குளித்தலை நகராட்சி 8 வது வார்டு அதிமுக வேட்பாளர் வீட்டில் பெண் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்த 340 புடவைகளை தேர்தல் பறக்கும்படை கைப்பற்றிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: `குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் என்னாச்சு?!' -பிரசாரத்தில் உதயநிதியிடம் கேட்கப்பட்ட கேள்வி
வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்டக் கட்சிகள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை செய்து வருகிறது. பிரசாரமும் சூடுப்பிடித்திருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில், பறக்கும்படை அலுவலரான புகழேந்தி என்பவருக்கு தொலைபேசி மூலம் நேற்று ஒரு புகார் வந்துள்ளது. அதில், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 8 -வது வார்டு பகுதியில் அந்த வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் சிவசங்கரி என்பவருக்கு ஆதரவாக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் மூலம் புடவைகள் வழங்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற பறக்கும் படை அலுவலர் புகழேந்தி மற்றும் போலீஸார், அங்குள்ள பொதுமக்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, குளித்தலை பேராளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள வேட்பாளரின் கணவருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்றில் புடவைகள் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த கடைக்குச் சென்ற அதிகாரிகள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 புடவைகளை முதலில் பறிமுதல் செய்து வந்தனர். பின்னர், மீண்டும் அந்த கடைக்கு சென்ற பறக்கும் படை அலுவலர், நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புராம், குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன் ஆகியோர் கடைக்குள் சென்று தீவிர சோதனை செய்தனர்.
அப்போது, அந்த கடைக்குள் மூட்டையில் சேலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைதொடர்ந்து, அனைத்து புடவைகளையும் அவர்கள் பறிமுதல் செய்து, நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சோதனையில் மொத்தம் 340 புடவைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கிய நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் ஒருவர் பெண் வாக்காளர்களை கவர புடவை கொடுத்து சிக்கியிருப்பது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/controversy/candidate-caught-by-flying-squad-while-distributing-saree-to-voters
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக