ஜம்மு - காஷ்மீர் என்றதுமே பனிப்போர்வை போர்த்திய பகுதி, கண்ணுக்கு விருந்தளிக்கும் சுற்றுலா தளம், இயற்கை எழில் கொஞ்சும் அழகு கொண்ட பகுதி. இவை அனைத்தையும் தாண்டி ஜம்மு - காஷ்மீர் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது பதற்றம் நிறைந்த சூழல், பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு, போர்க்களம் என்பதுதான். ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370, கடந்த 2019, ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர், இரு தனித் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகள் கணிசமாகக் குறைந்திருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு ட்ரோன்கள் மூலம் ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் உளவுத்துறை அமைப்புகள் ரகசிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் எல்லையிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜம்மு விமான நிலையத்துக்குள் இந்திய விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. இங்குக் கடந்த ஜூன் 27-ம் தேதி அதிகாலை 1.40 மணியளவில் அடையாளம் தெரியாத இரண்டு ட்ரோன்கள் விமானப்படைத் தள பகுதிக்கு வந்தது. முதல் ட்ரோன் விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்ப கட்டடத்தின் மேற்கூரையில் விழுந்து வெடித்தது. சிறிது நேர இடைவெளியில் மற்றொரு ட்ரோனும் கீழே விழுந்து சிதறியது, இந்த தாக்குதலில் இரண்டு இராணுவ வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது.
இந்த ட்ரோன்களில் வீரியம் குறைந்த வெடிபொருட்கள் இருந்ததினால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே வேளையில், ஜி.பி.எஸ் உதவியுடன் அருகில் உள்ள பகுதிகளிலிருந்துதான் எந்த தாக்குதல் நடைபெற்றிருக்கக் கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அங்கிருந்த விமானங்களின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாளிலிருந்து இதுவரை மொத்தம் ஒன்பது முறை ட்ரோன்கள் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், இரண்டு முறை காஷ்மீர் பகுதிகளிலும், ஏழு முறை ஜம்மு பகுதிகளிலும் ட்ரோன்கள் தென்பட்டுள்ளது. தொடர்ந்து ட்ரோன்கள் தென்படுவது அந்த பகுதிகளில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாது ராணுவ பகுதிகள் மற்றும் எல்லைகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகத் தேசியப் பாதுகாப்பு முகமை ரகசிய விசாரணையை வேகப்படுத்தியுள்ளது.
இவ்வகை ட்ரோன்கள் ரிமோட் கொண்டு இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டதால், ஜாமர்கள் கொண்டு ட்ரோன்களை செயலிழக்க வைக்கவும் நடவடிக்கைகளையும் ராணுவம் எடுத்துவருகிறது. அதுமட்டுமில்லாது, இந்த வகை ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்தி வந்ததாகவும், இந்த வகை ட்ரோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், எல்லைகளில் கடத்தல் செயல்பாடுகளுக்கும் ட்ரோன்களை பயன்படுத்தி வந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக ட்ரோன்களுக்கு எதிராகச் செயல்படும் கருவி, ஜம்மு விமான தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி ட்ரோன் வருவதை அலைவரிசைகள் மூலம் கண்டறியும் தன்மை கொண்டது. மேலும் அதிக திறன் கொண்ட ஜாமர்களும் பொருத்தப்பட்டுள்ளது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோவ்ரி மாவட்டத்தில் ட்ரோன்களை பறக்க விடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈராக் போரின் போது அமெரிக்க ராணுவத்தின் மீது தீவிரவாத அமைப்புகள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலைத் தடுக்க அந்த ராணுவம் கடும் சிரமப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தியாவின் மீதும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடைபெறுவது ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/india/counties-drones-attack-in-jammu-kashmir-whats-going-on
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக