Ad

வியாழன், 1 ஜூலை, 2021

`கொரோனா உயிரிழப்புகளுக்கு அரசு இழப்பீடு... எந்தளவுக்கு சாத்தியம்?'

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த பாதிப்புகளெல்லாம் ஏதோ ஒரு கட்டத்தில் மீண்டெழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கொரோனாவால் உறவுகளை இழந்தவர்கள்... குறிப்பாக குடும்பத் தலைவர்களை இழந்துள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிலை விவரிக்க முடியாத துயரம்.

பிருந்தா காரத்

ஆகவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல், ரீபாக் கன்சல் ஆகியோரும் இழப்பீடு கோரி பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக நடைபெற்றது. ‘பொருளாதார நெருக்கடி காரணமாக கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது சாத்தியம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தேசிய பேரிடர் நிதியைப் பயன்படுத்தினால், அந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலியாகிவிடும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. பிருந்தா காரத் தரப்பில், ‘சட்டப்பிரிவு 12-ஐ பயன்படுத்தி கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

மோடி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஜூன் 30-ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில், ‘கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சட்டப் பிரிவு 12-ஐ பயன்படுத்தி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கட்டாயமாக இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு வழங்குவது என்பது அரசின் விருப்பப்படியானது அல்ல... சட்டப்படி அது கட்டாயமாகும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதே நேரத்தில், இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், ‘பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆறு வாரங்களுக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் .இழப்பீடு எவ்வளவு என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யலாம். பேரழிவு மேலாண்மை சட்டப்பிரிவு 12-ன்படி இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கடமை. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ் முறையை எளிமையாக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்தனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குது என்பது அரசின் சட்டப்பூர்வமான கடமை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவாகவும் உறுதியாகவும் கூறிவிட்டது. அதையடுத்து, மத்திய அரசு இந்த இழப்பீடு குறித்து ஆலோசிக்கும். தற்போதுவரை, அரசின் புள்ளிவிவரப்படி இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தொடுகிறது. அதே நேரத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு சர்ச்சைகளும் உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

லெனின்

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரான த.லெனினிடம் பேசினோம்.

“பெருந்தொற்று காலத்தில் அந்த நோயால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பல பாதிப்புகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும். குறிப்பாக, பொருளாதார ரீதியான பாதிப்புகள் அதிகம் இருக்கும். மக்கள் நல அரசு என்கிற நம்முடைய அரசு கட்டாயம் அந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குடும்பத் தலைவரையோ, குடும்ப உறவினர் ஒருவரையோ இழந்து நிற்கதியாக இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு என்பது போதாதுதான். இன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது அது ஒரு குறைந்த தொகைதான். ஆனாலும், அது ஒரு குறைந்தபட்ச உதவி என்பதாகப் பார்க்க வேண்டும். அரசு இதை ஒரு செலவாகப் பார்க்காமல், தன் கடமையாகப் பார்க்க வேண்டும்.

தாய் தந்தையர் இருவரையும் கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு உதவுவதாக அரசுகள் அறிவித்துள்ளன. அந்த குழந்தைகளுக்கு மாதா மாதம் உதவுவது என்பது முக்கியம். அத்துடன், அந்த குழந்தையும் எதிர் காலத்துக்கு அது மட்டுமே போதாது. அந்த குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பையும் சிறந்த எதிர் காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்க வேண்டும். நிராதரவாக இருக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அரசு சிந்திக்க வேண்டும். அதை செய்தால்தான், யாரும் நமக்கு இல்லை என்ற எண்ணத்தில் இருக்கும் அந்த குழந்தைகளுக்கு, அரசு நமக்கு துணையாக இருக்கிறது என்கிற நம்பிக்கை வரும்... எதிர் காலம் பற்றிய அச்சம் நீங்கும்.

எரிக்கப்படும் உடல்கள்

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் ஒரு குழப்பம் இருக்கிறது. கொரோனாவால் இறந்தவருக்கு பாசிட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டால் அவர் கொரோனாவால் இறந்தவர் என்று கருதப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒருவர் மரணமடையும்போது நெகடிவ் என்று வந்தால், அவர் கொரோனாவால் இறந்தவராகக் கருதப்படுவதில்லை. ஆனால், இவரும் கொரோனாவால் இறந்தவராகவே கருதப்பட வேண்டும்” என்றார்.

Also Read: மின் வாரியம்: பல்லாயிரம் கோடி சூறையாடல்; ஒரு லட்சம் கோடி கடன்! இந்தநிலைக்கு என்ன காரணம்?

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான குமரகுருவிடம் பேசினோம்.

“கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நிலைப்பாடு. அந்த இழப்பீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட வேண்டும் என்று எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியிருக்கிறார். அதற்கான நிதியின் பெரும் பகுதியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்தான் மாநிலங்களுக்கு வழங்குகிறது. அந்த நிதியை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் மாநில அரசுகளால் உரியவர்களுக்கு வழங்கப்படுகிறது.

குமரகுரு

சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும் என்பதைப் பொருத்தளவில், நியாயமான தொகையாக அது இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் கொரோனாவால் சுமார் 30,000 பேர் இறந்துள்ளார்கள். அதை கணக்கிட்டால் ரூ.120 கோடி வரும். அதை தாராளமாக கொடுக்கலாம்” என்றார் குமரகுரு.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தன் கருத்தை முன்வைத்தது. “அரசின் வரி வருவாய் குறைந்து, மருத்துவச் செலவுகள் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், கொரோனாவால் மரணமடைந்த எல்லோருக்கும் நிவாரணம் வழங்கினால் மற்ற நடவடிக்கைகளுக்கு நிதி இல்லாத சூழல் உருவாகும். எனவே, இந்த கோரிக்கை மாநில அரசுகளின் நிதி நிலைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது. அதனால், லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க இயலாது” என்பதுதான் மத்திய அரசு முன்வைத்த வாதம். அதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசின் கடமை என்று உத்தரவில் கூறியது.

அரசு தன் கடமையை நிறைவேற்றட்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-compensation-to-corona-victims-family-possible

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக