் அவரது கூட்டாளிகளும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்கள்.

கண்ணபிரான் வழக்கம்போல தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடுவதற்காக இன்று காலை 10.30 மணிக்குச் சென்றுள்ளார். அவர் ஸ்டேஷன் உள்ளே இருந்தபோது பைக்கில் வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டேஷனுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

காவல் நிலைய வாசலில் விழுந்த நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியுள்ளது. சத்தம் கேட்டு போலீஸார் வெளியே வந்தபோது மர்ம நபர்கள் இருவரும் பைக்கில் ஏறித் தப்பிச் சென்று விட்டனர். பின்னர் கண்ணபிரான் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். அதற்குள்ளாக அந்த மர்ம நபர்கள் இருவரும் கண்ணபிரான் வீட்டின் அருகே ஒரு நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்றுள்ளனர்.

காவல் நிலய வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு செய்தார்கள்.

தச்சநல்லூர் காவல் நிலையம்

நாட்டு வெடிகுண்டு வீசிய இருவரும் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பைக்கில் செல்லும் காட்சி சிசிடிவி மூலம் காவல்துறையினருக்குக் கிடைத்திருக்கிறது. அதை வைத்து குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், கண்ணபிரானை மிரட்டுவதற்காக நடந்திருக்கக் கூடுமா என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வேறு ஏதாவது உள்நோக்கத்துடன் இந்தச் சம்பவத்தை திட்டமிட்டு யாராவது அரங்கேற்றி இருப்பார்களோ என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/country-bomb-thrown-at-local-police-station-in-nellai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக